No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... தளபதிக்கு ஒரு தேர்வு.. இறுதியில் என்ன நடந்தது?

Feb 09, 2023   Rathika   142    விக்ரமாதித்தன் கதைகள் 


அடர்ந்த காட்டின் வழியே வேதாளத்தை தன் முதுகில் தூக்கி வந்து கொண்டிருந்த விக்கிரமாதித்தனிடம், அந்த வேதாளம் கூறிய கதை இது...

'ஜனக்பூர்' என்ற நாட்டில் 'தர்மசீலன்' என்ற மன்னன் இருந்தார். தனது படைக்கு புதிய தளபதியை நியமிப்பதற்காக போர்கலைகளில் தேர்ச்சிபெற்ற வீரர்களுக்கு போட்டி வைத்து, அதில் யார் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக வெற்றி பெறுகிறார்களோ அவர்களை படை தளபதியாக நியமிப்பதாக அறிவித்து, போட்டிகளை துவக்கினார். போட்டிகளில் பல வீரர்களும் போட்டியிட்டனர். இறுதியில் அனைத்திலும் பரசுராமன், ரூபசேனன் என்ற இரு வீரர்கள் வெற்றி பெற்றனர். இப்போது மன்னன் இந்த இருவரில் யாரை தளபதியாக நியமிக்கலாம் என்று சற்று யோசித்து, பின்பு தாம் அந்த இரு வீரர்களிடம் மூன்று கேள்விகள் கேட்க போவதாகவும், அதற்கு யார் சரியான விடையளிக்கிறாரோ, அவரை தான் தளபதியாக நியமிக்கப் போவதாகவும் கூறினார்.

அதன்படி அந்த இருவரிடமும் ஒரு 'தெருவில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்'? என்ற முதல் கேள்வியை மன்னன் கேட்டார்.

அப்போது ரூபசேனன் 'பொது இடத்தில் சண்டையிடுவது தவறு, எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து, சிறையிலடைத்து பின்பு அது குறித்து விசாரிப்பேன்' என்றான்...

பரசுராமனோ 'முதலில் சண்டையிடும் அவர்கள் இருவரையும் விளக்கி, அவர்கள் சண்டையிடுவதற்கான காரணத்தை அறிந்து, யார் மீது தவறு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்' என்றான்.

இப்போது அம்மன்னன் 'நாட்டில் மன்னனுக்கு எதிராக சிலர் சதி செய்வதாக இருந்தால், உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்?' என்ற இரண்டாவது கேள்வியை கேட்டார்.

அப்போது ரூபசேனன் 'தான் சிறப்பான ஒற்றர்களின் மூலம் அவர்களை ஒற்றறிந்து கைது செய்து விசாரிப்பேன்' என்றான்.

பரசுராமனோ 'ஒரு நாட்டில் அம்மன்னருக்கு எதிராக யாரும் தகுந்த காரணமின்றி சதி புரியமாட்டார்கள். முதலில் அதற்கான காரணத்தையறிந்து பிறகு அவர்கள் குற்றம் புரிந்தார்களா, இல்லையா என்பதை அறிந்து அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்' என்றான்.

'மன்னனுடன் நீ காட்டிற்கு செல்லும் போது, திடீரென்று ஒரு சிங்கம் அம்மன்னனின் மீது பாய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வாய்?' என மூன்றாவது கேள்வியை மன்னன் கேட்டார்.

அப்போது ரூபசேனன் 'என் உயிரைக் கொடுத்தாவது மன்னனின் உயிரை காப்பாற்றுவேன்' என்று கூறினான்.

பரசுராமன் 'தான் மன்னனுடன் செல்லும் போது சிங்கம் அவரை தாக்குவதற்கான சூழ்நிலையே ஏற்பட்டிருக்காது' என்றான்.


இருவரின் பதில்களையும் ஏற்றுக்கொண்டு ரூபசேனனை புதிய படை தளபதியாக மன்னன் தர்மசீலன் அறிவித்தார்.

கதையின் மையக்கருத்து:

'விக்ரமாதித்தா அறிவாற்றலில் சிறந்தவனாக இருக்கும் பரசுராமனை விடுத்து, ரூபசேனனை புதிய படை தளபதியாக மன்னன் தர்மசீலன் ஏன் தேர்ந்தெடுத்தார்? எனக் கேட்டது வேதாளம்.

அதற்கு விக்கிரமாதித்தன் 'அறிவாற்றலில் பரசுராமன் நிச்சயம் ரூபசேனனை விட உயர்ந்தவன் தான். ஆனால் தர்மசீலன் தேர்ந்தெடுக்கும் படை தளபதி பதவிக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் மனதிடம் தான் தேவை. அது ரூபசேனனிடம் தான் இருந்தது. மேலும் பரசுராமன் போன்ற சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் அறிவாற்றல் கொண்டவர்கள், மன்னனின் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து செயலாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் எதிர்காலத்தில் அம்மன்னனுக்கு ஆபத்தானவர்களாகவும் மாறக்கூடும். எனவே மன்னரின் கட்டளைகளுக்கு மட்டும் கீழ்ப்படியும் ரூபசேனனை, படைத்தளபதியாக தர்மசீலன் தேர்ந்தெடுத்தது சரியானதே' என்றான். இப்பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.


Share this valuable content with your friends