No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? தவறாமல் இதை செய்யுங்கள்!!

Aug 24, 2018   Ananthi   613    ஆன்மிகம் 

இன்று வரலட்சுமி விரதம். லட்சுமி என்ற பெண் தெய்வத்தை பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும் ஒரு தினம் தான் வரலட்சுமி விரதம். இளம் பெண்களுக்கு மாங்கல்ய வரம் தரும் வரலட்சுமி விரதமும் இன்று.

வரலட்சுமி விரத பூஜையை இன்று காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். அவ்வாறும் செய்யலாம்.


பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :

மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்து விளக்கு, நோன்பு கயிறு மற்றும் நிவேதனப் பொருட்களான பொங்கல், பாயசம் மற்றும் உங்களால் முடிந்த உணவுகள். மேலும் நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்.

பூஜை செய்யும் முறை :

விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன் பிறகு வரலட்சுமி பூஜையை செய்ய வேண்டும்.

ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும்.

மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம்(தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.

மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.

இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.

பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



Share this valuable content with your friends