No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கட்டியங்காரனுக்கு எதிரான போருக்கு.. திட்டம் தீட்டிய சீவகன்..!!

Apr 11, 2023   Ramya   173    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கட்டியங்காரனுக்கு எதிரான போருக்கு.. திட்டம் தீட்டிய சீவகன்..!!

🌟 சீவகனும், விசயனும் பேசி கொண்டே கோவிந்தனுடைய படை வீட்டிற்குள் நுழைந்தார்கள். இங்கு முக்கியமான தளபதிகளும், சீவகனுடைய நண்பர்களும் மற்றும் நட்பு நாடுகளின் தளபதிகளும் ஒன்றாக கூடியிருந்ததை கண்ட சீவகன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

🌟 அப்பொழுது அங்கிருந்த கோவிந்தனின் சிறந்த படை தளபதிகளில் ஒருவரான சிங்கநாதன் போர் செய்வதற்கான வியூகங்களை நாம் முதலில் கலந்தாலோசிக்க வேண்டும் என்றான். (இந்த சிங்கநாதன் யாரென்றால், கோவிந்தன் கட்டியங்காரனுடன் நட்புறவு கொண்டபோது கோவிந்தன் இடத்தில் கோபம் கொண்டு அவரின் படைகளில் இருந்து விலகி சென்றவன். பின் கோவிந்தன் சூழ்நிலையின் காரணமாக தான் கட்டியங்காரனுடன் நட்பு கொண்டிருந்தார் என்பதை புரிந்து கொண்டதும், தனது தவறை மன்னரிடம் வெளிப்படுத்தி அவரிடம் மீண்டும் இணைந்து கொண்டான்).

🌟 சிங்கநாதன் மீண்டும் தனது படையில் இணைந்ததை எண்ணி மகிழ்ச்சியில் இருந்த கோவிந்தன் சிங்கநாதனை பார்த்து, உனக்கு இணையாக வீரம் கொண்டிருக்கும் பூரணசேனன் (கட்டியங்காரனின் படைத்தளபதி) தான் உனக்கு ஏற்றவன் என்று கூறினார்.

🌟 அதற்கு சிங்கநாதன் புன்னகைத்த வண்ணமாக பூரணசேனனை வென்றுவிட்டு உங்களிடம் வருகின்றேன் என்று கூறினார்.


🌟 பின் கோவிந்தன் அரசரான உலோகபாலனை பார்த்து, நீங்கள் காம்பிலி நாட்டு மன்னரையும், அவருடைய படைகளையும் கவனித்து கொள்ளுங்கள் என்றார்.

🌟 இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த நபுலனும், விபுலனும் நாங்கள் மகத நாட்டு படைகளை கவனித்து கொள்கிறோம் என்று கூறினார்கள்.

🌟 நீங்கள் கேட்டாலும், கேட்கவில்லை என்றாலும் மகத நாட்டு படை உங்களுக்கு தான் என்று சிரித்து கொண்டே கூறினான் சீவகன்.

🌟 அப்பொழுது விசயன் வேகமாக எழுந்து, எனது குருவை சிறைப்பிடித்த மதனன் எனக்கு வேண்டும். அவனுடைய தலை அவன் உடலில் இருந்து நீங்கினால் மட்டுமே என் மனதில் ஏற்பட்டிருக்கக்கூடிய கோபம் தணியும் என்றான். அவனுடைய கூற்றை கேட்ட சீவகன் சரி என்று ஒப்பு கொண்டான்.

🌟 பின் புத்திசேனனை பார்த்து, அஸ்தினாபுரத்து மன்னரையும், அவருடைய படைகளையும் நீயே பார்த்து கொள் என்றான் சீவகன்.

🌟 உடனே பதுமுகன் கோபமாக, அனைவரும் ஆளுக்கு ஒரு படையாக பிரித்து கொண்டால் எனக்கு யார் இருக்கின்றார்? நான் யாருடன் சென்று சண்டையிடுவது? என்று கேட்டான்.

🌟 எதிரி நாட்டில் படைகளா இல்லை. நாங்கள் கூறியவர்களை தவிர மீதி இருப்பவர்கள் அனைவரும் உமக்கு தானே. ஒருவனாக நின்று அவ்வளவு பேரையும் சமாளிக்கக்கூடிய வல்லமையும், திறமையும் உன்னிடத்தில் தானே இருக்கின்றது என்றான் சீவகன். உடனே பதுமுகன், இது தான் எனக்கு வேண்டும் என்று கூறினான்.

🌟 எப்பொழுதும் போல ஆதவன் மங்களகரமாக வெளிப்பட, ஏமாங்கத நாட்டின் எல்லையில் போருக்கு உண்டான சங்குகள் ஒலிக்க, இருபடைகளும் தங்களுக்கான இடத்தில் வந்து நின்றது. அதை பார்ப்பதற்கு ஏதோ இரண்டு பெரிய மலைகள் நகர்ந்து வருவது போல இருந்தன.


🌟 அமைதியாக இருந்த அந்த பிரதேசம் சிறு நொடிகளில் ஒரு மாபெரும் இரைச்சலுடன் காணப்பட துவங்கியது. வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

🌟 சீவகன் படையில் இருந்த காலாட்படை வீரர்கள் அனைவரும் தங்களிடத்தில் இருந்த கேடயங்களையும், ஈட்டிகளையும் சரியான முறையில் பயன்படுத்தி கட்டியங்காரனின் காலாட்படை வீரர்களின் எண்ணிக்கைகளை குறைக்க தொடங்கினார்கள்.

🌟 ஒவ்வொரு வீரனும் கட்டியங்காரன் படையில் இருக்கக்கூடிய நான்கு அல்லது ஐந்து வீரர்களை கொல்லும் வலிமையுடன் இருந்தார்கள். நேரம் அதிகரிக்க அதிகரிக்க கட்டியங்காரனின் காலாட்படை வீரர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியது.

🌟 மேலும் சீவகனின் குதிரை படையில் இருந்த வீரர்கள், எதிரி படையில் இருக்கக்கூடிய குதிரை வீரர்களை வெற்றி கொள்ள துவங்கினார்கள்.


Share this valuable content with your friends