No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கட்டியங்காரனுக்கு எதிராக போர் படையை திரட்டிய சீவகன்...!!

Apr 06, 2023   Ramya   174    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கட்டியங்காரனுக்கு எதிராக போர் படையை திரட்டிய சீவகன்...!

🌟 குறுகிய நாட்களிலேயே கோவிந்தன் திரட்டிய பெரும்படையானது நீளமும், அகலமும் பரந்து விரிந்திருந்தது.

🌟 சீவகன் அரண்மனையில் இருந்து அப்போர் படையை பார்த்து கொண்டிருந்தபோது, கோவிந்தன் சீவகனை பார்த்து கட்டியங்காரனை தோற்கடிக்க இந்த படை போதுமா? என்று கேட்டார்.

🌟 மாமா! இந்த படையே போதும். இந்த படையை கொண்டே நாம் அவனை தோற்கடிக்க முடியும் என்றான். பின் நாம் கீழே சென்று படையை பார்ப்போமா? என்று வினவினான் சீவகன்.

🌟 அப்பொழுது கோவிந்தன் சீவகனை பார்த்து, அங்கே படைகளின் முன்னிலையில் நான் உன்னை... நீ என் படை தளபதி என்று தான் அறிமுகம் செய்வேன் என்று கூறினார்.

🌟 கோவிந்தன் கூறியதை கேட்ட சீவகனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின், ஏன் மாமா? என்று கேட்டான்.

🌟 சீவகா! நீ என்னோடு இருக்கின்ற பொழுது உனது எதிரியான கட்டியங்காரனுடன் நான் நட்புறவு கொண்டிருக்கின்றேன் என்றால், மன்னருக்கு ஏதோ மனநிலை சரியில்லையோ என்று படை வீரர்கள் எண்ணிவிடக்கூடாது அல்லவா! அதற்காக தான் என்றார் கோவிந்தன்.


🌟 அப்படியே ஆகட்டும் மாமா! என்று கூறிவிட்டு இருவரும் படை நடுவே சென்று பார்க்க துவங்கினார்கள். அப்பொழுது யானை படையை கடந்து செல்வதற்கே அவர்களுக்கு நேரம் அதிகம் தேவைப்பட்டது. இவ்வளவு யானைகள் தேவையா என்பது போல சீவகனும் யோசித்தான்.

🌟 அப்பொழுது கோவிந்தன், மொத்தம் 10 ஆயிரத்து 600 யானைகள் வந்திருக்கின்றன. யானையை வழிநடத்தும் பாகர்களும் வீரர்கள் தான். எரிகோல், வேல், வில் என அனைத்திலும் சிறந்தவர்களை தான் யானை பாகர்களாக நியமிக்க சொல்லி இருக்கின்றேன் என்று கூறினார்.

🌟 யானை படையை கடந்து, குதிரை படையை பார்ப்பதற்கு முன்பே சீவகன் வியந்து நின்றான். ஏனென்றால் யானையின் எண்ணிக்கைகளை விட பல மடங்கு குதிரைகள் இருந்தன. அதுமட்டுமல்லாது குதிரையை வழிநடத்தி செல்லும் வீரர்களை பார்க்கும் பொழுதே அவர்கள் அனுபவமிக்கவர்களாக தெரிந்தார்கள்.

🌟 பின் சீவகன் குதிரைகளை பார்த்து, இந்த குதிரைகள் எந்த ஊரில் இருந்து வர வைக்கப்பட்டன? என்று கேட்டான்.

🌟 மாளவ நாட்டிலிருந்து சில குதிரைகளும், சிந்து நதிக்கரை, பல்லவம் முதலிய நாடுகளில் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் குதிரைகளும், அவற்றுடன் வீரர்களும் வந்திருக்கின்றார்கள். இதுமட்டுமல்லாமல் தேர்ப்படை கூட நம்மிடம் இருக்கின்றது என்றார் கோவிந்தன்.

🌟 உடனே சீவகன், தேர்ப்படை இருக்கின்றதா! என்று ஆச்சரியமாக கேட்க, தேர்ப்படைகளில் மொத்தம் 20 ஆயிரத்து 600 தேர்கள் இருக்கின்றன. இந்த பக்கம் தேர்ப்படை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால், குன்றுக்கு அந்த பக்கம் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. அது தவிர காலாட்படையும் இருக்கின்றது என்று கூறினார் கோவிந்தன்.

🌟 எப்படி மாமா! இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படியொரு பெரும் படைகளை திரட்டினீர்கள்? என்று கேட்டான் சீவகன்.

🌟 கோவிந்தன், விதேய நாட்டை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கின்றாய் சீவகா! ஏமாங்கத நாட்டிற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத பேரரசு இது! என்று பெருமையுடன் கூறினார். மேலும், நாளை விடிகின்ற பொழுது நமக்கு வெற்றி நிறைந்த பொழுதாக அமைய வேண்டும் என அருகனை வணங்கி விட்டு போருக்கு புறப்படலாம் என்று கூறிவிட்டு சென்றார்.

🌟 பொழுது விடிந்ததும் பூஜைகள் நிறைவு பெற, கோவிந்தன் தன்னுடைய பட்டத்து யானையான ஐராவதம் மேல் அமர படைகள் கிளம்பியது.


Share this valuable content with your friends