No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மன்னரை அழிக்க சூழ்ச்சி செய்த கட்டியங்காரன்..!!

Apr 10, 2023   Ramya   269    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மன்னரை அழிக்க சூழ்ச்சி செய்த கட்டியங்காரன்..!!

🌟 சீவகன் வெற்றி பெற்றதை பொறுத்து கொள்ள முடியாத கட்டியங்காரன் உடனே படை வீரர்களை அனுப்பி அவனை கைது செய்யுமாறு கூறினான். அப்பொழுது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு அங்கு நிகழ்ந்தது. அதாவது சச்சந்த மன்னருடைய மனைவியான விசையை அரங்கில் தோன்றினார். அவரை கண்ட மக்களுக்கும், கட்டியங்காரனுக்கும் ஒரே வியப்பாக இருந்தது.


🌟 பின் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை பற்றி கூறினார். அது என்னவென்றால், இதுவரை அவர்களுக்கு நடந்த சதிகளையும், சீவகன் யார்? என்பதை பற்றியும் தெளிவாக கூறினார்.

🌟 இதை சற்றும் எதிர்பாராத கட்டியங்காரன், மைதானத்தில் கையில் வில்லுடன் நின்று கொண்டிருந்த சீவகனை பார்த்தான். அப்பொழுது அவனுக்கு போர்க்களத்தில் இறுதியாக தன்னிடம் போரிட்ட சச்சந்தனை போலவே இருந்தது. அத்தருணத்தில் தான் சகுனங்கள் தனக்கான அழிவை ஏற்கனவே கூறிவிட்டதை தெளிவாக உணர்ந்தான்.

🌟 சீவகனை பிடிக்க சென்ற படை வீரர்கள் அனைவரையும் அங்கிருந்த மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தினார்கள். அதுமட்டுமல்லாது அவ்விடத்தில் ஒரு பெரும் புரட்சியும் ஏற்பட துவங்கியது.

🌟 இதுவரை தங்களை துன்பத்தில் ஆழ்த்திய மன்னனை பழி தீர்த்து கொள்ள தகுந்த தலைவனை எதிர்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு, உத்வேகத்தை வெளிப்படுத்த இந்த தருணம் சாதகமாக அமைந்தது.

🌟 கட்டியங்காரனின் அருகில் நின்று கொண்டிருந்த கோவிந்தன், இப்பொழுது அவன் யார் என்று உனக்கு தெரிகிறதா? அவன் பக்கம் யார் இருக்கின்றார்கள் என்று புரிகிறதா? மக்களை மிஞ்சிய எந்தவொரு அரசனும் ஆள முடியாது என்பதை புரிந்து கொள் என்றார்.

🌟 உடனே அமர்ந்திருந்த கட்டியங்காரன் எழுந்து நின்று கோவிந்தனிடம், உன்னுடைய சூழ்ச்சியினால் மட்டுமே அவன் என்னுடைய நாட்டிற்குள் வந்திருக்கின்றான். இந்நாட்டை நான் ஆண்டு கொண்டிருப்பது சாதாரண காரியம் அல்ல. என்னுடைய போர் திறமையாலும், படை பலத்தாலும் தான் ஆண்டு கொண்டிருக்கின்றேன். உன்னுடைய மாமனிடம் சென்று கேட்டுப்பார் என்னுடைய போர் திறமையை பற்றி அவனுக்கு தெரியும். என்னிடம் போரிட்டு தோற்று இந்த மண்ணுலகை விட்டே சென்று விட்டான். நீயும் என்னுடைய போர் திறமையை புரிந்து கொள்வாய் விரைவில் என்றான்.

🌟 அதற்கு கோவிந்தன், மக்களின் ஆதரவு இல்லாத எந்தவொரு அரசனும் நீண்ட நாட்களாக ஆட்சி புரிந்ததாக வரலாறு இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. அணையும் விளக்கு பிரகாசமாக எரிவது போல, அழிவின் விளிம்பில் இருக்கும் நீயும் இப்படி தான் கூறுவாய் என்பதை நான் அறிவேன்.

🌟 ஆகையால் தான் சூழ்ச்சியால் வென்ற உன்னை, தர்மத்தால் வெல்ல வேண்டும் என்று எண்ணி, உனது நட்பு நாடுகளையும் இங்கு வர வைத்திருக்கிறேன். இவர்கள் அனைவரையும் கொண்டு உன்னால் இந்த போரில் வெற்றி கொள்ள முடியுமா? என்பதை இன்னும் சில நாட்களில் பார்ப்போம். மேலும் வந்திருப்பவன் ஒருவன் அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள் என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து சென்றார்.

🌟 பின் திடீரென்று மைதானத்தில் போருக்கு உண்டான சங்கு ஊதப்பட்டது. அங்கிருந்த அரசர்கள் அனைவரும் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றார்கள். சுயநலமில்லா நல் உள்ளம் கொண்ட மக்கள் அனைவரும் சீவகன் பக்கம் செல்ல, நயவஞ்சக குணம் கொண்ட மக்கள் கட்டியங்காரனின் பக்கம் சென்றனர். போட்டி நிகழ்ந்த மைதானம் இப்பொழுது போர் நிகழும் மைதானமாகி விட்டது.

🌟 போர்க்களத்தில் அமைக்கப்பட்ட கூடாரம் ஒன்றில் தங்கியிருந்த விசையையிடம் சீவகன் சென்று, திடீரென்று அனைவரின் முன்னிலையிலும் தோன்றி விட்டீர்களே! இதை பற்றி ஏன் என்னிடம் நீங்கள் முன்பே கூறவில்லை? என்று கேட்டான்.

🌟 அதற்கு விசையை, விஷத்தை விஷத்தால் தான் அழிக்க வேண்டும். அதை போல தான் இதையும் நான் செய்திருக்கின்றேன். கட்டியங்காரன் அனுப்பிய ஓலையானது, எங்களை வரவழைத்து கொல்வதற்கான சூழ்ச்சி என்பதை நானும், என் தமையனும் அப்பொழுதே அறிந்தோம்.

🌟 நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஆகையால் நடந்தது என்ன? நடக்கப் போவது எப்படி இருக்க வேண்டும்? என்று முன்னரே திட்டமிட்டோம். சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும் என்று நீ கூறுவதற்கு முன்பாகவே நாங்கள் அந்த சூழ்ச்சிக்கான வலையையும் உருவாக்கி விட்டோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே கட்டியங்காரனும் அவனுடைய படைகளோடு தான் அவ்விடத்திற்கு வந்தான்.

🌟 அவன் உன்னை பார்த்ததும் என்ன செய்வது? என்று தெரியாமல் நிற்பான் என்பதை அறிந்து தான், நான் அங்கு தோன்றினேன். என்னுடைய வரவு அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக திடீரென்று மக்களும் அவனுக்கு எதிராக மாறுவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்றார்.


Share this valuable content with your friends