No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீதத்தனை காப்பாற்ற வந்த தேவதூதன்...!!

Feb 17, 2023   Ramya   182    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீதத்தனை காப்பாற்ற வந்த தேவதூதன்...!!

🌟 மாயங்கள் நிறைந்த இந்த மர்ம பூமியில் புதிதான பல விஷயங்களும் இருக்கத்தானே செய்கின்றன. எவ்வளவுதான் பகுத்தறிந்து உணர்ந்தாலும் அறிவுக்கு மிஞ்சிய ஒரு சக்தி இவ்வுலகில் இருகின்றது என்று கூறினால் அது மிகையல்ல. அதை ஏற்றுக்கொள்ள தான் மனம் வருவதில்லை.

🌟 சீதத்தன் எதிர்பார்த்தபடியே மாயம் பல செய்யும் மர்மமான, வித்தியாசமான உடையிலும், விசித்திரமான வாகனத்திலும் வித்யாதர நாட்டை சேர்ந்த ஒரு வாலிபன் அவன் முன் தோன்றினான்.

🌟 அவனைக் கண்டதும் அதுவரையில் அவன் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறியது போல மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். ஐயா எம்மை விட நீர் ரொம்ப வித்தியாசமாக இருக்கின்றீர்களே! நீங்கள் தான் இந்த தீவின் தலைவரா? என்று கேட்டான்.


🌟 நான் இந்தத் தீவை சேர்ந்தவன் அல்ல. யான் விஞ்சையர் நாட்டிலிருந்து வந்திருக்கின்றேன். எமது பெயர் வித்யாதரன் என்று கூறினான்.

🌟 இதைக் கேட்டதும் சீதத்தன் தனக்கு ஆதரவாக ஒருவன் இருக்கின்றான் என்று எண்ணம் அவனுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. அதுமட்டுமின்றி பரந்து விரிந்து இருக்கக்கூடிய நீர் நிரம்பிய இந்த ஆழ்பெருங்கடலில் நீ வந்த கலமும் கவிழ்ந்து விட்டதா? அதனால் தான் என்னை போல் கலங்கி நிற்கின்றாயா? என்று வினவினான்.

🌟 சீதத்தன் கூற்றுகளை கேட்டதும் சிரித்த வண்ணமாக இல்லை.. இல்லை.. என்னுடைய கலம் கவிழ்ந்து போகவில்லை. நிலம் தேடி பொருள் சுமந்து கொண்டு வந்த உன்னுடைய கலமானது கவிழ்ந்து போனதால் உன்னிடத்தில் ஏற்பட்டு இருக்கக்கூடிய துன்பத்தைத் துடைக்க தான் நான் இங்கு வந்திருக்கின்றேன் என்று கூறினான்.

🌟 என்னுடைய கலம் கவிழ்ந்து போனது இவனுக்கு எப்படி தெரியும்? பார்க்கவே வித்தியாசமாக இருக்கின்றான். ஒருவேளை இவன் தான் நம்மை காப்பாற்ற வந்த தேவதூதனோ?

🌟 என் மனைவி மேற்கொண்ட அனைத்து விரதங்களும் பொய்க்காமல் அதற்கான பலன்களை அளிக்க துவங்கிவிட்டதோ? அவள் செய்த நல்வினை தான் இப்பொழுது அவள் மாங்கல்யத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது என்று எண்ணத் துவங்கினான்.

🌟 என்ன சிந்தித்துக் கொண்டு இருக்கின்றாய்? உன்னுடைய மனைவியை மதிக்கின்ற மதிதான் இப்பொழுது உன்னை காத்துக் கொண்டு இருக்கின்றது. உன்னை அறியாமல் ஏதோ சில நன்மைகள் செய்ததன் காரணமாக யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு இப்பொழுது உன்னிடத்தில் வந்து இருக்கிறது அல்லவா! என்று கூறினான் வித்யாதரன்.

🌟 இதைக் கேட்டதும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான் சீதத்தன். தன்னுடைய மனதில் நினைத்ததை எல்லாம் வெளிப்படையாக கூறுகின்றானே! இவன் உண்மையிலேயே தேவதூதனாக தான் இருப்பான் என்று முடிவு செய்தான்.

🌟 இந்த உலகத்தில் பொருள் செல்வம் இல்லாமல் யாராலும் எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட பொருள் செல்வம் ஏதும் இல்லாத என்னை யார் அக்கறையோடு கவனித்துக் கொள்வார்கள்? ஆள் நடமாட்டமே இல்லாத நான்பக்கமும் ஆழி (நீர்) நிறைந்த இந்த தீவில் உன்னைக் கண்டதே என்னுடைய தவப்பயன் என்று எண்ணுகின்றேன் என கூறினான்.

🌟 கவலை கொள்ள வேண்டாம். நீ இழந்த உன்னுடைய பொருட்கள் யாவும் உன்னிடத்திலேயே திரும்ப வரும். உம்மிடத்தில் இருக்கக்கூடிய துன்பங்கள் யாவற்றையும் நீக்குவதற்கான உதவிகளை யானே செய்கின்றேன். இக்கணமே வான்வழியே செல்வோம். என்னுடைய தலைவன் இடத்தில் உன்னை அழைத்துச் சென்று அவரிடத்தில் அறிமுகம் செய்து வைக்கிறேன்.

🌟 அவரிடத்தில் உன்னுடைய துன்ப நிலைகளை எடுத்துக் கூறினால் அவர் உமக்கு நன்மைகளை செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி தருவார். நீ இழந்த உன்னுடைய மரக்கலமும் அதில் இருந்த மானுடர்கள் அனைவரும் உன்னை திரும்ப வந்து அடைவார்கள் என்று கூறினான்.

🌟 இதை கேட்டதும் சீதத்தன் வித்யாதரனை விசித்திரமாக பார்த்தான். எல்லை எதுவென்று தெரியாத ஆழி நிறைந்த கடலில் மூழ்கிய என்னுடைய மரக்கலத்தையும், அதில் இருந்த பொருட்களையும், அதுமட்டுமல்லாது எம்முடன் வந்தவர்களையும் உயிருடன் மீட்டு தருவார்களா? என்று பார்த்தான்.

🌟 சீதத்தன் பார்த்த பார்வையிலேயே அவனுடைய எண்ண அலைகளை புரிந்து கொண்டான் வித்யாதரன். இவரிடத்தில் எடுத்துக் கூறுவதை விட எடுத்துக் காட்டினால் அனைத்தையும் புரிந்து கொள்வார் என்று எண்ணினான்.

🌟 நாம் வான்வழியே செல்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்கின்றேன். உடனே எம்மோடு கிளம்பி வருவாயாக என்று கூறி அவன் வந்த விமானத்தை சீதத்தனிடம் காட்டினான்.


🌟 வான்வழி செல்வதற்கு உண்டான வாகனத்தை பார்த்ததும் சீதத்தன் பிரம்மித்து போனான். ஒருவேளை இவன் சொல்வது போல அனைத்தும் நிகழ்ந்து விடுமோ என்று எண்ணவும் துவங்கினான்.

🌟 வித்யாதரன் பக்கத்தில் ஒரு ஆட்டுக்கிடாய் நின்று கொண்டிருந்தது. அதன் இரு பக்கங்களிலும் இறகுகள் இருந்தன. அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதை திசை திருப்புவதற்கு தேவையான அனைத்துக் கட்டுப்பாடுகளும் வலிமையான புதுவிதமான நாண்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன.

🌟 இதன் மூலமாக தான் நீ இவ்விடத்திற்கு வந்தாயா? என்று கேட்டான் சீதத்தன்.

🌟 இதன் மூலமாக தான் நான் உன்னைக் காண்பதற்கு இவ்விடத்திற்கு வந்தேன். இது ஒரு வான் ஊர்த்தியாகும். விஞ்ஞானம் வளர்ந்து இருக்கக்கூடிய இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும், எவ்விதத்திலும் பறக்க வைக்க முடியும். எங்கள் வித்யாதர உலகத்தில் நீர் காணாத பல புதிய படைப்புகளை படைத்திருக்கின்றோம் என்று கூறினார்.


Share this valuable content with your friends