No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - துறவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சீவகன்..!!

Apr 20, 2023   Ramya   200    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... துறவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சீவகன்..!!

🌟 நாம் வாழும் பொழுது என்னென்ன வினைகளை ஏற்படுத்துகின்றோமோ, அந்தந்த வினைகளுக்கு ஏற்ப தான் மறுவாழ்விற்கான வினைகள் அனைத்தும் நடைபெறும். மிக பெரிய இந்த உலகத்தில் பிறந்திருக்கக்கூடிய அனைவருக்குமே அவர்கள் செய்கின்ற தீவினைக்கு ஏற்ப நரகத்தில் தண்டனைகள் காத்து கொண்டு தான் இருக்கின்றன.

🌟 அதாவது தன்னுடைய தேவைகளுக்காக பிற உயிர்களை துன்புறுத்துபவர்களை முள் படுக்கையில் படுக்க வைத்து தீ மூட்டி, வாயில் உருகும் செப்பு பானத்தை ஊற்றுவார்கள். அதுமட்டுமல்லாது இலவ மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள் என்றார் அந்த துறவி.

🌟 ஒருவேளை நான் மனிதனாக பிறக்காமல் விலங்காக பிறந்திருந்தால் என்ன நிகழும்? என்று கேட்டான் சீவகன்.

🌟 இந்த உலகத்தில் நீங்கள் எந்தவொரு உயிரினமாக பிறந்திருந்தாலும் தவறிழைக்கும் பொழுது அந்த தவறினால் ஏற்பட்ட வினைகளுக்கு ஏற்ப நரகத்தில் தண்டனைகள் காத்து கொண்டு தான் இருக்கின்றன என்றார் அந்த துறவி.

🌟 ஒருவேளை நான் பெண்ணாக பிறந்திருந்தால்? என்ன நிகழும்? என்று கேட்டான் சீவகன்.

🌟 ஏன் பெண்கள் மட்டும் தீவினை செய்ய மாட்டார்களா? போர்க்களத்தில் இறப்பது ஆண்களாக இருந்தாலும், அவர்களை அந்த நிலைக்கு தூண்டுவது யார் என்று பார்த்தால்? பெண் தானே! காட்டில் வேடன் சென்று வேட்டையாடி வந்தாலும் அதை சமைப்பது பெண்கள் தானே! எனவே அவர்களுக்கும் துன்பங்கள் நிறைந்த பல நரகங்கள் காத்து கொண்டு தான் இருக்கின்றன என்றார் அந்த துறவி.

🌟 உடனே சீவகன், அப்படியென்றால் இந்த உலகத்தில் எந்த பிறப்பாகவும் பிறக்கக்கூடாதா? என்று கேட்டான்.

🌟 அதற்கு அந்த துறவி, இந்த உலகில் யாவும் நிலையற்றது ஒன்றை தவிர. அது தான் பிறவாமை. பிறக்கின்ற அனைவரும் பிறவாமை நிலையை அடைவதற்கு என்னென்ன செயல்களை செய்ய வேண்டுமோ, அதை செய்தால் பிறவாமை நிலையை அடைய முடியும். ஆனால் அற்ப சுகங்களுக்காக எதை செய்யக்கூடாதோ அதை செய்து பிறவிகளை அதிகப்படுத்தி கொள்கின்றார்கள். இப்பொழுது கூட நீங்கள் அரசனாக இருப்பதற்கு உங்களுடைய முன் ஜென்ம வினை தான் காரணம் என்றார்.

🌟 என்னது! என்னுடைய முன் ஜென்ம வினையா? அப்படியானால் முன் ஜென்மத்தில் நான் என்னவாக பிறந்திருப்பேன்? என்ன தவறு செய்ததால் இந்த ஜென்மத்தில் இப்படி பல இன்னல்களை அனுபவித்து கொண்டு, எதிலும் திருப்தி இல்லாமல் இருக்கின்றேன்? என்று கேட்டான் சீவகன்.


🌟 இந்த உலகத்தில் காரணம் இல்லாமல் எதுவும் நிகழவில்லை. இந்த பிறவியில், இந்த பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று நீங்களே எழுதி கொண்டீர்கள். அதாவது முன் ஜென்மத்தில் நீங்கள் பூமிமாதிலகம் என்ற நகரத்தினை ஆட்சி செய்து வந்த பவணமாதேவன் என்ற அரசனுக்கு மகனாக பிறந்திருந்தீர்கள். அப்பொழுது உங்களுடைய பெயர் அசோதரன் என்பதாகும்.

🌟 அரச குடும்பத்தில் பிறந்ததால் என்னவோ நல்ல கல்வியும், ஒழுக்கத்துடனும் பிறர் மாதர்களை நோக்காமல் உங்கள் மனைவியுடன் மட்டும் நன்றாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தீர்கள் என்று அந்த துறவி கூறி கொண்டிருக்க, உடனே சீவகன், அப்படி நன்றாக வாழ்ந்திருந்தும் இப்பிறவியில் இவ்வளவு இன்னல்களை நான் அனுபவித்தேன் ஏன்? என்று கேட்டான்.

🌟 எதிலும் அவசரம் இல்லாமல் பொறுமையுடன் செயல்பட்டால் தானே நன்மை பயக்கும். அதே போல் எதையும் முழுமையாக கேட்டால் தானே பலன்கள் என்ன? என்று தெரியும். நான் கூறியது ஆரம்பம் மட்டுமே! முழுவதையும் கேட்ட பின்பு முடிவினை நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்றார் அந்த துறவி.

🌟 இடையூறுக்கு மன்னிக்கவும்! நீங்கள் முழுவதையும் கூறுங்கள் என்றான் சீவகன்.


Share this valuable content with your friends