No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனும் அவனுடைய நான்கு மனைவிகளும்..!!

Mar 20, 2023   Ramya   112    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனும் அவனுடைய நான்கு மனைவிகளும்..!!

🌟 ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு குளத்தினை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்த குளத்தில் இரண்டு அன்னப்பட்சிகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டிருந்தன. அன்னப்பட்சிகள் சண்டையிடுகின்றதா? இதற்கு கூட பகை இருக்கின்றதா? என்று ஆழ்ந்து பார்க்கின்ற பொழுது தான் அவன் புரிந்து கொண்டான். இது சண்டை அல்ல.. காதலின் ஊடல் நிலையில் இருக்கின்றன என்று.

🌟 அந்த காட்சிகள் அவனுடைய மனதில் பழைய நினைவுகளை வெளிப்படுத்த துவங்கின. தனது வாழ்க்கை எங்கே ஆரம்பித்தது என்றும் புரியவில்லை.. இப்பொழுது போய் கொண்டிருக்கும் இடம் எதுவென்று தெரியவில்லை..

🌟 அன்னப்பட்சிகளின் காதல் ஊடலை பார்த்த சீவகனுக்கு தனது மனைவிகளை பற்றிய நினைவுகள் வர துவங்கின. தன்னை திருமணம் செய்து கொண்ட ஒவ்வொரு பெண்மணிகளும், ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்கள்.

🌟 காந்தருவதத்தையை யாழ் போட்டியில் வென்று, அவளை மணந்த பிறகு தான் அவளிடத்தில் இருக்கக்கூடிய பல நல்ல குணங்களை புரிந்து கொண்டேன். ஆனால் அதற்கு முன் அவள் மிகுந்த அழகுடையவள் என்று எண்ணினேன். ஆனால் திருமணத்திற்கு பின்பு தான் அவள் கல்வியில் சிறந்தவள் என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படக்கூடியவள் என்றும், மந்திர தந்திரங்களில் கை தேர்ந்தவள் என்றும் புரிந்தது.

🌟 காந்தருவதத்தையை தொடர்ந்து குணமாலையை பற்றி சிந்தித்தான். அதாவது, பண்பின் உறைவிடமாக இருந்த குணமாலையை மதம் பிடித்திருந்த யானையின் பிடியிலிருந்து காப்பாற்றி திருமணம் செய்து கொண்டேன்.

🌟 பாம்பின் நஞ்சேறி, யாராலும் காப்பாற்ற முடியாது என்று கைவிடப்பட்ட நிலையில் இருந்த பதுமையை காப்பாற்றி, அரசரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு திருமணம் செய்தேன். பின் நாணம் என்பதே தெரியாமல் இருந்த செல்வ மகளான கேமசரியையும் திருமணம் செய்தேன்.

🌟 இதில் எல்லாம் என்னுடைய செயல் என்பது என்ன இருக்கின்றது? விதியின் படி அனைத்து நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் இப்பொழுது காந்தருவதத்தை என்ன செய்து கொண்டிருப்பாள்? அவளுடைய உதவியை மறுத்து அவளை விட்டு பிரிந்து வந்து விட்டேன். என்னை நினைத்து அழுது கொண்டிருப்பாளா? அல்லது மனம் உடைந்திருப்பாளா? காந்தருவதத்தை எப்பொழுதும் அவ்விதம் நடந்து கொள்ள மாட்டாள். ஏனென்றால் அவள் நடைமுறை சூழ்நிலைகளை நன்கு அறிந்தவளாவாள்.

🌟 ஆனால் குணமாலையோ அப்படி இல்லை? திருமணம் ஆன உடனே அவளை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டானதை எண்ணி மிகுந்த மன வேதனை அடைந்திருப்பாள். அதனால் குற்ற உணர்வுடனும் இருந்திருப்பாள். அதுபோல் தான் பதுமையும், கேமசரியும். எந்தவொரு தவறும் செய்யாமல் அவர்களை விட்டு பிரிந்து வந்திருக்கின்றேன் என்று தன்னுடைய மனைவிகளை பற்றி சிந்தித்த வண்ணமாக இருந்தான்.


🌟 அப்பொழுது இவர்களை மட்டும் சிந்திக்கின்றோமே! நம்மை சார்ந்திருந்த பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவர்களுக்கு கட்டியங்காரனால் ஏதேனும் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதா? அவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பான்? என்று எதுவும் தெரியவில்லையே!

🌟 கட்டியங்காரனுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து என்னை எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்த எனது தந்தை எவ்வளவு துயரத்தில் இருக்கின்றாரோ? என்று சிந்தித்தான்.

🌟 எனது தம்பி நந்தட்டன், என்னை கைது செய்ததன் காரணமாக கட்டியங்காரன் மீது மிகுந்த கோபத்துடன் இருப்பான். கோபத்தில் அவன் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் இளம் கன்று பயம் அறியாது. கட்டியங்காரனை எதிர்ப்பதற்கான பயிற்சியும் அவனிடத்தில் குறைவாகத்தான் இருக்கின்றது.

🌟 என்னுடைய நண்பர்களான பதுமுகன், புத்திசேனன், சீதத்தன், நபுலன் மற்றும் விபுலன் ஆகியோர் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று யோசித்து கொண்டே இருக்க அவனுடைய மனதில் கவலையானது அதிகரித்தது.

🌟 தன்னை சூழ்ந்திருந்த அனைவரையும் தனியே துன்பத்தில் ஆழ்த்தி விட்டு இங்கு ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நினைத்து கொண்டிருந்தான். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு அம்பு அவனுடைய சிந்தனையிலிருந்து அவனை வெளியேற்றியது.

🌟 திடீரென்று வந்த அம்பினால் பதறிப்போன சீவகன் சுற்றும் முற்றும் பார்த்தான். அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது. அம்பு அவனை நோக்கி எறியப்படவில்லை. அவன் அமர்ந்திருந்த மரத்தில் இருந்த பழங்களை பறிப்பதற்காக குறி வைக்கப்பட்டது என்று. குறி தவறாக தன் மீது வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு அமைதி காத்தான்.


Share this valuable content with your friends