No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதை... மந்திரி இறந்தது ஏன்? விக்ரமாதித்தனின் பதில்..!!

Feb 22, 2023   Ramya   120    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளம் விக்ரமாதித்தனுக்கு ஒரு கதை சொல்லத் துவங்கியது.

குணபுரம் என்ற நகரத்தை ஆண்டு வந்த ஜனவல்லபன் என்ற அரசன், ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வீரகேசரி என்ற மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டினான். தன் நாட்டின் நலனைப் பற்றி அக்கறை ஏதுமில்லாமல் இருந்தான்.

மந்திரி வீரகேசரி நாட்டின் நிர்வாகத்தை மேற்கொண்டு அன்றாடம் இரவு பகலாக உழைத்ததால் சோர்ந்து காணப்பட்டான். ஒருநாள் ஓய்வு எடுப்பதற்காக அவன் ராமேஸ்வரம் வரை சென்று அங்கு கடற்கரையில் அமர்ந்தவாறு இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது கடல் நடுவில் ஒரு அழகான மரம் தோன்றியது. அதில் ஒரு அழகான பெண் தன் கையில் ஒரு இசைக்கருவியுடன் பாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று கடல் அலைகளின் நடுவே அவளும், அவள் வீற்றிருந்த மரமும் மறைந்து விட்டது. தன் நாடு திரும்பிய மந்திரி அரசனைச் சந்தித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறினான்.

அதேபோல் அரசனும் ராமேஸ்வரம் சென்று கடற்கரையில் அமர்ந்தவாறு இயற்கை காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த கடலில் ஒரு மரம் தோன்றியது. அதன் மேல் இதுவரை அவன் பார்த்திராத ஒரு அழகானப் பெண்ணைக் கண்டான்.

அவளை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளை நோக்கிச் சென்று அந்த மரத்தில் ஏறினான். அடுத்த கணம் அவன் பாதாள லோகத்திலிருப்பதை உணர்ந்தான். அந்த அழகான பெண் அவனைப் பார்த்து நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? என்று வினவினாள். அரசன், உன் அழகுக்கு வசப்பட்டு உன்னை அடையவே இங்கு வந்தேன் என்றான். அவள் கிருஷ்ண பட்சம் பதினான்காம் நாள் நீங்கள் என்னை அடையக்கூடாது என்ற நிபந்தனையுடன் அரசனை மணக்க சம்மதித்தாள்.

கிருஷ்ண பட்சம் பதினான்காம் நாளில் ஒரு ராட்சச பருந்து அங்கு வந்து அரசனின் மனைவியை விழுங்கி விட்டது. இதைக் கண்ட அரசன் உடனே அந்தப் பருந்தின் மேல் பாய்ந்து அதைக்கொன்று அதன் வயிற்றிலிருந்து அவளை மீட்டான்.

அரசன் பருந்து வந்து உன்னை ஏன் விழுங்கியது? என்று கேட்டான். என் தந்தை உணவு உட்கொள்ளும் நேரத்தில் நான் அவரருகில் இல்லாத காரணத்தால் அவர் கோபம் கொண்டு என்னை இவ்வாறு சபித்து விட்டார்.

பின் ஒரு மானிடன் வந்து அந்த பருந்தை வெட்டி வீழ்த்தி உன்னை இந்த சாபத்திலிருந்து காப்பாற்றுவான் என்று விமோசனம் கூறினார். அவர் கூறியது இன்று நிறைவேறிவிட்டது என்றாள்.

பிறகு இருவரும் அரசனின் ராஜ்யத்திற்கு சென்றனர். அரசனின் வருகையைக் கண்ட மந்திரி வீரகேசரி மற்றும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

சிலகாலம் கழிந்ததும் அந்தப் பெண் தந்தையை பார்க்க அனுமதி கேட்டாள். அரசனும் அனுமதித்தான். ஆனால் அவளின் முயற்சிகள் கைகூடவில்லை. அரசன், இதற்கான காரணத்தை வினவினான். அவள் நான் மானிடர்களோடு சேர்ந்து வாழத் தொடங்கி மனிதர்களுக்குரிய ஆசை, பாசங்களில் என்னை லயப்படுத்தி கொண்டதன் விளைவு என்னுடைய மந்திர சக்தி பலனற்று போய்விட்டது என்றாள்.

அரசன் உடனே நகரம் முழுவதும் இரண்டாவது தடவையாக விழா கொண்டாட்டத்திற்கு ஆணையிட்டான். மகிழ்ச்சிகரமான விழா தொடங்கப்பட்டவுடன் மந்திரி வீரகேசரி மனமுடைந்து இறந்துவிட்டான்.

விக்ரமாதித்தா! நகரத்தில் விழாக்கள் தொடங்கி கொண்டாடப்படும் தருவாயில் மந்திரி வீரகேசரி ஏன் இறந்தான்? என கேட்டது வேதாளம்.

அரசன் ராஜ்யத்தைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாது அந்தப்புரத்தில் ராணி மற்றும் மனைவிமார்களுடன் தன்னுடைய முழு நேரத்தையும் கழித்தால் அந்த ராஜ்யம் உருகுலையத் தொடங்கிவிடும். ஆதரவு கிட்டாத பிரஜைகள் பரிதாபத்திற்குரியவர்கள், அழிவுப் பாதையில் செல்லும் ராஜாங்கம் பரிதாபத்திற்குரியது. இத்தகைய எண்ணங்கள் மேலிட வீரகேசரி மனமுடைந்து இறந்து விட்டான் என்று விக்ரமாதித்தன் பதிலளித்தான்.


Share this valuable content with your friends