No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - ரகசியங்களை அறிந்துகொண்ட இளவரசி..!!

Mar 21, 2023   Ramya   162    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... ரகசியங்களை அறிந்துகொண்ட இளவரசி..!!

🌟 அழகிய பூக்கள் யாருக்கு கிடைத்தாலும் இவ்வளவு அழகான மாலையாக தொடுப்பதில்லை அல்லவா! நீங்கள் தொடுத்திருக்கும் மாலை அளவெடுத்து தொடுத்தது போல இருக்கின்றதே! என்றாள் அநங்க விலாசினி.

🌟 அதற்கு சிரித்து கொண்டே சீவகனும் மாலையில் என்ன அளவு இருக்கின்றது? நம்முடைய எண்ணங்களும், முயற்சிகளும் மட்டுமே அதை அழகுடன் வெளிப்படுத்தும் என்றான்.

🌟 பின் நீங்கள் தொடுத்திருக்கும் இந்த மாலை இளவரசியின் நிறத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இதை நான் எடுத்து சென்று அவர்களுக்கு கொடுக்கலாமா? என்றாள் அநங்க விலாசினி.

🌟 அநங்க விலாசினி இளவரசியை பற்றி கூறியவுடன் ஆச்சரியம் அடைந்த சீவகன், மன்னருக்கு இளவரசி இருக்கின்றார்களா? நமது மன்னருக்கு நான்கு மகன்கள் மட்டும் தானே என்றான்.

🌟 என்னது இளவரசி இருப்பது உங்களுக்கு தெரியாதா? ஏன் உங்களது சீடர்கள் எதையும் கூறவில்லையா? என்றாள் புன்னகையுடன் அநங்க விலாசினி.

🌟 இல்லை.. அவர்கள் என்னிடம் கூற வந்திருக்கலாம். அப்பொழுது நான் அவர்களை தடுத்திருந்திருக்கலாம். அதனால் இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போயிருக்கும் என்றான் சீவகன்.

🌟 இந்த நிலையிலும் உங்களுடைய சீடர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றீர்கள். இப்படிப்பட்ட குரு கிடைப்பதற்கு அவர்கள் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும். நமது மன்னருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தான் இந்த மாலையை நான் எடுத்து செல்லலாமா? என்று கேட்டேன்.

🌟 சீவகனும் சரி இதை அவர்களிடம் எடுத்து கொண்டு போய் கொடுங்கள் என்று கூறினான்.

🌟 அநங்க விலாசினியும் சீவகனிடமிருந்து அந்த அழகிய மாலையை பெற்று கொண்டு இளவரசி இருக்கும் அறைக்கு சென்று மாலையை அவளிடம் கொடுத்தாள்.


🌟 மாலையை தூரத்திலிருந்து பார்த்த இளவரசிக்கு அதன் அழகு மிகவும் பிடித்திருந்தது. அநங்க விலாசினி மாலையை கொடுத்ததும் அதை தனது கழுத்தில் அணிந்து கொண்டு மிகவும் அழகாகவும், சரியான அளவுடனும் இருப்பதை கண்ணாடியில் கண்டாள்.

🌟 இந்த மாலை மிகவும் அழகாக இருக்கின்றது. யார் தொடுத்தது? இவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றதே! என்றாள் இளவரசியான கனகமாலை.

🌟 மாலையை அணிந்த கனகமாலை இதில் ஏதோ எழுதப்பட்டு இருக்கின்றதே! என்று பணிப்பெண்ணிடம் வினவினாள்.

🌟 அதற்கு அநங்க விலாசினி, இந்த மாலையில் எழுதப்பட்டிருப்பது உங்களுக்கு தெரிகின்றதா? நான் வாங்கி பார்த்தபோது மாலையில் எதுவும் எழுதப்பட்டிருப்பது எனக்கு தெரியவில்லை. அப்பொழுதே இளவரசர்களின் குருவான சீவகன் கூறினார், இந்த மாலையில் சிறு ரகசியம் இருப்பதாகவும், அதை தகுதி உடையவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று.

🌟 பின்பு கனகமாலை மாலையில் உள்ள பூக்கள் அனைத்தையும் பிரித்து அதை வரிசைப்படுத்தி, அதில் இருக்கக்கூடிய ரகசியங்களை தெளிவாக படித்தாள். இதில் என்ன ரகசியம் எழுதி இருக்கிறது? என்று எதிர்பார்த்தவளுக்கு அது ஒரு கவிதை என்று புரிந்தது.

🌟 அதாவது, அந்த கவிதையில் ஒரு ஆண் ஒரு பெண்ணிடத்தில் எப்படி நாணம் கொள்கின்றான்? என்றும், அவளிடத்தில் இருந்து எப்படி அவன் இன்பங்களை அனுபவிக்கின்றான்? என்றும் மிகவும் எளிதாகவும், நேர்த்தியாகவும் எழுதப்பட்டிருந்தது.

🌟 அதை படித்ததும் அவளும் மயங்கினாள் கவிதையை எழுதியவரிடத்தில். பின் அநங்க விலாசினியை பார்த்து, அந்த குரு சாதாரணமானவராக இருக்க மாட்டார். இவ்வளவு அழகாக கவிதை எழுதுகின்றார் என்றால் அவரை எப்படியும் நான் பார்த்தே ஆக வேண்டும். அந்த குருவை நீ பார்த்திருக்கின்றாயா? அவர் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்? என்று கேட்டாள் கனகமாலை.

🌟 அதற்கு அநங்க விலாசினி, இளவரசி நான் அவரை பார்த்திருக்கின்றேன். ஆனால் இது உங்களுக்கு தேவையில்லாத ஆசைகள். அவர் அரசரின் பணியாள் மட்டுமே, தேவையில்லாத சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம் என்றாள்.


Share this valuable content with your friends