No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... உயிர்துறந்த காப்பாளனும் மன்னனும்...!

Feb 27, 2023   Ramya   161    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளம் விக்ரமாதித்தனை பார்த்து கதை சொல்லத் தொடங்கியது.


அர்த்தமன் என்னும் மன்னன் ஆண்டு வந்த அர்த்தமபுரம் என்ற நாடு செழுமையாகவும், அங்கு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் இருந்து வந்தனர். இதனை கண்ட பூமாதேவி அந்த நாட்டை நேசித்து வந்தாள்.

ஒருசமயம் குணசேகரன் என்னும் ஒருவன் மன்னனிடம் வேலைக்கேட்டு வந்தான். அவனுக்கு மன்னன், மெய்க்காப்பாளன் வேலையை கொடுத்தார்.

ஒருநாள் மன்னன் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, தொலைவில் பெண்ணொருத்தி அழும் குரல் கேட்டது. குணசேகரனை அழைத்து, யார் அழுகின்றார்? என பார்த்து, அவர்களது பிரச்சனையை தீர்த்து வை என்று கூறினார் மன்னன்.

மன்னன் கூறிய அடுத்த கணமே, அங்கிருந்து அழுகுரல் கேட்கும் திசையை நோக்கிப் புறப்பட்டு சென்றான் குணசேகரன்.

நாட்டின் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள். குணசேகரன் அப்பெண்ணின் அருகில் சென்று ஏனம்மா அழுகிறாய்? என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண், நான் தான் பூமாதேவி, இந்த நாட்டின் மன்னன், நாளை இறக்கப்போகிறான். அவனை எண்ணியே அழுது கொண்டிருக்கிறேன் என்றாள்.

இதைக்கேட்ட குணசேகரன் அதிர்ந்து போனான். என்னம்மா சொல்கிறாய்? எமது மன்னன் இறக்கக்கூடாது. இதற்கு ஏதேனும் வழி இருந்தால் கூறு என்று கேட்டான்.

அதற்கு பூமாதேவி, யாரேனும் தனது மூத்த ஆண்மகனை துர்க்கை அம்மனுக்கு பலி கொடுக்க மன்னன் உயிருடன் வாழ்வான் என்றாள்.

உடனே குணசேகரன், அவ்வளவு தானே! இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றான். மன்னன், இதையெல்லாம் மறைந்திருந்து கேட்டு, குணசேகரனை பின்தொடர்ந்தார்.

குணசேகரன் மன்னனை காப்பாற்ற சற்றும் தாமதிக்காமல், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மூத்த மகனை எழுப்பி கோவிலுக்கு அழைத்து சென்று துர்க்கை அம்மனுக்கு பலி கொடுத்தான்.

இதை கண்ட அவனுடைய மனைவியும், மகளும் மாண்டு போனார்கள். மூவரையும் இழந்த குணசேகரன், தனது உயிரையும் விட்டான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன், தனக்காக இவர்கள் உயிர்விட்டதை தாங்கிக்கொள்ளாமல் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்தார். அந்த நேரத்தில், துர்க்கை அம்மன் அவரது முன்னால் தோன்றி, தடுத்து நிறுத்தி இறந்தவர்களை பிழைக்க வைப்பதாக உறுதி அளித்து, மன்னனை இங்கிருந்து செல் என்றாள். மன்னன் சென்றதும் இறந்த அனைவரையும் உயிர்பெற செய்தாள்.

மறுநாள் மன்னன், குணசேகரனை அழைத்து நேற்று ஒரு அழுகுரல் கேட்டதல்லவா? அதை விசாரணை செய்தாயா? என்று கேட்டார்.

அதற்கு குணசேகரன், அந்த பெண் என்னை பார்த்ததும், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டாள் மன்னா. ஆகையால், என்னால் காரணத்தை தெரிந்துக்கொள்ள இயலவில்லை என்றான்.

பின் அரசவையில் மக்கள் அனைவரையும் அழைத்து, நடந்தவற்றை கூறி, குணசேகரனுக்கு ஏராளமான பொன்னும், பொருளும் அளித்து, அரசவையில் உயர் பதவியையும் அளித்தார் மன்னன் என கதையை முடித்தது.

பின்னர் வேதாளம், விக்ரமாதித்தனை பார்த்து, இக்கதையில் யாருடைய தியாகமானது போற்றுதலுக்குரியது? எனக்கேட்டது.

அதற்கு விக்ரமாதித்தன் குணசேகரன் செய்த செயலானது, ஒரு மெய்க்காப்பாளனுக்கு உண்டான கடமை.

அவனுடைய மகனுக்காக தாயும், மகளும் உயிர்விட்டது அவர்களுடைய இரத்த பாசத்தினால் நடந்தது.

ஆனால், மன்னன் உயிரை விட துணிந்தது தான் தியாகம். அதுவே, போற்றுதலுக்குரியது. மக்களுக்காக, ஒரு மன்னன் உயிரை தியாகம் செய்ய துணிந்த எண்ணமே சிறப்பை தரும் என்றான்.


Share this valuable content with your friends