No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீதத்தனின் மகளான காந்தருவதத்தை..!!

Feb 20, 2023   Ramya   135    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீதத்தனின் மகளான காந்தருவதத்தை..!!

🌟 என்ன பதுமை? ஏதோ வீட்டிற்கு மருமகளை வரவேற்பது போல அழைத்து வருகின்றாய் இது முறையல்ல என்று சீதத்தன் கூறினான்.

🌟 அதற்கு பதுமையோ, நான் செய்வதில் எந்த தவறும் இல்லையே. நான் மணமக்களை தானே வரவேற்று இருக்கின்றேன். எனக்கு துணை இல்லை என்று நீங்கள் புதிதாக துணையாக இருப்பதற்கு அழைத்து வந்து இருக்கின்றீர்கள். அவர்களையும் நல்ல முறையில் வரவேற்க வேண்டும் அல்லவா! என்ன அவள் என்னைவிட வயதில் குறைந்தவளாகவும் வாலிபம் நிறைந்து, இளமை நிறைந்து இருக்கின்றாள். ஆகவே இனி இவள் எனக்கு தங்கையாக இருப்பாள் என்று கூறினாள்.

🌟 தன்னுடைய கையாலே தனது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. இவள் உனக்கு தங்கையும் அல்ல. நாங்கள் மணமக்களும் கிடையாது. இவள் வித்யாதர நாட்டு அரசனின் மகளான காந்தருவதத்தை. இவள் நம்முடைய மகளாவாள். மருமகள் அல்ல தெளிவாக புரிந்து கொள் என்று கூறினார்.

🌟 என்னது இவள் நமக்கு மகளா? இது என்ன புது உறவாக இருக்கின்றது. அதுவும் ஒரு நாட்டின் மன்னனுடைய மகள் நமக்கு மகளா? நம்பும்படியாக இல்லையே என்று பதுமையும் கூறினாள்.

🌟 நம்பி தான் ஆக வேண்டும். நீ தான் எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாய் அல்லவா! இனிமேல் அவள் பிறந்து வளர்ந்து பெரியவள் ஆவது என்பது ப்ப்பா... அது முடியாத காரியம் ஆகும். ஆகையால் தான் அந்த செயலை தடுப்பதற்காக வித்யாதர நாட்டில் உள்ள ஒரு கடையில் கிடைத்த இவளை நான் இங்கு வாங்கி வந்து இருக்கின்றேன் என்று கூறினான்.


🌟 என்ன விளையாட்டு... கடையில் யாராவது இந்த மாதிரி நங்கைகளை விற்பார்களா? அதுமட்டுமல்லாமல் இவள் இவ்வளவு அழகாக இருக்கின்றாள். என்னை ஏமாற்றாதீர்கள் என்று ஏக்கமாக பேசினாள்.

🌟 அட! உண்மையாக தான் கூறுகின்றேன். இவள் பெயர் காந்தருவதத்தை. இவள் வித்யாதர நாட்டு அரசனான கலுழவேகனின் மகள் ஆவாள். இவளுக்கு ஒரு நல்ல வரனை அமைத்துக் கொடுப்பதற்காக தான் இவளை நமது நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

🌟 அதுமட்டுமல்லாது நான் அவர்களுடைய தூரத்து உறவினன் என்று நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றி சுருக்கமாக தன் மனைவியிடம் எடுத்துக் கூறினான்.

🌟 அதற்கு பின்புதான் பதுமைக்கு உண்மைகள் யாவும் புரிந்தன. கண்டவர் கூறிய பேச்சுக்களை கேட்டு உண்மை நிலையை காணாதபடி என்னுடைய கோபம் என் கண்களை மறைத்து விட்டது. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த பெண்ணை அழைத்து வந்ததில் எனக்கு எந்தவொரு இகழ்ச்சியும் இல்லை. மாறாக புகழ்ச்சி தான் ஏற்படபோகின்றது.

🌟 ஊரில் இருக்ககூடிய அனைவரும் கூட, அரசர்கள் ஒத்துழைப்பு தர, அழகிய மணிமண்டபம் அமைத்து அதில் தண்ணீர் பந்தலை வைப்போம் என்று கூறினாள் பதுமை.

🌟 என்னது தண்ணீர்பந்தலா? தண்ணீர்பந்தல் எதற்காக அமைகின்றாய்? அதற்கு எதற்கு அழகிய மணிமண்டபம் என்று சீறினான் சீதத்தன்.

🌟 இல்லையில்லை தவறுதலாக கூறிவிட்டேன். மணப்பந்தல் வைப்போம். நம்முடைய மகள் சுயம்வரத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடுவோம் என்று கூற வந்தேன் என்று கூறினாள்.

🌟 சரி விரைவில் அமைத்து விடலாம் என்று கூறினான்.

🌟 பதுமையோ தனது கணவரிடம் சுயம்வரம் என்றால் அவளுக்கு பிடித்த மனம் கவர்ந்தவனை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தானே பொருள்.


🌟 ஆமாம் சுயம்வரம் என்றால் அது தான் இதில் உமக்கு என்ன சந்தேகம்?

🌟 இல்லை இல்லை. இவள் மிகவும் கொடுத்து வைத்தவள் தான். இந்த மாதிரி சுயம்வரத்தினை எனது தந்தை அன்றே ஏற்படுத்தியிருந்தால் நல்லதொரு கணவரை நானும் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா! என்று கூறினாள்.

🌟 ஆமாம்! ஆமாம்! உனது தந்தை சுயம்வரம் ஏற்பாடு செய்து, அந்த சுயம்வரத்தில் அரசர்கள் அனைவரும் வரிசையாக நின்று நீ ஏந்தி நிற்கும் மாலைக்கு எவராவது ஒருவர் கழுத்தை நீட்டி இருப்பார்கள். நானும் தப்பித்து இருப்பேன் என்று கூறினார்.

🌟 அப்படி எல்லாம் உங்களை என்னால் விட முடியாது. சுயம்வரத்தில் நான் உங்களை தான் தேர்ந்தெடுத்திருப்பேன் என்று தனது கணவரை இறுக அணைத்துக் கொண்டு அவர் மார்போடு தனது தலையை வைத்து சிரித்த வண்ணமாக பற்றி கொண்டாள்.

🌟 சிறிது நொடிகளுக்கு பின்பு மகளை நம் வீட்டிலேயே தங்க வைத்து விடலாமா? என்று சீதத்தன் ஆலோசனை கேட்டான்.


Share this valuable content with your friends