No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - போருக்கு ஆயத்தமான சீவகன்..!!

Apr 10, 2023   Ramya   155    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... போருக்கு ஆயத்தமான சீவகன்..!!

🌟 விசையை கூறுவதையெல்லாம் கேட்ட சீவகனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய தாய் இவ்வளவு புத்திசாலியா! என்று அவரையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருக்க, விசையை மேலும் பேச தொடங்கினார்.

🌟 அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த தான் சுயம்வர ஏற்பாட்டை உனது மாமன் ஊரில் நடத்தாமல், நமது ஊரில் நடத்த முடிவு செய்தோம்.

🌟 நாங்கள் அனுப்பிய ஓலைகள் பன்றியை கொல்வதற்கு மட்டுமல்ல, நன்றி மறந்த மனித பன்றியையும் கொல்வதற்காக தான். எதிரியை பார்த்த உடனே கொல்ல வேண்டும் என்று நாம் நினைத்தாலும் அவன் இருக்கும் பதவியும், அதிகாரமும் நம்மை கொன்று விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.


🌟 ஒருவனை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் மூன்றை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். முதலில் காலம், இரண்டாவது இடம், மூன்றாவது நமக்கான படைத்துணை. இது மூன்றும் சாதகமாக அமைந்துவிட்டால் எவ்வளவு பெரிய படைகளாக இருந்தாலும் அதை நொடியில் முறியடித்து வெற்றியை அனுபவிக்க முடியும் என்றார்.

🌟 அதே சமயம் கூடாரத்திற்குள் வந்த கோவிந்தன், நட்பு நாடுகள் அனைவரிடத்திலும் நிகழும் நிகழ்வுகளை முன்னரே நாங்கள் கூறியிருந்தோம். அதற்காக தான் அவர்கள் அனைவரும் உனக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டியங்காரனை சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள் என்று கூறினார்.

🌟 அவர்கள் இருவரும் கூறி முடித்ததும், இவற்றையெல்லாம் ஏன் முன்னரே கூறவில்லை? என்னை நம்பவில்லையா? என்று கேட்டான் சீவகன்.

🌟 அப்பொழுது விசையை சீவகனை நோக்கி உன்னை நம்பாமல் நாங்கள் என்ன செய்ய போகின்றோம்? நாளைய வேந்தன் நீ! உன் தனி ஒருவனின் வீரத்திற்கும், ஆற்றலுக்கும் மென்மேலும் பளுவை தரக்கூடாது என்பதால் தான் நாங்கள் இதை உன்னிடம் கூறவில்லை. ஒருவேளை நாங்கள் உன்னிடம் கூறியிருந்தாலும் அவ்விடத்தில் நீ, நான் ஒருவனே தனியாக இருந்து எனக்கான பகைமையை தீர்த்து கொள்வேன்! என்று வீரம் பேசுவாய்.

🌟 இந்த பாரதத்தில் பல மாவீரர்கள் இருந்தாலும் இன்றும் பேசப்படும் மாவீரனாக இருப்பவர் தான் கர்ணன். அவருடைய வீரத்தை இந்த உலகம் அறிந்திருந்தாலும் அவர் அடைந்தது வெற்றியல்ல... தோல்வி மட்டுமே! ஏனென்றால் அவரிடத்தில் தகுந்த துணையை அவர் ஏற்படுத்தி கொள்ளாதது தான். அவரை போலவே உனக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இப்படி செய்தேன்.

🌟 சிறு துரும்பானாலும் பல் குத்த உதவும் என்று நமது முன்னோர்கள் கூறியதை எப்பொழுதும் மறக்கக்கூடாது. ஆகையால் தான், நான் அவ்விடத்தில் தோன்றி மக்களை தூண்டி விட்டேன். அதற்கு காரணம், கட்டியங்காரனுக்கு மக்கள் உதவி கிடைத்திடக்கூடாது என்பதற்கு தான்.

🌟 ஒருவன் வைத்திருக்கும் வில்லும், அம்பும் மட்டும் வெற்றியை தேடி தராது. நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்ய போகின்றோம்? என்பதை தெளிவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்து விட்டோமானால் இந்த உலகமே நம் கூற்றை கேட்கும். அதை தான் நான் அவ்விடத்தில் மேற்கொண்டேன்.

🌟 கட்டியங்காரனை கொல்வது உனக்கு மட்டும் கடமை அல்ல. அவனை ஒழிப்பதில் எனக்கும் பங்கு இருக்கின்றது. அதை தான் இப்பொழுது நான் செய்து முடித்திருக்கின்றேன் என்று நீண்ட நாட்களாக தனது மனதில் இருந்த கவலைகள் அனைத்தையும் தனது மகனிடம் விசையை பகிர்ந்து கொண்டார்.

🌟 தனது தாயின் வீர உரையை கேட்டு வியந்து நின்ற சீவகன், நாம் இப்பொழுது தர்ம யுத்தத்தில் இருக்கின்றோம். இந்த யுத்தத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இலக்குகளையும், பணிகளையும் செய்திருக்கின்றார்கள். எனவே இப்பொழுது நாம் அடைய போகின்ற வெற்றியானது நம்முடைய வெற்றி மட்டும் அல்ல. பலருடைய முயற்சிகளால் கிடைக்கக்கூடிய சாதனை வெற்றியாகும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டான். பின் தனது தாய்மாமனிடம் போருக்கான யுத்திகள் என்னவென்று? தெளிவாக கூறினான்.

🌟 அப்பொழுது கோவிந்தன் சீவகனை பார்த்து, இந்த போரில் நாம் இருவர் மட்டும் போரிட்டால் போதாது. பலர் இணைந்து செயல்பட்டால் தான் கட்டியங்காரனை வீழ்த்த முடியும். எனவே நமது படைகளையும், நண்பர்களையும், மக்களையும் ஒருங்கிணைத்து செல்வதே நம்முடைய முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

🌟 உடனே சீவகனும் அதற்கான செயல்களை மேற்கொள்ள துவங்கினான். தனது நண்பர்கள் மற்றும் தன்னுடைய சீடர்கள் என அனைவரும் இந்த போரில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கினான்.

🌟 பின் அங்கே வந்த விசயன் சீவகனை பார்த்து ஒருவிதமான தயக்கத்தோடு, குருவே நீங்கள் நன்றாக யோசித்து விட்டு தான் போர் தொடுக்க முடிவு செய்து இருக்கின்றீர்களா? என்று கேட்டான்.

🌟 விசயா! நான் சூழ்நிலையின் காரணமாக சிறு காலத்திற்கு மட்டுமே உங்களுக்கு குருவாக இருந்தேன். ஆனால் இப்பொழுது நான் உன் தங்கையின் கணவன் அல்லவா! ஆகையால் நீ என்னை மாமா என்றே அழைக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த போரில் உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? என்று கேட்டான் சீவகன்.

🌟 அதற்கு விசயன், நீங்கள் தானே மாமா! எதிரிகளை எப்பொழுதும் குறைவாக மதிப்பிடக்கூடாது என்று கூறினீர்கள். அந்த வகையில் எண்ணிக்கைப்படி பார்த்தால் நம்மை விட கட்டியங்காரனின் படை தான் அதிகமாக இருக்கின்றது.

🌟 உடனே சீவகன், நம்முடைய படைக்கும், கட்டியங்காரனுடைய படைக்கும் பெருமளவில் எந்தவொரு வேறுபாடுகளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. யானை படைகளும், குதிரை படைகளும் சம அளவில் இருந்தாலும் அவனிடத்தில் காலாட்படை வீரர்கள் மட்டும் தான் நம்மை விட கொஞ்சம் அதிகமாக இருக்கின்றார்கள் என்றான்.

🌟 கொஞ்சம் அதிகமாக இல்லை! ஒரு லட்சம் வீரர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்! என்றான் விசயன்.

🌟 பரவாயில்லையே எண்ணிக்கையை கூட சரியாக தான் தெரிந்து வைத்திருக்கின்றாய். உமக்கு இருக்கும் முதல் பிரச்சனை அந்த ஒரு லட்சம் வீரர்கள் தான் என்றால், அவர்களை முதலில் வென்று விடலாம் என்று சிரித்துக்கொண்டே கூறினான் சீவகன்.

🌟 இதை கேட்ட விசயன், எதற்கும் நம்முடைய மாமா! அச்சம் கொள்ளாமல் இருப்பார் போல தெரிகின்றதே என்று எண்ணி வியந்து நின்றான். பின் அவ்விருவரும் பேசி கொண்டே கோவிந்தனுடைய படை வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


Share this valuable content with your friends