No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மன்னர் தடமித்தனை சந்தித்த சீவகன்..!!

Mar 20, 2023   Ramya   135    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மன்னர் தடமித்தனை சந்தித்த சீவகன்..!!

🌟 குறி தவறிய அந்த அம்பை எடுப்பதற்காக ஒரு சிறு பாலகன் அங்கு வந்தான். கலையான முகத்துடனும், விலை உயர்ந்த உடைகளுடனும் இருக்கின்ற பொழுது இவன் உயர்குல மக்களை சார்ந்தவனாக தான் இருப்பான் என்றும், அதுவும் அரசருடைய குலத்தை சார்ந்தவனாக இருப்பான் என்றும் புரிந்து கொண்டான் சீவகன்.

🌟 தான் விட்ட அம்பு குறி தவறியதால் முகத்தில் சிறு கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னுடைய மற்றொரு அம்பை எடுத்து பழங்களை நோக்கி குறி வைத்தான். இந்த முறையும் அம்பு தான் கீழே விழுந்ததே தவிர பழங்கள் மரத்தில் தான் இருந்தன.

🌟 இதை பார்த்து கொண்டிருந்த சீவகன் தன்னுடன் கொண்டு வந்த துணிப்பையிலிருந்து, யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த அவனுடைய வில்லையும், அம்பையும் எடுத்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மரத்திலிருந்த பழங்களை குறி பார்த்து அம்பை எய்தான்.

🌟 அவனுடைய குறி தவறாமல் பழத்தின் மீது மோத பழங்கள் கீழே விழுந்தன. அவன் நின்ற இடத்திலிருந்து, பழம் விழுவதற்குள் விரைவாக சென்று அந்த பழத்தினை கரங்களில் பிடித்து அதை அந்த பாலகனிடம் கொடுத்தான்.

🌟 பின் அந்த பாலகனை பார்த்து, இந்த பழங்களை பறிப்பதற்காக ஏன் இவ்வளவு கஷ்டப்படுகின்றாய்? சொல்லியிருந்தால் இதை நானே உனக்கு பறித்து கொடுத்திருப்பேன் அல்லவா! என்றான் சீவகன்.

🌟 அந்த பாலகனுக்கு இவனுடைய செயல் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இவர் யாராக இருக்கும்? அம்பை எடுத்ததும் தெரியவில்லை, அம்பை எப்பொழுது வில்லின் நாணில் ஏற்றினார் என்பதையும் பார்க்க முடியவில்லை. ஒரு நொடியில் தனக்கான இலக்கை நோக்கி அம்பினை எய்திருக்கின்றார்.

🌟 அம்பு எய்த இலக்கு கீழே விழுவதற்குள் உடனே சென்று அதையும் பிடித்து விட்டார். இவர் திறமை மிகுந்தவராக தான் இருக்க முடியும். இவரை போன்ற ஆட்கள் தானே நம்முடைய படைகளுக்கு தேவை என்று அப்பா எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார். அவரிடம் போய் சொன்னால் இவரை கண்டிப்பாக வேலைக்கு எடுத்து கொள்வார் என்று எண்ணினான் அந்த சிறிய பாலகன்.

🌟 அப்பொழுது சீவகன் பாலகனை பார்த்து என்ன சிறுவனே! சிலை போல நின்று கொண்டிருக்கின்றாய்? ஏன் உனக்கு பழங்கள் வேண்டாமா? என்றான் சீவகன்.

🌟 அதற்கு அந்த பாலகன் சீவகனை பார்த்து, வணக்கம்! நீங்கள் யார்? இந்த ஊருக்கு புதியவரா? என்று கேட்டான். அதற்கு சீவகன், ஆமாம்.. நான் இந்த ஊருக்கு புதியவன் தான் என்றான். பின் உங்கள் பெயர் என்ன? என்று பாலகன் வினவினான்.

🌟 சீவகன் சிறிது யோசித்த வண்ணமாக தன்னுடைய உண்மையான அடையாளத்தை பயன்படுத்தாமல் என்னுடைய பெயர் வாமன் என்று கூறினான். பின் சிறு பாலகனை பார்த்து உன்னுடைய பெயர் என்னவென்று? கேட்டான்.

🌟 அதற்கு சிறு பாலகன், என்னுடைய பெயர் விசயன். நான் மன்னர் தடமித்தனின் மூத்த மகன் ஆவேன். என்னுடைய தந்தை உங்களை பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். வாருங்கள் அவரை போய் பார்ப்போம் என்றான்.

🌟 விசயன் கூறியதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான் சீவகன். ஏனென்றால் எளிதில் முடியாது என எதிர்பார்த்த சில காரியங்கள் எதிர்பாராத விதமாக மிகவும் எளிதான முறையில் முடிகிறதே என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.

🌟 விசயன், சீவகனை தன் தந்தையிடம் அழைத்து சென்று தான் கண்ட காட்சிகளை எடுத்து கூறிவிட்டு, இவரையும் நம்முடைய படைகளில் வைத்து கொள்ளலாமா? என்று கேட்டான்.


🌟 மன்னரும் விசயன் கூறியதை எண்ணி கொண்டே வாமன் என்ற சீவகனை பார்த்து, இவன் சிறியவனாக இருக்கின்றானே என்று நினைத்தார். பின், நீங்கள் யாரிடம் வில் பயிற்சிகளை கற்று கொண்டீர்கள்? என்று வினவினார்.

🌟 நான் அச்சணத்தி குருவிடம் இருந்து வில் பயிற்சி மட்டுமல்லாமல் போர் பயிற்சிகளையும் கற்று கொண்டேன். எனது குருவின் ஆலோசனைப்படி பல நகரங்களுக்கு சென்று வில் பயிற்சிகளையும், போர் பயிற்சிகளையும் பலருக்கும் கற்று கொடுத்து வருகின்றேன் என்றான் சீவகன்.

🌟 அப்படியானால் உங்களுக்கு போர் பயிற்சி தெரியுமா? என்றார் மன்னர். ஆமாம் மன்னா! எனக்கு போர் பயிற்சி நன்கு தெரியும். எப்படி போரிட வேண்டும்? ஒரு வாளினை எப்படி கையாள வேண்டும்? எப்படி ஒரு எதிரியை நம் வலையில் விழ வைக்க வேண்டும்? என்ற பல நுணுக்கங்களையும் அறிந்திருக்கின்றேன் என்றான் சீவகன்.

🌟 ம்ம்ம்.... பரவாயில்லை, இந்த சிறு வயதிலே பல விஷயங்களை அறிந்து வைத்திருக்கின்றாயே! உமக்கு நான் ஒரு மாத காலம் அவகாசம் தருகின்றேன். அதற்குள் என்னுடைய நான்கு மகன்களுக்கும் போர் பயிற்சிகளை பயிற்றுவித்து அவர்களின் கீர்த்தியை அதிகப்படுத்த வேண்டியது உன்னுடைய பொறுப்பு. அதன் பின்பு உன் திறமைகளை நான் புரிந்து கொண்டு என்னுடைய படையில் உனக்கான பதவியை தருகின்றேன் என்றார் மன்னர்.


Share this valuable content with your friends