No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனைவிட்டு குரு பிரிந்து செல்லுதல்...!!

Feb 03, 2023   Rathika   178    சீவக சிந்தாமணி 


சீவகன் தன் கடமை அறிதல்...

🌟 சீவகனின் ஆசிரியரான அச்சணந்தி இவ்விதம் உரைக்க தொடங்கினார். வெள்ளிமலை என்னும் பகுதியில் வாரணவாசி என்னும் ஊருக்கு அரசனாக இருந்தவன் நான். மக்களுக்கும், புதல்வர்களுக்கும் தேவையான அனைத்து செயல்களையும் செய்து முடித்த பின்பும், ஏனோ என் மனதில் இனம் புரியாத சில கவலைகள் உண்டாகின.

🌟 என் வாழ்க்கையில் இன்னும் நான் சில செயல்களை செய்ய வேண்டும் என்பது போல என்னுடைய மனமானது என்னிடம் கூறியது. அதற்கு மேல் என்னால் அவ்விடத்தில் இருந்து என்னுடைய பணிகளை செவ்வனே செய்து வர முடியவில்லை.

🌟 ஒவ்வொரு நிமிடமும் என் மனமானது இவ்விடம் உனக்கில்லை என்பது போலவே கூறிக் கொண்டே இருந்தது. அதற்கு மேலும் என்னால் அரச பொறுப்பை சரிவர செய்ய இயலவில்லை. எனவே சுபம் நிறைந்த ஒரு நல்ல நாளில் என்னுடைய புதல்வனுக்கு அனைத்து அரச உரிமைகளையும் கொடுத்து விட்டு தவம் செய்வதற்காக தென்புறம் நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

🌟 அந்த நீண்ட நெடும் பயணத்தில் யானைத்தீ எனும் நோயினால் பல இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்தேன். பயணங்களில் பல ஊர்களில் பலவிதமான மருந்துகளை அருந்தியும் அந்த நோயிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.

🌟 ஒருநாள் தீரா பசியுடன் இராமபுரத்திற்கு வந்த பொழுது உன் அன்னையின் கையால் உணவு உண்டு, உன்னை கண்ட அந்த நொடியில் நீண்ட காலமாக என்னை துன்புறுத்தி வந்த யானைத்தீ என்னும் நோயிலிருந்து விடுபட்டேன்.

🌟 அந்த நொடியில் என் மனம் அடைந்த நிம்மதி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது. அந்த நிம்மதியை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. அப்பொழுதுதான் என் மனம் கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்தது.

🌟 எனக்கான பணிகள் இன்னும் காத்திருக்கின்றது என்பதை அந்தத் தருணத்தில் நான் உணர்ந்து கொண்டேன். உன்னை கண்டதும் குழப்பம் நிறைந்த என்னுடய மனமானது கலங்கம் இல்லாத குளம் போன்ற அமைதி கொண்டது.

🌟 அப்போது தான் என்னுடைய வாழ்வின் மீதி கடமை என்பது நீதான் என்பதை அறிந்து கொண்டேன். அதனால் எனது பயணத்தை மேற்கொள்ளாமல் இவ்வூரிலேயே தங்கினேன். இங்கு தங்கி இருந்த காலத்தில் சில செய்திகளையும் அறிந்து கொண்டேன். என்னுடைய இலக்கு சரிதான் என்பதை புரிந்து கொண்டு காலம் வரும் வரை காத்திருந்தேன் என்றார்.

🌟 அதை கேட்டு கொண்டிருந்த சீவகன் நீங்கள் அறிந்து கொண்ட சேதி என்ன குருவே? என்று வினவினான்.

🌟 நான் இங்கு வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் இந்த ஊரில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த மாற்றங்களுக்கு காரணம் யார்? என்பதையும், இதை மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர் யார்? என்பதையும் அறிந்து கொண்டேன். பின்பு ஒரு நாள் உன்னுடைய தந்தை உமக்கு படைக்கலப் பயிற்சியையும், போர் பயிற்சியையும், அரசியல் சார்ந்த நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்கும் வகையில் ஆசிரியரைத் தேடி கொண்டு இருக்கின்றார் என்பதையும் புரிந்துகொண்டேன்.

🌟 என்னிடத்தில் ஏற்பட்ட மெய் துன்பங்களை நீக்கிய உமது குடும்பத்திற்கு நான் ஏதேனும் கைமாறு செய்யவேண்டும் அல்லவா! அதற்காகத்தான் யான் அறிந்த அனைத்து கலைகளையும் உமக்கு கற்றுக் கொடுத்து இருக்கின்றேன் என்று கூறினார்.

🌟 உமது மனதில் இருக்கக்கூடிய வேகம் என்பது எமக்கு புரிகின்றது. ஆனால் இப்பொழுது அவசரம் கொள்ளாதே! ஏனென்றால் இந்த நிலையில், இந்த நொடியில் நீ கந்துக்கடன் என்பவனின் மகன் மட்டுமே.

🌟 பிறப்பால் நீ அரசனுடைய மகனாக இருந்தாலும் அதற்கு வேண்டிய சிறப்புகள் யாவும் உன்னிடத்தில் இல்லை. அதற்கு வேண்டிய தகுதிகளை நீ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உமது தகுதியை மேம்படுத்த அரச மகளிரை மணந்து அவர்களுடைய படைகளை கொண்டு உமது நாட்டிற்கும், உமது குடும்பத்திற்கும் கேடு விளைவித்த அந்த நம்பிக்கை துரோகியை நீ எதிர்க்க வேண்டும்.

🌟 தனி மரம் என்றும் தோப்பாகாது என்பதை நினைவில் கொள். ஆகவே படையில்லாமல் அவனை எதிர்ப்பதை மரணம் அடைவதற்கு சமமாகும். ஆகவே காலம், இடம், துணை வலிமை ஆகிய மூன்றும் உமக்கு அமைகின்ற பொழுது அதை அறிந்து அவனை எதிர்த்து வெற்றி கொள்வாயாக என்று அறிவுரை கூறினார்.

சீவகனைவிட்டு குரு பிரிந்து செல்லுதல்...

🌟 குருவின் ஆலோசனைகளை கேட்ட சீவகனும் இதுவே சரியான வழியாகும் என்பதையும் புரிந்து கொண்டான். தமக்கு வழிகாட்டிய குருவை பணிந்து வணங்கி நான் மேற்கொள்ள போகின்ற இந்த புதிய பயணத்தில் தாங்களும் என்னுடன் இருக்க வேண்டும் என்று வேண்டினான்.

🌟 ஆனால் குருவோ, தனது மாணவனான சீவகனிடம் என்னுடைய பிறவிக்குண்டான அனைத்து கடமைகளும் இனிதே நிறைவுற்றது. இனியும் நான் இவ்வூரில் இருப்பதற்கான அவசியம் என்பது கிடையாது..


🌟 ஆகவே நான் மேற்கொண்ட எனது பயணத்தை முடித்துக் கொள்வதற்கான காலமும் ஏற்பட்டுவிட்டது. இனியும் இவ்விடத்தில் நான் இருக்கப்போவதில்லை. நான் விட்ட என்னுடைய தவப் பணியை மேற்கொள்ள போகின்றேன் என்று கூறினார்.

🌟 இதைக்கேட்டு சீவகன் மிகுந்த கவலை அடைந்தான். குருநாதரே! என்னுடைய வாழ்க்கையில் இலக்கு என்பது இல்லாத வரையில் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். ஆனால் எனக்கு இதுதான் இலக்கு என்று ஆனவுடன் என்னை தனியே விட்டு செல்வது தர்மமா? என்று வினவினான்.

🌟 சீவகன் கூறியதை கேட்ட குருநாதரோ, புன்னகைத்த வண்ணமாக நீர் எங்கே தனித்து விடப்பட்டு இருக்கின்றாய். உன்னுடனே நான் இருக்கின்றேன். கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாகும் என்பதை புரிந்து இருக்கின்றாயா?

🌟 உமக்கு யான் ஏட்டு சுரக்காய் மட்டும் சொல்லித்தரவில்லை. வாழ்க்கைக் கல்வியும், நடைமுறை வாழ்க்கையும், ஆராய்ச்சி சிந்தனையும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்து கொள்ளக்கூடிய பக்குவத்தையும், அதற்குண்டான சாணக்கிய அறிவையும், எவ்வளவு பெரிய எதிரிகள் வந்தாலும் எதிர்த்துப் போராடக்கூடிய போர் திறனையும், படை திறமையையும் உமக்கு யாம் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.

🌟 இவ்விதமாக உமக்குள் அனைத்தும் இருக்கும் பொழுது நீ எங்கே தனித்து இருக்கின்றாய்? அதுமட்டுமல்லாமல் எங்கிருந்தாலும் என்னுடைய பரிபூர்ணமான முழு ஆசீர்வாதமும் உனக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

🌟 எதிலும் திருப்தி அடையாத சீவகன் தன்னுடைய குருநாதரை தன்னிடமே இருக்க பல வகைகளில் முயன்றும் குருநாதரின் மன உறுதிக்கு முன்னால் சீவகனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

🌟 குருநாதர் தனது மாணவர்களுக்கு அனைத்து ஆசீர்வாதங்களையும் அளித்து விட்டு தவம் செய்வதற்காக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். அவர் மனம் கூறியது போலவே அவருடைய வாழ்க்கையில் அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு திருப்தியுடன் மேற்கொண்ட தவத்தின் பயனாக வீடு பேற்றையும் அடைந்தார்.


Share this valuable content with your friends