No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - காந்தருவதத்தையை வரவேற்ற சீதத்தனின் மனைவி..!!

Feb 20, 2023   Ramya   131    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... காந்தருவதத்தையை வரவேற்ற சீதத்தனின் மனைவி..!!

🌟 சீதத்தனை கண்டதும் கலத்தில் இருந்தவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். கையில் வீணையோடு இறங்கிய அழகில் சிறந்த காந்தருவதத்தையை கலைமகளாகவே எண்ண துவங்கினார்கள்.

🌟 இருப்பினும் வயதில் குறைந்தவராக இருப்பதால் பிரம்மனின் மனைவியாக இருக்க முடியாது. அதுமட்டுமல்லாது நான்முகன் உடன் இல்லாததால் இவள் கலைமகளாக இருக்க முடியாது. சாதாரணமான பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணினார்கள்.

🌟 இவ்வளவு பேரழகு நிறைந்த அழகு பதுமையை நாங்கள் இதுவரை கண்டதே இல்லை. ஆனால் இந்த அழகியை பற்றியும், இவள் வீணை வாசிப்பை பற்றியும் சில வதந்திகளை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அவைகள் உண்மை என்பதை இப்போதுதான் உணருகின்றோம் என்று கலத்தில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர். சீதத்தன் ஏதாவது பேசுவான் என்று அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்தனர்.

🌟 ஆனால் சீதத்தன் அவர்களை கண்டதும் வாயடைத்து என்ன பேசுவது? என்று தெரியாமல் உறைந்து நின்று கொண்டிருந்தான்.


🌟 அங்கிருந்தவர்கள் சீதத்தனின் அருகில் சென்று யார் இந்த பேரழகி என்று கேட்டனர்?

🌟 அப்போது தான் சீதத்தன் சுய நினைவிற்கு வந்தான். அங்கே நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன என்பதை அறிந்து கொள்ள முற்பட்டான். தன்னிடம் வந்து பேசியவர்களிடம் கடலில் நம்முடைய கப்பல் முழுகவில்லையா? என்று கேட்டான்.

🌟 பயங்கரமான சூறாவளி காற்றும் அதனால் கட்டுக்கடங்காத மழை பெய்ததும் உண்மைதான். அதன் விளைவாக நாம் அக்கலமானது கட்டுப்பாடு இல்லாமல் ஆட்டம் கண்டது. அதற்குப் பின்பு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. கலம் எப்படி கரை சேர்ந்தது என்பதும் எங்களுக்கு புரியவில்லை. உன்னை பற்றி தான் சிந்தித்துக் கொண்டே இருந்தோம்.

🌟 நல்ல வேளை நீ நன்றாக இருக்கின்றாய் என்று கூறினார்கள். ஆமாம் திக்கு தெரியாத இந்த நீர் நிறைந்த கடல் பகுதியில் தேவதை போன்ற பெண்ணை எப்படி கண்டுபிடித்தாய்? எங்களுக்கும் அதைச் சொல்லித் தருவாயா? என்று கேட்டார்கள்.

🌟 இதைக் கேட்டவுடன் சீதத்தன் நான் எங்கே இந்த தேவதையை கண்டுபிடித்தேன்? அவர்கள் தான் என்னை கண்டுபிடித்தார்கள். கலம் கண்ட ஆட்டத்தில் நான் கடலில் விழுந்தேன். அப்போது கிடைத்த கட்டுமரம் ஒன்றினைப் பற்றி கொண்டு கரையை சேர்ந்தேன்.

🌟 அதன் பின்பு கலுழவேகனின் சேவகனான வித்யாதரன் வித்யாதர நகரத்திற்கு அழைத்து சென்று இந்த வீணையோடு நமது கலத்தில் இருக்கக்கூடிய இந்த அழகு நிறைந்த தேவதையை என்னோடு அனுப்பி வைத்தார்கள் என்று கூறினான்.

🌟 மரக்கலத்திலிருந்த அனைவரும் எழில் மிகுந்த அழகிய தேவதையுடன் இராசமாபுரத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். ஒவ்வொருவரும் அந்த பெண்ணிடம் பேச பலமுறை முயற்சி செய்தார்கள். இருப்பினும் அப்பெண் குறுகிய வார்த்தைகள் மூலமாகவே அனைவரையும் கையாண்டாள்.

🌟 இறுதியாக மரக்கலமானது தன்னுடைய இலக்கை எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல் பாதுகாப்பாக வந்தடைந்தது. அதாவது இராசமாபுரத்தை வந்தடைந்தது. அனைவரும் கலத்தில் இருந்து இறங்கினார்கள். சீதத்தன் கலத்தில் இருந்து இறங்கும் போது அவனை தொடர்ந்து ஒரு அழகிய நங்கை வீணையோடு வந்து இறங்கினாள்.

🌟 இந்த செய்தியானது வனத்தில் தீப்பற்றியது போல சில நொடிகளிலேயே ஊர் முழுவதும் பரவியது. அப்பெண்ணை பார்ப்பதற்கு என்றே பலர் அங்கே கூடினார்கள். சிலரோ வயது முதிர்ந்த கிழவனுக்கு இளம் கன்னியா என்றனர்.

🌟 சிலருக்குக்கோ பொறாமை கிழவனுக்கு எங்கோ மச்சம் இருக்கின்றது என்பது போல கூறி, இவ்வளவு நாள் இவன் சேர்த்து வைத்திருந்த அனைத்து பெருமைகளையும் குறைக்க தொடங்கினார்கள்.

🌟 சீதத்தன் ஒரு அழகிய பெண்ணோடு இராசமாபுரத்திற்கு வந்திருக்கின்றார் என்ற செய்தி பதுமையின் காதினை அடைந்தது. அந்த செய்தியை கேட்டதும் அவள் மிகவும் துடிதுடித்து போனாள். இருப்பினும் தன் கணவர் அப்படிப்பட்டவராக இருக்க மாட்டார். அவரை பற்றி எனக்கு தெரியும் நான் அவரிடம் கேட்டு கொள்கின்றேன் என்று அவளிடம் வந்து கூறிய அனைவருக்கும் பதில் உரை கூறினாள். ஏதேதோ நடக்கும் என்று எதிர்பார்த்த சிலருக்கு அவளுடைய பதிலுரை மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

🌟 வீணையோடு வந்திருந்த அந்த மங்கையை சீதத்தன் தனது இல்லத்திற்கு அழைத்து வந்தான்.

🌟 அப்பொழுது அவன் மனைவியான பதுமை திலகமிட்டு உங்கள் இருவரையும் வரவேற்க வேண்டுமா? என்று வினவினாள்.


🌟 சீதத்தன் தன் மனைவி கோபமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நிகழ்ந்ததை உரைக்க முயலும் போது பதுமை கரங்களில் தட்டேந்தி ஆரத்தியும், கற்பூரமும் காட்டி அவர்களிடத்தில் இருக்கக்கூடிய திருஷ்டிகள் யாவற்றையும் நீக்கிவிட்டு, அழகிய நங்கையிடம் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வாம்மா என்று கூறினாள்.

🌟 நங்கைக்கு இந்த நிகழ்வு எல்லாம் புதுமையாக இருந்தது. ஒரு வேளை இராசமாபுரத்திற்கு புதிதாக வருகின்றவர்களை இவ்விதத்தில் தான் வரவேற்பார்களோ! என்று நினைத்தாள்.


Share this valuable content with your friends