No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனிடம் தனது கஷ்டத்தை வெளிப்படுத்திய விசையை..!!

Apr 18, 2023   Ramya   118    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனிடம் தனது கஷ்டத்தை வெளிப்படுத்திய விசையை..!!

🌟 அம்மா! ஒரு மூலஸ்தானத்தை பார்த்து விட்டீர்கள் இன்னொரு மூலஸ்தானத்தை நீங்கள் பார்க்க வேண்டாமா? வாருங்கள் அதையும் பார்ப்போம்! என்று அழைத்து சென்றான் சீவகன்.

🌟 விசையை மற்றொரு மூலஸ்தானத்தை பார்த்ததும், அவருடைய மனதில் அதுவரை அடக்கி வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் எரிமலையில் இருந்து எப்படி எரிக்குழம்புகள் வெளிப்படுமோ? அதுபோல வெளிப்பட துவங்கின.

🌟 அதாவது, முழு மாத கர்ப்பிணியாக இருந்த பொழுது கட்டியங்காரனின் படைகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிய மயிற்பொறியானது அந்த இடத்தில் இருந்தது.

🌟 இப்பொழுது சொல்லுங்கள் நாம் எங்கு நிற்கின்றோம்? என்று வினவினான் சீவகன்.


🌟 எனக்கு புரிந்து விட்டது சீவகா! நாம் எங்கு வந்திருக்கின்றோம் என்று. இந்த இடத்தில் தானே நீ பிறந்தாய்! முன்பு இந்த இடம் சுடுகாடாக இருந்தது. நான் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்திருந்த சில விஷயங்களை நான் சொல்வதற்கு முன்னாலேயே அதை நீ செய்து முடித்து விட்டாய்! இனிமேல் எனக்கென்று என்ன இருக்கிறது! என்று கூறினார் விசையை.

🌟 இதில் என்ன அம்மா இருக்கின்றது? உங்களுக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியாதா! என்றான் சீவகன்.

🌟 அவ்விடத்திலிருந்த சுநந்தை, இவர்கள் இருவரும் எண்ணத்தால் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டார். மேலும் இவ்விடத்தில் இருந்து தான் தன்னுடைய கணவர் சீவகனை கண்டெடுத்துள்ளார் என்பதையும் புரிந்து கொண்டார்.

🌟 அப்பொழுது விசையை சீவகனை பார்த்து, எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அதை நிறைவேற்றுவாயா? என்று கேட்டார்.

🌟 என்னது வேண்டுகோளா! ஏன் என்னிடத்தில் இப்படி கேட்கின்றீர்கள்? கட்டளையிடுங்கள்! அதை நான் செய்து முடிக்கின்றேன்! என்றான் சீவகன்.

🌟 உடனே விசையை, என்னுடைய பிறப்பு ஒரு பாவப்பட்ட பிறப்பாகும். ஏனென்றால் என் மீது கொண்ட ஆசையால் தான் உனது தந்தை தன்னுடைய நாட்டை இழந்ததோடு மட்டுமல்லாமல், அவர் உயிரையும் இழக்க நேரிட்டது. அவரை போன்று நீயும் நாட்டு மக்களின் நலனை கவனிக்காமல் இருந்து விடாதே!

🌟 நான் மீண்டும் துறவறம் செல்ல வேண்டும். நான் செல்வதற்கான அனுமதியை எனக்கு நீ அளிக்க வேண்டும். மேலும் நீயும், இந்த நாடும் சுபிட்சமாக இருக்க, நான் எப்பொழுதும் இறைவனை பிரார்த்தித்து கொண்டே இருப்பேன் என்று கூறினார்.

🌟 இதை சற்றும் எதிர்பார்க்காத சீவகன் அந்த இடத்திலேயே இடி விழுந்த மரம் போல அனைத்தையும் ஒரு நொடியில் இழந்தவனாக கலங்கி நின்றான். பின், நான் பிறந்தது முதல் என் அருகாமையில் நீங்கள் இருந்ததே இல்லை. இப்பொழுது தான் என் அருகிலேயே வந்திருக்கின்றீர்கள். என்னுடன் இருந்த சில நாட்களும் போரிலேயே முடிந்தது. இனி நான் உங்களுடனே இருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்கின்றேன். நீங்களோ என்னை விட்டு தனித்து செல்ல விருப்பப்படுகின்றீர்களே. ஏன்? இப்பொழுது மீண்டும் துறவறம் மேற்கொள்கின்றீர்கள். உங்களுடைய முடிவினை மறுபரிசீலனை செய்கிறீர்களா? என்று கேட்டான்.


Share this valuable content with your friends