No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: சிவபெருமான் அத்திரீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலித்தல் !! பாகம் - 86

Sep 04, 2018   Ananthi   471    சிவபுராணம் 

அத்திரி முனிவர் சங்கடங்களையும், சகலபாவங்களையும் களைந்து மக்களை நல்வழிப்படுத்தவும் எங்கள் மீது கொண்ட கருணையால் தோன்றிய தாங்கள் இந்த ஆசிரமத்திலேயே எழுந்தருளி தங்களை நாடி வரும் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என சிவபெருமானிடம் பிரார்த்தித்தார்.

அத்திரி முனிவரின் பிரார்த்தனைக்கு மனமிரங்கி அனுசுயா தேவி கேட்ட வரத்திற்காகவும், அவர்களின் ஆசிரமத்தில், அத்திரீஸ்வரராக எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்க தொடங்கினார். எம்பெருமானும், கங்கா தேவியும் அத்திரீஸ்வரர் ஆசிரமத்தில் இருக்க தொடங்கியவுடன் வனத்தில் இருந்து வந்த வறட்சியாவும் நீங்க தொடங்கின.

வெளியிடங்களில் இருந்து தவம் செய்யவும், முக்தி அடையவும் அனைவரும் அத்திரீஸ்வரர் எழுந்தருளியுள்ள காமதம் என்ற வனத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் சிவபெருமானை பலவாறாக துதித்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். அவர்களின் பக்தியால் மகிழ்ந்த எம்பெருமான் அவர்களுக்கு வேண்டியவற்றை அருளி சுபிட்சத்தை அளித்து வருகின்றார்.

முனிவர்களின் அகந்தையை நீக்கிய சிவபெருமான் முனிவர்கள் பலரும் இணைந்து தவம் இயற்றி பல வரங்களை பெற்றாலும் அவர்கள் அனைவரும் வரம் அளித்தவருக்கு இணையாக இயலுமா? எதுவும் அளவுடன் இருப்பது நன்று. அது அமிர்தமானாலும் சரி.

காலங்கள் யாவும் பயணிக்கத் தொடங்கின. பல வனங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருப்பினும் தேவதாரு வனம் என அழைக்கப்பட்ட தாருகா வனம் இயற்கையுடன் கூடிய பல எழில்களை தன்னகத்தே கொண்ட வனமாகும். பல வகையான கனிகள், மலர்கள் என யாவும் பூத்துக்குலுங்கும் தேவலோகத்திற்கு இணையான அனைத்து வசதிகளும், தேவைகளும் நிறைந்த வனம்.

அந்த வனத்தில் முனிவர்களும், அவர்களுடைய பத்தினிகளும் தவம் இயற்றி யாகம் வளர்த்து வாழ்ந்து வந்தனர். காலங்கள் நகர முனிவர்களுக்கு ஒரு அகங்காரம் கொண்ட எண்ணங்கள் தோன்ற தொடங்கின. அதாவது, யாகங்களே அனைத்து பலன்களையும் அளிக்கக்கூடியது என்றால் அந்த யாகத்தை உருவாக்கி வளர்ப்பவர்கள் முனிவர்களாகிய தாங்கள் தான் இந்த பிரபஞ்சத்தில் மிகுந்த சக்தி உடையவர்கள் என்றும், தங்களை விட யாவரும் இல்லை, ஏன் ஆண்டவன் என்பவரும் இல்லை என்ற எண்ணம் தோன்றி இறை வழிபாட்டினை மறந்தனர்.

முனிவர்களின் பத்தினிகள் கற்பில் தங்களை விட சிறந்த மங்கைகள் எவரும் இல்லை என்ற இருமாப்பு கொண்டனர். முனிவர்களின் எண்ணங்களுக்கு உகந்தாற்போல் ஆணவமும், செருக்கும் கொண்டு பதிவிரதத்தால் உயர்ந்த பலன்களையும், பாக்கியங்களையும் அடைந்த நாங்கள் ஏன்? இறைவனை வணங்க வேண்டும் என எண்ணி இறைவனை வழிபடுவதை தவிர்த்தார்கள்.

காலம் என்பது மிகவும் உன்னதமானதாகும். ஏனெனில், இவர்கள் கொண்ட ஆணவத்தை அடக்கி இவர்களை நல்வழிப்படுத்த காலத்தை தன்னகத்தே கொண்ட காலனான சிவபெருமான் எதுவும் இல்லாதது போன்று வேடம் தரித்து கையில் திருவோடு ஏந்தி திகம்பரனாக தாருகா வனத்தில் மனதை ஆட்கொள்ளும் வகையிலான பாடல்களை பாடிக்கொண்டே உடுக்கையை அடித்துக்கொண்டு முனிவர்களின் இல்லங்களுக்கு சென்று யாசிக்க தொடங்கினார்.

யாரோ ஒருவர் பிச்சை கேட்பதாக எண்ணி அவருக்கு பொருள் அளிக்க வந்த முனிவர்களின் பத்தினிகள் திகைத்து நின்றனர். அதுவரை கற்புக்கரசிகளாக விளங்கிய பத்தினிகள் சிவபெருமானின் சுந்தர வடிவத்தை கண்டதும் அவர்களின் தர்ம நெறிகளை மறந்தனர். அவர்களின் மனதில் ஆசையும், கள்ளமும் நுழைந்தன.

எம்பெருமானை கண்ட முனி பத்தினிகள் அனைவரும் அவருடைய பாடல்களினால் தங்களின் சுயநினைவை இழந்து அவர் செல்லும் பாதையை நோக்கி அவருடன் பயணிக்கத் தொடங்கினார்கள். எம்பெருமானும் அந்த வனத்தில் உள்ள அனைத்து முனிவர்களின் வீடுகளுக்கும் சென்று யாசகம் கேட்டு அனைத்து முனி பத்தினிகளின் மனதில் மோகம் கொள்ளச் செய்து அவர்கள் அனைவரையும் தன்னை பின் தொடரச் செய்தார்.

முனி பத்தினிகள் அனைவரும் யாசகம் கேட்டு பரந்த தேசங்களில் சுற்றித்திரிந்த பரதேசி வேடத்தில் வந்த எம்பெருமானை அணுகி தங்களின் மனதிற்கு பிடித்த பாடலைப் பாடும்படி கேட்டு அவரை சுற்றிக் கொண்டே இருந்தனர்.

பூவில் உள்ள தேனை எடுப்பதற்காக சுற்றித் திரியும் தேனீக்களை போல முனி பத்தினிகள் அனைவரும் சிவபெருமானை விட்டு பிரியாமல் அவரை சுற்றிக் கொண்டே இருந்தார்கள்.


Share this valuable content with your friends