No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - போட்டிக்கான ஏற்பாடுகளை செய்த கட்டியங்காரன்..!!

Apr 07, 2023   Ramya   138    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... போட்டிக்கான ஏற்பாடுகளை செய்த கட்டியங்காரன்..!!

🌟 சீவகனோ காந்தருவதத்தையை ராசமாபுரத்தில் பல மன்னர்களுக்கு நடுவில் யாழ் போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று மணந்து கொண்டேன் என்றும், குணமாலையை அவளை தாக்க வந்த யானையிடமிருந்து பாதுகாத்து மணந்து கொண்டேன் என்றும் கூறினான். அதுமட்டுமல்லாமல் இந்த வீர தீர கதைகளை தான் இப்பொழுது வரை எனது நாட்டில் பேசி கொண்டிருக்கின்றார்கள் என்றான்.


🌟 அதற்கு கோவிந்தனும் சிரித்து கொண்டே, உனது தந்தையிடம் நான் கொண்ட நட்புறவின் காரணமாக தான் எனது தங்கையை மணமுடித்து வைத்தேன். ஆனால் அந்த வாழ்க்கை அவளுக்கு நெடுநாட்கள் நீடிக்கவில்லை. அதனால் தான் என் மகளையும் சிறந்த வீரன் ஒருவனுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

🌟 என் மகளுக்கான வரன் தேடும் போட்டியை கூட என் தங்கை வாழ்விழந்த, நீ பிறந்த மண்ணான ராசமாபுரத்தில் தான் ஏற்பாடு செய்வேன். அதற்கான அனைத்து வேலைகளையும் கட்டியங்காரனே செய்வான். அவன் தலைமையில் தான் அந்த விழா நடைபெறும் என்றும் கூறினார்.

🌟 இதை கேட்டதும் சீவகனுக்கு மாமன் மீது கோபம் வந்தாலும், அவர் தரப்பில் இருக்கக்கூடிய உணர்வுகளை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல், கட்டியங்காரனான சிறு நரியை நேரம் பார்த்து வெல்வதற்கான வழியையும், வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்று எண்ணி கொண்டான்.

🌟 அன்று அவர்கள் பேசி கொண்டதற்கு ஏற்பவே, இன்று கட்டியங்காரனிடம் உதவி கேட்டார் கோவிந்தன்.

🌟 கோவிந்தனின் கூற்று தர்மமாக இருந்தாலும், அன்று அந்த போட்டியை நடத்தியதன் காரணமாக சில நட்பு நாடுகளிடம் எதிர்ப்பு ஏற்பட்டதை எண்ணி, இதை நடைபெறாமல் தடுக்க ஆரம்பத்திலேயே சில விஷயங்களை கூற துவங்கினான் கட்டியங்காரன்.

🌟 அதாவது எல்லா நாட்டில் இருக்கக்கூடிய அரசர்களும் ஒரே இடத்தில் கூடியிருந்தால், நாட்டு மக்கள் அனைவருக்கும் அது ஒரு பெரும் கவலையாக இருக்கும் அல்லவா! ஏதோ பெரிய போருக்கு வழி வகுத்து விடுமோ என்று அனைவரும் எண்ணுவார்கள் அல்லவா! ஆகையால் இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்பதை பற்றி நாம் யோசிப்போமா? என்று கேட்டான்.

🌟 கோவிந்தன் கட்டியங்காரனின் கூற்றை கேட்டதும் பரவாயில்லையே! உமக்கும் மூளை இருக்கின்றது என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டு தான் இருக்கின்றாய் என்று நினைத்து கொண்டார். பின் மக்களுக்கு தெளிவாக கூறி விடுங்கள் போட்டியின் காரணமாக தான் எல்லா மன்னர்களையும் வரவழைக்கின்றோம் என்றும், இது ஆரோக்கியமான போட்டி தான் என்றும், பல நாடுகளுடன் இருக்கக்கூடிய நட்புறவை மேம்படுத்துவதற்காக தான் இந்த போட்டி நிகழ்த்தப்போகின்றோம் என்றும் கூறுவிடுங்கள் என்றார்.


🌟 கட்டியங்காரன் எப்படி கூறியும் கோவிந்தன் தன்னுடைய முடிவில் நிலையாக இருந்ததினால், எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாமல், இறுதியில் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கின்றேன் என்று ஒப்பு கொண்டான். உடனே, ஆமாம்... எந்த மாதிரியான போட்டிகளை அமைக்க போகின்றீர்கள்? என்று கேட்டான்.

🌟 அதற்கு கோவிந்தன், யாராலும் தோற்கடிக்க முடியாத பன்றி ஒன்றை கொண்டு வந்திருக்கின்றேன். அதை பொன் நகைகளால் அலங்காரம் செய்து விளையாட்டு அரங்கில் ஓட விட வேண்டும். சூரிய வெளிச்சத்தில் பொன் நகைகளானது கண்களை கூசும் அளவிலான எதிரொளிப்பை ஏற்படுத்தும். அதனால் அந்த பன்றியை வீழ்த்துவது என்பது முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட பன்றியை யார் ஒருவர்? ஒரே அம்பில் வீழ்த்துகின்றாரோ, அவரே எனது மகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

🌟 இந்த போட்டியானது மிகவும் கடினமாக இருக்கும் போல தோன்றுகின்றதே! அது சரி உங்கள் விருப்பப்படியே அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விடுகின்றேன் என்று கூறினான் கட்டியங்காரன்.

🌟 பின் கோவிந்தன் தனது ஜோதிடரிடம் கலந்தாலோசித்து போட்டியை நிகழ்த்துவதற்கான தேதியை முடிவு செய்தார். கட்டியங்காரனிடம் தான் குறித்த அந்த நாளிலே போட்டியாளர்கள் அனைவரும் வரும்படியான ஏற்பாடுகளை செய்யும்படி கூறினார். அதற்கு சரி என்ற கட்டியங்காரனும் போட்டியை நிகழ்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்.


Share this valuable content with your friends