No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - இரத்த பூமியாக காணப்பட்ட இராசமாபுரம்..!!

Apr 11, 2023   Ramya   182    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... இரத்த பூமியாக காணப்பட்ட இராசமாபுரம்..!!

🌟 யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல சீவகனின் யானை படையை சேர்ந்தவர்களும் எதிரியின் யானை படை வீரர்களை வெற்றி கொள்ள துவங்கினார்கள். சிறிது நேரத்திலேயே அந்த இடம் இரத்த பூமியாக காணப்பட்டது.

🌟 அங்கு புத்திசேனனின் படைகளோ அஸ்தினாபுரத்து படைகளை ஒன்றும் இல்லாத வகையில் நிலைகுலைய வைத்தது. அதாவது போர்க்களத்தில் யாருடைய வாள் அஸ்தினாபுரத்தின் மன்னருடைய தலையை வெட்டியது என்பது கூட தெரியாமல் இறந்து போனான்.

🌟 நபுலனும், விபுலனும் மகத நாட்டு படைகளை புறமுதுகு காட்டி ஓடும் வகையில் அவர்களை வெற்றி கொண்டார்கள். சீதத்தன் கலிங்க நாட்டு மன்னரை தன்னுடைய வாளினால் நெற்றியை பிளந்து கொன்றான்.

🌟 இவர்கள் இங்கே வெற்றி கொள்ள, கேமமாபுரத்து படைகளுக்கும், மதனனின் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் மதனனின் கை ஓங்கி நின்றது. மதனனை போர்க்களத்தில் தேடி கொண்டிருந்த விசயன், அவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனிடம் போர் புரிவதற்காக தன்னுடைய யானையை வேகமாக ஓட்டி கொண்டு வந்தான். வரும் வழியில் தன்னை தாக்க வந்த அனைவரையும் பூவுலகத்திற்கு அனுப்பி வைத்தான்.

🌟 தன்னுடைய யானையின் மீது அமர்ந்து கொண்டு திடீரென்று சங்கை எடுத்து ஊத, மதனன் ஒரு வினாடியில் திடுக்கிட்டு திரும்பினான். பின் அம்புகளை எடுத்து விசயனை நோக்கி எய்தான்.

🌟 விசயன், மதனன் எய்த அம்புகளை சாதுரியமாக தடுத்ததோடு மட்டுமல்லாமல், மதனனை குறி வைக்காமல் அவனுடைய யானையின் தும்பிக்கையை குறி வைத்து தன் வாளை வீச, யானையின் தும்பிக்கையானது இரண்டாக பிளவுற்று யானை கீழே விழுந்து தனது உயிரினை இழந்தது.

🌟 தன்னுடைய யானையை கொன்ற விசயனை கொல்ல எண்ணிய மதனன், விசயனின் யானையுடைய தும்பிக்கையை வெட்டுவதற்கு முயற்சித்தான். மதனனின் எண்ணத்தை புரிந்து கொண்ட விசயன் தன்னுடைய யானையை திசை திருப்பி அவனுடைய குறியில் இருந்து காப்பாற்றினான்.

🌟 அதே நேரத்தில் தன்னிடத்தில் இருந்த மற்றொரு வாளினை மதனனின் நெஞ்சில் மிகுந்த வேகத்துடன் பாய்ச்சினான். சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலினால் நிலை தடுமாறிய மதனன் அந்த இடத்திலேயே தன்னுடைய உயிரை நீத்தான்.

🌟 எப்பிழைகளையும் இழைக்காத தன்னுடைய குருவை சிறைபிடித்த மதனனை கொன்ற பிறகு தான் விசயனுக்கு இருந்த நீண்ட நாள் கவலைகள் விலகியது. பின் மதனின் உடலில் இருக்கக்கூடிய வாளை உருவ இறங்கிய பொழுது திடீரென்று அவனை நோக்கி நிறைய அம்புகள் வேகமாக வர துவங்கின.


🌟 அம்பின் குறியிலிருந்து தப்பித்த விசயன், அம்பு வரும் திசையை நோக்கி பார்த்தான். தொலைவில் அவனை நோக்கி ஒருவர் தேரில் வேகமாக வந்து கொண்டிருப்பதை பார்த்தான். உடனே அருகில் இருந்த வேலினை எடுத்து தேரின் சக்கரத்தை நோக்கி வீச, தேரானது தடம் புரண்டு கவிழ்ந்தது.

🌟 தேரில் இருந்தவன் விழுந்த வேகத்தில் எழுந்து சென்று மதனன் இறந்திருப்பதை பார்த்தான். பின் மிகுந்த கோபத்தோடும், ஆவேசத்தோடும் அண்ணா! உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை உன்னுடனேயே அனுப்பி வைக்கின்றேன்! என்று கூறினான். பின் விசயனை நோக்கி அம்புகளை எய்தான் மன்மதன் (மதனனின் சகோதரன்).

🌟 வந்திருப்பவன் மதனனின் சகோதரனான மன்மதன் என்பதை புரிந்து கொண்ட விசயன், மன்மதன் எய்த அம்புகளை தன்னுடைய வாளினால் தடுத்து கொண்டிருந்தான். அப்பொழுது மன்மதன் தன்னுடைய வாளால் விசயனை மிகுந்த ஆவேசத்தோடு தாக்கினான்.

🌟 மன்மதன் பல்வேறு விதத்தில் தாக்கி தன்னை நிலைகுலைய செய்தாலும், அதை எதிர்த்து பதில் தாக்குதல் செய்தான் விசயன். ஒரு கட்டத்தில் விசயனின் வாள் கீழே விழ, நிலை தடுமாறினான். அதை கண்ட மன்மதன், எனது அண்ணனின் இறப்பிற்கு காரணமான உன்னை என்ன செய்கின்றேன் பார்! என்று கூறி கொண்டே விசயனை மிகுந்த வேகத்தோடு நெருங்க அப்பொழுது யாரும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது.

🌟 அதாவது, விசயனின் யானை மன்மதனை தனது தும்பிக்கையால் தூக்கி தந்தத்தின் மேலே போட்டு நன்கு அழுத்தி அதே இடத்தில் அவனை கொன்றது. தனது யானையின் உதவியால் தான் சிறு பொழுதில் உயிர்பிழைத்திருக்கின்றோம் என்று எண்ணி பெருமூச்சு விட்டான் விசயன்.

🌟 அங்கிருந்து சற்று தூரம் தள்ளி இருந்த கோவிந்தன், வயதானாலும் தன்னுடைய வீரத்தில் எந்தவிதமான குறைவும் இல்லாமல் போர்க்களத்தில் இளம் வீரனை போல செயல்பட்டு, மராட்டிய நாட்டு மன்னனை தன்னுடைய யானையினாலே இடித்து கொன்றார்.

🌟 இங்கு இவர்கள் அனைவரும் போரிட்டு கொண்டிருக்க, உலோக பாலன் காம்பிலி நாட்டு மன்னருடைய பிடியில் மாட்டி கொண்டான். எங்கே என்னுடன் வந்த பல்லவ படைகள்? நான் மட்டும் இங்கே தனியே வந்து மாட்டி கொண்டேனா? என்று அதிர்ச்சியானான்.

🌟 உடனே காம்பிலி நாட்டு மன்னன், உலோக பாலனை பார்த்து சிரித்து கொண்டே ஒரு மன்னனுக்கு வேகம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு தான் விவேகமும் முக்கியம். நீ சிறியவனாக இருப்பதினால் சூழ்ச்சியை அறிந்து கொள்ள முடியாமல், என்னுடைய கையில் அகப்பட்டு இப்பொழுது இறக்க போகின்றாயே! என்று கூறி தன்னுடைய வேலை எடுத்து உலோக பாலன் மீது வீசினான்.


Share this valuable content with your friends