No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - யாழிசை போட்டியில் வெற்றிபெற்ற சீவகன்..!!

Feb 23, 2023   Ramya   263    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... யாழிசை போட்டியில் வெற்றிபெற்ற சீவகன்..!!

🌟 சீவகனை பார்த்த வீணாபதி உங்களை பார்த்தால் வாள் வீரரை போல இருக்கின்றீர்கள். உங்களால் யாழை இசைக்க முடியுமா என்று வினவினாள். அதை தெரிந்து கொள்ளத்தான் இந்த போட்டி நடைபெறுகின்றது என்ற சீவகன் எந்தவித படபடப்பும் இல்லாமல் இயல்பாக இருந்தான்.

🌟 விட்டால் இவர்கள் இருவரும் பேசி கொண்டே காலத்தை வீண் செய்து விடுவார்களோ? என்று எண்ணிய காந்தருவதத்தை காலத்தை வீணாக்காதே வீணாபதி போட்டிக்கு தேவையான யாழினை அவருக்கு எடுத்து கொடு என்று கூறினாள்.

🌟 காந்தருவதத்தையுடைய அவசரத்தை புரிந்து கொண்டு வீணாபதியும் போட்டிக்கு தேவையான யாழினை வரிசையாக கொண்டு வந்து வைத்தாள். இதில் உமக்கு வேண்டிய யாழினை நீயே தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறினாள்.

🌟 அவள் கொண்டு வந்த யாழின் வரிசையில் முதல் யாழின் மீது இருந்த உரையை அகற்றினான். அந்த யாழினுடைய மரப்பகுதிகளை தட்டி பார்த்தான். இந்த யாழ் எனக்கு வேண்டாம் என்று கூறினான்.

🌟 ஏன் இந்த யாழினை வேண்டாம் என்று கூறுகின்றீர்கள்? இந்த யாழ் நன்றாக தானே இருக்கின்றது? என்று கேட்டாள் வீணாபதி.

🌟 யாழானது நன்றாக இருந்தாலும் அதில் உள்ள நரம்புகள் சரியான முறையில் இருந்தால் தானே மனதிற்கு இதமான இசைகள் வெளி வரும். நரம்பு சரியில்லாத இந்த யாழை வாசித்தால் இசை எப்படி வரும் என்று கூறினான்.

🌟 இரண்டாவது யாழினை தட்டி பார்த்ததும் இந்த யாழ் நீரில் போட்ட மரத்தினால் செய்யப்பட்டதாகும். எவ்வளவு மெலிதாக இருக்கின்றது பாருங்கள். இதுவும் வேண்டாம் என்று கூறி அந்த யாழினையும் வேண்டாம் என்றான்.

🌟 சீவகனோ முதல் இரண்டு யாழ்களையும் தட்டிக்கழித்துவிட்டு, மூன்றாவதாக உள்ள யாழை கண்டான். அந்த யாழையும் பார்த்து அழுகல் மரத்தினால் செய்யப்பட்டது இந்த யாழும் வேண்டாம் என்றான். அடுத்த உள்ள யாழ் வாளினால் வெட்டப்பட்ட மரத்தினால் செய்யப்பட்டது. இதுவும் வேண்டாம் என்றான்.

🌟 இது இடியினால் தாக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்டது. இந்த யாழில் வாசித்தால் சரியான இசை வெளிப்படாது என்றான்.

🌟 இந்த யாழிசை போட்டியை கண்டு கொண்டிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. இவன் என்ன ஒவ்வொரு யாழையும் வேண்டாம் என்று நிராகரித்துக் கொண்டே வருகின்றான். போகின்ற போக்கை பார்த்தால் இவன் எந்த யாழையும் வாசிக்க மாட்டான் போல. அனைத்தும் தரமற்ற யாழ்கள் என்று கூறிவிடுவானோ? என்று எண்ண தொடங்கினார்கள்.

🌟 சீவகன் யாழினை தேர்ந்தெடுக்கும் பொழுது இறுதியாக அவன் கண்களில் காந்தருவதத்தையை போல தேடல்கள் கொண்ட யாழ் ஒன்று தென்பட்டது. அந்த யாழினை கண்டதும் நங்கையின் நலத்தது (நலத்தது : விரும்புதல்) என்று கூறினான். சீவகனின் இந்த கூற்றினை கேட்ட காந்தருவதத்தை மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். தன்னை ஒரு யாழிற்கு உவமையாக கொண்டு மதிக்கின்றான் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டாள்.

🌟 இவ்விடத்தில் நங்கை என்று தன்னை சொன்னானா? அல்லது பொதுவான ஒரு மங்கையை கூறினானா? என்று தடுமாற்றம் அடைந்தாள். இருப்பினும் அவனுடைய ரசனையை கண்டு இவள் மெய் மறந்தாள்.

🌟 தனக்கான யாழினை தேர்ந்தெடுத்து கொண்ட சீவகன் இசைக்க துவங்கினான். ஒவ்வொருவருடைய வயதிற்கு எந்தவிதமான பாடல்கள் பிடிக்கும் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தது போல, பிரிவால் வாடும் காதலியின் நெஞ்சை சித்தரித்து காதல் பாட்டினை பாட துவங்கினான்.


🌟 சீவகனின் பாடலை கேட்ட மக்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இசையின் வெள்ளத்தில் அவரவர்கள் தங்களையே மறக்கவும் துவங்கினார்கள்.

🌟 சீவகன் முடித்ததும் காந்தருவதத்தைக்கான வாய்ப்பு தரப்பட்டது. அதில் காந்தருவதத்தை இளவேனிற் பருவத்தில் தலைவனோடு கூடி மகிழும் தலைவியின், இனிய மகிழ்ச்சியான நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக பாடினாள்.

🌟 இருவருக்கும் இடையில் யார் பாடுகின்றார்கள்? யார் இசைக்கின்றார்கள்? என்பதே புரியாத வண்ணமாக ஸ்ருதியை சுத்தமாக இயக்கினார்கள். சில நேரங்களில் சீவகனின் சுதி தவறினாலும், யாழானது அதை சரி செய்தது.

🌟 நடனம் ஆடுகின்ற பொழுது சீவகன் மீட்டிய இசையினுடைய இனிமையினால் அவளுடைய மனமானது ஒரு நிலையில் இல்லாமல் கடலில் நிற்கின்ற கப்பலை போன்று மேலும் கீழமாக ஏறி இறங்கியது. எல்லைகள் அற்ற காதல் உணர்வுகள் அவளிடத்தில் உருவாக துவங்கின.

🌟 இந்த மாதிரியான உணர்வுகளுக்கு மத்தியில் அவளால் போராடவும் முடியவில்லை. நடனத்தின்பால் மனதினை செலுத்தவும் முடியவில்லை. நடனத்தில் அவள் மனம் சென்றாலும் அவனை காணுகின்ற கண்கள் மூலமாக அவளுடைய கைகளும், கால்களும் நாணத்தின் நூல்களினால் கட்டுப்பட்டது. அடைபட்ட நீரானது அணையில் இருந்து எவ்வளவு வேகமாக வெளிப்படும், அவ்வளவு வேகத்தில் தன்னுடைய நிலையை மறந்து அவனுடைய தோளில் சாய்ந்து தன்வசம் இழந்தாள்.


🌟 அவளையும் மறந்து பாரதத்தையும் மறந்து நின்றாள். இறுதியாக சீவகனே போட்டியில் வெற்றி அடைந்தான். சீவகன் வெற்றியடைந்த செய்தியை மக்கள் அனைவரும் ஏதோ போட்டியில் தாமே வெற்றி பெற்றது போல ஆரவாரம் செய்தார்கள். சீவகனை அடைய இவள் என்ன தவம் செய்தாளோ என்று அனைவரும் பாராட்டினார்கள்.

🌟 யாழிசை போட்டியில் வெற்றி பெற்ற சீவகனுக்கு மாலையை அணிவிப்பதற்காக காந்தருவதத்தை மாலை எடுக்க வந்தாள். அப்பொழுது வீணாபதி அவளின் அருகில் வந்து என்னிடம் மட்டும் ஒரு உண்மையை சொல்வாயா, இதில் யார் யாரை வென்றது? என்று சிரித்த வண்ணமாக கேட்டாள்.

🌟 என்ன கூறினாய் எனக்கு எதுவும் புரியவில்லையே என்று காந்தருவதத்தையும் கூற, நீங்கள் இந்த உலகத்தில் இருந்தால் தானே நான் கூறுவது புரியும். போட்டியில் சிலர் வேண்டுமென்றே சுருதியை விலக்கினார்கள் என்பதை நான் அறிந்தேன் என்று கூற, சீ..! என்று நாணமாக கையை ஓங்கினாள்.

🌟 போட்டியில் கலந்து கொண்ட மற்ற அரசர்கள் அனைவரையும் தோற்கடிக்க செய்து சீவகன் வெற்றியடைந்தான் என்ற செய்தி மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அரசர்கள் மத்தியில் இந்த செய்தியானது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.


Share this valuable content with your friends


Tags

அரிசியை கனவில் கண்டால் என்ன பலன்? மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?< பாம்பு தாலி எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் தினசரி ராசிபலன்கள் (04.08.2020) வேதாளம் துருவனின் முடிவு ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா? திருப்பாவை PDF வடிவில் daily rasipalan -06.11.2018 in pdf format அமாவாசை அன்று சாந்தி முகூர்த்தம் வைக்கலாமா? புறா வளர்ப்பது வீட்டிற்கு நன்மையா? தீமையா? மாங்கல்யம் ரஞ்சன் ராய் டேனியல் செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... வெளிப்படையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! புரட்டாசி மாதம் பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றலாமா? matham நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? தை மாத பிரதோஷ தினத்தில் பெண் வயதிற்கு வரலாமா? வீட்டு வாசலில் வாழை மரம் வைக்கலாமா? 20.04.2021 Rasipalan in PDF Format!!