No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீதத்தன் என்ற வணிகனின் நிலை...!!

Feb 09, 2023   Rathika   227    சீவக சிந்தாமணி 


சீதத்தன் என்ற வணிகனின் நிலை...

🌟 எதிர்பாராத ஒரு சமயத்தில் அவன் ஈட்டிய பொருள் செல்வங்கள் அனைத்தும் அவனை விட்டு நொடியில் அகன்று சென்றன. அருள் இல்லை என்றால் அவ்வுலகில் இடமில்லை. ஆனால் செல்வம் இல்லை என்றால் இவ்வுலகில் இடமில்லை என்பது போல அதுவரை பலரும் அறிந்த ஒரு வணிகர் தாழ் நிலையை அடைந்து விட்டார் என்ற செய்தி பலரிடத்தில் பரவத் தொடங்கியது.

🌟 சீதத்தனை நம்பி இருந்த பலரும் அவருடைய இந்த தாழ் நிலையை எண்ணி கவலை கொண்டார்கள். அந்த செய்தியின் தாக்கத்தினால் அவருடைய மனமானது சிறுக சிறுக உடையத் துவங்கியது.

🌟 இந்த நிலை தொடர்ந்து சென்றால் ஒரு நாள் நம்முடைய நிலை பகலில் இருக்கும் நிலவைப் போல மாறி விடுமோ என்று எண்ணத் தொடங்கினான். இதை மென்மேலும் தொடர விடக்கூடாது என்பதை முடிவுசெய்து தன்னுடைய வணிகத்தை திரைக்கடல் ஓடி திரவியம் தேடுவதில் நாட்டம் கொள்ள துவங்கினான்.

🌟 நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த மண்ணில் விளையும் பல பொருட்கள் பல தீவுகளிலும், நாடுகளிலும் கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கின்றதே அதை வைத்து நாம் நம்முடைய வணிகத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.


🌟 அதன் விளைவாக கடல் கடந்து சென்று பல புதிய தீவுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு இராசமாபுரத்தில் விளையும் விளைபொருட்களில் சிறந்ததாகவும், குறைந்த விலையில் தமக்கு கிடைக்கும் வகையிலும், அதை விற்கும் பொழுது பெரும் லாபம் அடைய வேண்டுமென்ற கண்ணோட்டத்தோடு பல தேடல்களுக்கு பின்பு சில குறிப்பிட்ட விளைபொருட்களை மட்டும் தன்னுடைய மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

🌟 அவனோடு படகோட்டிகளும், தொழில் செய்ய விரும்பியவர்களும், பல தேசங்களுக்கும், தீவுகளுக்கும் செல்ல ஆசைப் படக்கூடியவர்களும், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என சிலர் சென்று கொண்டிருந்தனர். முயற்சி கொண்டவன் முன்னேற்றம் அடைவான் என்பது போல, துவக்கத்தில் ஏளனமாக பேசியவர்கள் கூட அவர் அடைந்த லாபத்தை கண்டு பொறாமை கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர் இழந்த பொருளை விட பல மடங்கான பொருட்களையும், செல்வத்தையும் ஈட்டிக்கொண்டார்.

🌟 சீதத்தனுடைய மனைவி அழகும், எழிலும் நிறைந்த பேரழகு உடைய பதுமையாவாள். பல மடங்கு செல்வ வளங்களை கொடுத்த இறைவன் அவர்களுக்கு ஒரு வரத்தை மட்டும் கொடுக்கத் தவறினான். அதுதான் மகப்பேறு என்ற பெரும் வரமாகும்.

🌟 அவர்கள் இருவருக்கும் வாரிசு இல்லையே என்பது மிகுந்த குறையாக அவர்களை வாட்டி வதைத்தது. தனக்கு கிடைத்து இருக்கக்கூடிய இந்த செல்வச்சேர்க்கை நிலையையும், அனுபவிக்க வாரிசு இல்லையே என்ற எண்ணம் சீதத்தனை மிகுந்த துன்பத்தில் ஆழ்த்தியது.

🌟 அவனுடைய மனதில் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த துன்ப நிலையை போக்கி கொள்வதற்காக அவ்வப்போது வெளியூரில் சென்று மன நிறைவையும், மகிழ்ச்சியான தருணங்களையும் ஏற்படுத்திக் கொள்வான். வெளியூர்களுக்கு சென்று விட்டு வரும் பொழுது தனக்கு படகு ஓட்டுவதற்கு வேண்டிய ஆட்களையும் தன்னுடன் பயணம் செய்வதற்கு விருப்பமுள்ள உறவினர்களையும் அழைத்து வருவது அவனுடைய பழக்கமாக இருந்து வந்தது.

🌟 தன்னுடைய கணவர் இவ்விதமாக பல தீவுகளுக்கு கடல் வழியாக வாணிபம் செய்வது சீதத்தனுடைய மனைவிக்கு விருப்பம் இல்லாததால் அவருடைய உறவினர்களிடம் கூறி தன்னுடைய கணவனுக்கு நல்லுரை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினாள்.

🌟 உறவினர்கள் பலர் இருக்கும் செல்வமே அதிகமாக இருக்கும் பொழுது எதற்காக கடலுக்கு சென்று உனது உடல் ஆரோக்கியத்தை குறைத்துக் கொள்கின்றாய். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து அல்லவா! என்று கூறினார்கள்.

🌟 ஆனால் அதற்கு சீதத்தனும் அவர்கள் கூறும் கூற்றுகளுக்கெல்லாம் பதில் கூற்று கூறத் துவங்கினான். ஒருவனிடத்தில் ஊக்கம் இருந்தால் மட்டுமே அவனால் புதியதை உருவாக்கவும், ஆக்கமும் செய்ய முடியும்.

🌟 பிறக்கின்ற அனைவருக்கும் என்றோ ஒருநாள் மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். ஆறிலும் சாவு தான், நூறிலும் சாவு தான். மரணம் என்பது கடல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்பதில்லை. இங்கு நிலத்தில் இருக்கின்றவர்களுக்கும் எப்பொழுது, எப்படி வேண்டுமானாலும் மரணம் நேரிடலாம் என்று கூறினான்.

🌟 அது மட்டுமல்லாமல் தனக்கு எதிராக பேசியவர்களையே தனது வாய் ஜாலத்தின் மூலமாக வெற்றி கொண்டு அவர்களையும் தன்னுடன் கடற்பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு ஊக்குவித்தான்.

🌟 சீதத்தன் கூறிய கூற்றுகளில் இருந்த உண்மையும், புதிய பயணம், புதிய நாடு முதலியவற்றை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் பலர் இடத்தில் தோன்ற அவரவர்கள் தமது குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு புதுமையான பயணம் காண்பதற்கு அவரோடு விருப்பம் கொண்டனர்.

🌟 வணிகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தன்னுடைய கப்பலில் ஏற்றிக்கொண்டு சங்குகள் நிறைந்த, நிலமகள் மறைந்த, நீர்மகள் தெரிந்த எண்ணற்ற அலைகள் தோன்றிடும், எங்கும் பரந்து விரிந்திருக்கும் எல்லைகளற்ற கடலில் நீண்ட நெடும் பயணமாக சென்று கொண்டிருந்தனர்.

🌟 பயணங்களின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்பத்தையும், அனுபவித்து தங்களுடைய பயணத்தை புதிய அனுபவமாக ரசித்து மேற்கொண்டனர். இறுதியாக வணிகத்திற்கு ஏற்ற ஒரு புது தீவினை அடைந்தனர்.


Share this valuable content with your friends