No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனுக்கு இளவரசி அனுப்பிய கவிதை..!!

Mar 21, 2023   Ramya   186    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனுக்கு இளவரசி அனுப்பிய கவிதை..!!

🌟 நீ நினைக்கும்படி ஒன்றும் இல்லை. இவ்வளவு அழகாக கவிதை எழுதுகின்றார் என்றால் அவரை உடனே பார்த்து அதற்கு உண்டான பாராட்டுகளையும், சன்மானங்களையும் தெரிவிக்க வேண்டும் அல்லவா! அதற்காக தான் என்றாள் கனகமாலை.


🌟 சிறிய சன்மானம் தான் பெரிய அளவிலான சிக்கல் வலையை உருவாக்கும் என்பதை நீங்கள் அறியாதது அல்ல. எனக்கு தோன்றியதை நான் உங்களிடம் கூறினேன். மற்றபடி ஒன்றுமில்லை. அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தான் இருப்பார். போர் பயிற்சி கற்று தரும் குரு என்று கூறினாலும், அவர் தோற்றத்தை கண்டால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றாள் அநங்க விலாசினி.

🌟 சிக்கலான வலை தானே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சிக்கலில் அகப்பட்டாலும், சிக்காமல் வெளிவரும் சிலந்தி அல்லவா நான்! அவர் எழுதிய கவிதைக்கு நான் மறு கவிதை எழுதி, இதே விதத்தில் தொடுத்து தருகின்றேன். அதை அவரிடத்தில் கொடுத்து விடு என்றாள் கனகமாலை.

🌟 சிக்கலான வலைகள் அழகாக இருப்பதால் தான் பல உயிர்கள் வந்து அகப்படுகின்றன. அதில் நானும் அகப்பட விரும்பவில்லை என்றாள் அநங்க விலாசினி.

🌟 நான் உன்னை அகப்பட சொல்லவில்லை. இதை கொண்டு போய் அவரிடம் கொடுத்துவிடு என்று தானே கூறினேன். மேலும் பிணைப்புகள் பல நிறைந்த சிக்கலான வலையை தூரத்தில் இருந்து பார்ப்பதும் ஒருவிதமான அழகு தானே! என்றாள் கனகமாலை.

🌟 உங்களை என்னால் வெல்ல முடியாது! நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதை நான் அப்படியே செய்கின்றேன் உத்தரவு தாருங்கள்! என்றாள் அநங்க விலாசினி.

🌟 பின் அநங்க விலாசினி கனகமாலை கொடுத்தனுப்பிய மாலையை சீவகனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அதற்கு சீவகன் எனக்கு இந்த மாலை தேவையில்லை. இதை இளவரசியிடமே கொண்டு போய் கொடு என்று கூறினான்.

🌟 உடனே அநங்க விலாசினி, இளவரசி நீங்கள் கொடுத்த மாலைக்கு பதில் மாலையை கொடுத்திருக்கின்றார் என்று கூறினாள்.

🌟 இதை கேட்ட சீவகன், என்னது! மாலையில் உள்ள ரகசியங்களை இளவரசி படித்தார்களா! என்று ஆச்சரியம் அடைந்தான். பின் கனகமாலை கொடுத்தனுப்பிய மாலையை கரங்களில் வாங்கி அதன் பதிலை படிக்க துவங்கினான்.

🌟 சீவகன் எழுதியிருந்த கவிதைக்கு பதில் அளிக்கும் விதமாக கனகமாலை அனுப்பி இருந்தாள். அதாவது, இன்பத்தில் எப்பொழுதுமே பாரபட்சம் இருக்கக்கூடாது. நாணத்தால் ஆண் மட்டும் மகிழ்ச்சி அடைவதில்லை. பெண்களும் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்று அனுப்பி இருந்தாள். அந்த மாலையில் உள்ள சொற்களில் நாணம், தாமரை இலையில் நீர் நிரம்பியது போல எதிலும் உரசாமலும், படாமலும் தெளிவாக இருந்தது.

🌟 பதில் கவிதை படித்த சீவகன் தன்னுடைய கவிதையை விட இளவரசி அனுப்பிய கவிதையின் சொற்களில் நாணம் மிகுந்திருக்கின்றது என்று மகிழ்ச்சியுடன் அநங்க விலாசினியிடம் கூறினான்.

🌟 பின் அரண்மனையில் பணி செய்கின்றவர்கள் எப்பொழுதும் அரச குலத்து பெண்களை பார்க்கக்கூடாது. ஆனால் இளவரசி கொடுத்தனுப்பிய மாலையை பார்க்கும் பொழுது இந்த மாலை பூக்களால் மட்டும் தொகுக்கப்படவில்லை. மாறாக அன்பாலும், அரவணைப்பாலும் இணைந்து பிணைக்கப்பட்டு இருக்கின்றது. இதை படிக்க படிக்க என்னையும் அறியாமல் நான் இதனுடன் கட்டப்படுகின்றேன் என்றான் சீவகன்.

🌟 மீண்டும் மீண்டும் அந்த கவிதையை படித்த சீவகன் தன்னையும் அறியாமல் சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தான். இந்த கவிதைக்கு பதில் கொடுக்கவில்லை என்றால் சரியாக இருக்காது என்று சிந்தித்தவன், அநங்க விலாசினியை பார்த்து என்னால் நேரடியாக வந்து இளவரசியை பார்க்க முடியாது ஆகையால் பதிலை நான் மாலையாக தொடுத்து கொடுக்கின்றேன். அதை இளவரசியிடம் கொடுத்து விடு என்றான்.

🌟 அப்பொழுது அநங்க விலாசினியின் மனதில், இருவருக்கும் இடையில் இருதலை கொல்லியாக மாட்டி கொண்டேனே! இனி எதிலெல்லாம் அகப்பட போகின்றேனோ என புரியவில்லையே! என்று சிந்தித்த வண்ணமாக, சீவகனிடம் எதையும் கூற இயலாமல் அமைதியுடன் அவன் கொடுத்த மாலையை வாங்கி கொண்டு இளவரசியை காண சென்றாள்.

🌟 அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்த கனகமாலை அநங்க விலாசினியின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள். குருவிடம் இருந்து விடைபெற்று வருபவள் செய்தியுடன் வரப்போகிறாளா? அல்லது வெறும் கரங்களுடன் வரப்போகிறாளா? என்று தெரியவில்லையே. எப்பொழுது தான் இவள் வருவாள்? என்று ஆவலுடன் காத்து கொண்டிருந்தாள்.

🌟 அநங்க விலாசினி ஒருவழியாக அந்தப்புரத்தில் உள்ள இளவரசியின் அறைக்கு வந்த பொழுது, காணாத தலைவனுக்காக உணவு ஏதேனும் உட்கொள்ளாமல் மெய்யை வருத்தி கொண்டு கவலையுடன் இருப்பதை கண்டவள் அதிர்ச்சி அடைந்தாள். பின் கனகமாலையை பார்த்து என்ன ஆயிற்று இளவரசி? ஏன் எதையும் சாப்பிடாமல் வெளியே பார்த்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேள்வி எழுப்பிய வண்ணமாக இளவரசியின் அருகில் சென்றாள்.

🌟 அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறிய வண்ணமாக தலைவனை பற்றி சிந்தித்து கொண்டிருந்தாள் கனகமாலை. இருப்பினும் அநங்க விலாசினி அவள் உடலை தொட்டு பார்த்தாள். அப்பொழுது இளவரசியின் உடல் அனலாய் தகித்து கொண்டிருந்தது.

🌟 என்ன இளவரசி வெளியில் இவ்வளவு குளிர்ச்சியான காற்று அடித்து கொண்டிருக்கும் பொழுது, உங்களின் உடல் ஏன் இவ்வளவு அனலாய் தகித்து கொண்டிருக்கின்றது? என்று கேட்க, அப்பொழுது நிகழ் உலகத்திற்கு வந்தவள் அநங்க விலாசினியை இறுக அணைத்து கொண்டு, அவர் ஏதேனும் கொடுத்தாரா? என்று வினவினாள்.

🌟 ஆமாம், அவர் உங்களிடம் கொடுக்க சொல்லி ஒரு மாலையை கொடுத்து அனுப்பியுள்ளார். அதை கொடுக்க தான் இப்பொழுது நான் வந்தேன். ஆனால் உங்கள் உடல்நிலை சரியாக இல்லையே இளவரசி! என்றாள் அநங்க விலாசினி.

🌟 உடனே இளவரசி எங்கே அந்த மாலை? என்று கேட்டு கொண்டே அந்த மாலையை வாங்கி படிக்க கனகமாலையின் உடலில் இருந்த அனலானது அவளை விட்டு குறைய தொடங்கியது.


🌟 அநங்க விலாசினி உடல்நிலையை சரிசெய்வதற்கான மருந்துகளை எடுத்து கொண்டு இளவரசியின் அருகில் வரும் பொழுது அவளுடைய உடலில் இருந்த அனலானது குறைந்து எதுவும் நடைபெறாதது போல் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவள், என்ன ஆயிற்று உங்களின் உடலுக்கு? சிறிது நேரத்திற்குள் இவ்வளவு மாற்றமா! என்று ஆச்சரியமாக கேட்டாள்.

🌟 அதை பார்த்த கனகமாலை, நீ ஆச்சரியம் படும்படி ஒன்றும் இல்லை. தமையனின் குரு கொடுத்தனுப்பிய மாலையில் உள்ள பதிலை படித்ததும், உடலில் இருந்த அனலானது என்னை விட்டு சென்றுவிட்டது என்றாள்.

🌟 அடுத்து என்ன நிகழப்போகிறதோ தெரியவில்லையே? இதற்கும், எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டு புறப்பட தயாராக இருந்த அநங்க விலாசினியை பார்த்து, நில்! என்று கூறினாள் கனகமாலை.

🌟 ஆனால் அநங்க விலாசினியோ என்னை விட்டுவிடுங்கள் இளவரசியே! அரசருக்கு தெரிந்தால் என்ன நிகழுமோ? என்று கூறிக்கொண்டே அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சென்றாள்.


Share this valuable content with your friends