No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மன்னன் தடமித்தன் சீவகனுக்கு அளித்த வித்தியாசமான தண்டனை..!!

Mar 22, 2023   Ramya   120    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மன்னன் தடமித்தன் சீவகனுக்கு அளித்த வித்தியாசமான தண்டனை..!!

🌟 பொழுது விடிந்ததும் மக்கள் அனைவரும் அரச குமாரர்களின் போர் திறமையை பார்ப்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பெரிய மைதானத்தில் கூடியிருந்தனர். ஒரு மாடத்தின் மேலே மன்னரும், மந்திரிகளும் அமர்ந்திருக்க அரச குமாரர்கள் அனைவரும் மைதானத்திற்கு வந்தனர்.

🌟 அரச குமாரர்களை மைதானத்தில் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் கரகோஷம் எழுப்ப, அரச குமாரர்களும் அவரவர்களின் திறமைகளை வெளிப்படுத்த துவங்கினார்கள். அதாவது, வில்வித்தையில் சிறந்து விளங்கிய அர்ஜுனனுக்கே போட்டியிடும் வகையில் விசயன் தேர்ச்சி பெற்றிருந்தான்.

🌟 கையில் இருக்கும் வேலினை கொண்டு மரத்தினை உடைப்பதிலும், வலிமையான பொருட்களை உடைப்பதிலும் சிறந்து விளங்கினான் கதம்பன்.

🌟 குதிரை போட்டியில் குதிரையின் வேகத்தை நொடியில் உயர்த்தியும், நொடியில் குறைத்தும், பல தடைகளை தாண்டியும், இலக்குகளை சரியான முறையில் அடைந்தும் என குதிரையின் கட்டுப்பாடுகளை பலவிதத்தில் வெளிப்படுத்தி கொண்டிருந்தான் கனகன்.

🌟 அங்கிருந்த அனைவரையும் ஒரே நொடியில் தோற்கடிக்கும் விதமாக மதம் பிடித்த யானைகள் அரங்கத்திற்குள் நுழைய, அனைவரும் தங்கள் ஆயுதங்களோடு காத்திருந்தனர்.

🌟 பின் அனைத்து யானைகளும் அமைதியாகி நின்றிருந்தது. மன்னருக்கு புரிந்தது இது யாருடைய வேலை என்று. ஆனால் மக்களோ இதை பெரிய விஷயமாக கருதி மற்றவர்களை காட்டிலும் அசலகீர்த்தி அனைவரையும் மிஞ்சி விட்டானே! என்று பேசி கொண்டிருந்தார்கள்.


🌟 அப்பொழுது நால்வருக்கும் பயிற்சி கொடுத்த சீவகன் அவ்விடத்திற்கு வர, மக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதையும், கரகோஷத்தையும் விண்ணை எட்டும் அளவிற்கு கொடுத்தனர்.

🌟 தான் பயிற்சி கொடுத்த நால்வரின் மூலம் தனக்கான மதிப்பும், அங்கீகாரமும் கிடைத்ததை எண்ணி சீவகன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தான். அந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்? என்பது போல மன்னரும் உரையாட துவங்கினார்.

🌟 வித்தைகள் பல செய்து காட்டிய என்னுடைய மகன்கள், இத்தனை வித்தைகளையும், திறமைகளையும் ஒரே மாதத்தில் அடைந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? போர்க்கலையில் தேர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் கல்வி வேள்விகளிலும் என்னுடைய மகன்கள் சிறந்து விளங்குகின்றார்கள். அதுவும் மிகக்குறுகிய நாட்களிலே!

🌟 இவர்களுடைய திறமையையும், பயிற்சியையும் பார்க்கும் பொழுது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கின்றது. இவை அனைத்திற்கும் காரணகர்த்தா யார்? என்று பார்த்தால் இவர்களுடைய குருவான வாமனன் (சீவகன்) தான் என்றார்.

🌟 ஆனால் இவர்களுடைய குருவுக்கு நான் இன்று எந்தவொரு பரிசும், மதிப்பும் அளிக்க போவதில்லை. மாறாக தண்டனையை அளிக்க போகின்றேன் என்று கூறினார் மன்னர்.

🌟 மன்னர் கூறியதை கேட்டதும், அதுவரை மக்களிடம் இருந்த மகிழ்ச்சியும், கரகோஷமும் நொடியில் மாறி, என்னது இவ்வளவு பயிற்சிகளை குறுகிய நாட்களில் கொடுத்தவருக்கு தண்டனை அளிக்க போகின்றாரா? இது சரியான முடிவாக இல்லையே! என்ற சலசலப்பு அவ்விடத்தில் ஏற்பட துவங்கியது.

🌟 சிறிது நேரத்திற்கு பின்பு மக்களிடத்தில் இருந்த சலசலப்புகள் குறைந்து அமைதி ஏற்பட மன்னர் மீண்டும் உரையாட துவங்கினார்.


🌟 என்னுடைய மகனான விசயன் வாமனனை என்னிடத்தில் அறிமுகப்படுத்திய பொழுது, வாமனன் என்னிடத்தில் நான் வணிக குலத்தை சார்ந்தவன் என்று கூறினார். ஆனால் குறுகிய நாட்களில் இவ்வளவு பயிற்சிகளை கொடுக்க முடியும் என்றால், இவர் வணிக குலத்தை சார்ந்தவராக இருக்க முடியாது. என்னிடத்தில் அன்று பொய் உரைத்திருக்கின்றார்.

🌟 இவருடைய திறமைகளையும், நடவடிக்கைகளையும் நான் கூர்ந்து கவனித்தேன். அப்பொழுது இவர் அரச குலத்தை சார்ந்தவராக தான் இருப்பார் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் இவர் கொடுத்த பயிற்சியிலிருந்தே உறுதியாகவும் தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.

🌟 ஆகவே இவருக்கு கொடுக்கப்போகும் தண்டனை என்பது எனது பெண் கனகமாலையை திருமணம் செய்து கொண்டு என்னுடைய ஆட்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே! என்றார்.

🌟 மன்னர் கூறிய தண்டனை என்னவென்றே அப்பொழுது தான் அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக புரிந்தது. மேலும் சிலர், தண்டனைகளில் இது வித்தியாசமாக இருக்கின்றதே! என்று கூற அரங்கமே மகிழ்ச்சியில் நிரம்பி காணப்பட்டது.


Share this valuable content with your friends