No Image
 Mon, Jul 08, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... நாகத்தீவை நோக்கி விசித்திர பயணம்...!!

Feb 18, 2023   Ramya   139    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் அந்த வேதாளம் ஒரு கதையை கூறியது.

பத்மநாபன் என்பவர் தனது மகளை அந்த ஊரிலுள்ள ஆனந்தன் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்தார்.

திடீரென்று ஒருநாள் அவரது மகள் பேசும் திறனை இழந்து விட்டாள். அவளை பரிசோதித்த வைத்தியர் அவளது பேச்சுத்திறனை மீண்டும் பெற நாகத்தீவில் காணப்படும் தசமூலம் என்ற மூலிகை வேண்டும். அதை கொண்டுவருவது சற்று கடினமான விஷயம் என கூறினார்.

அப்போது ஆனந்தன் தான் அந்த மூலிகையை கொண்டுவருவதாக கூறினான். எனவே தனது சீடன் சஞ்சயனையும் ஆனந்தனுக்கு பயணத்தில் துணையாக அனுப்பி வைத்தார் அந்த வைத்தியர். அவனுடன் தோழர்களான சிவநாதனும், கபாலியும் இணைந்து கொண்டனர்.

ஒரு படகில் அந்த நால்வரும் பயணித்து கொண்டிருந்த போது படகு உடைந்தது. அப்போது கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஆனந்தனுக்கு, உடைந்த படகின் ஒரு துண்டை கொடுத்து கரைசேர உதவினான் சிவநாதன்.

அப்போது ஒரு பெரிய அலை சிவநாதனை இழுத்துச் சென்றது. அவன் இறந்து விட்டான் என்று கருதிய மற்ற மூவரும் ஒரு தீவின் கரையில் ஒன்று சேர்ந்தனர். அப்போது அங்கே ஒரு பறக்கும் தட்டில் முதியவர் ஒருவர் பயணிப்பதை கண்டனர். அவரிடம் பேசிய போது இது நாகத்தீவு என்பதை அறிந்தனர். மேலும் தாங்கள் இத்தீவிற்கு வந்த நோக்கத்தை அவரிடம் விவரமாக கூறினர்.

அப்போது அம்முதியவர் தசமூலம் மூலிகை இத்தீவிலுள்ள மலையுச்சியிலிருக்கும் மாணிக்கபுரி நகரில் இருப்பதாகவும், அம்மலையுச்சிக்கு செல்ல பாதையில்லை. இப்பறக்கும் தட்டின் மூலமாகவே செல்ல முடியும் என்றும், உங்கள் மூவரில் யார் தனது இளமையை எனக்கு தருகிறீர்களோ அவர்களுக்கு தனது பறக்கும் தட்டை தருவதாக கூறினார்.

அப்போது சஞ்சயன் தானாக முன்வந்து தனது இளமையை அந்த முதியவருக்கு தருவதாக கூறினான். சில மந்திரங்களை ஜெபிக்க சஞ்சயன் முதுமையடைந்தான், அந்த முதியவர் இளைஞனானார். பிறகு அந்த பறக்கும் தட்டில் பயணித்த கபாலியும், ஆனந்தனும் மாணிக்கபுரியில் இறங்கினர். அங்கே பெரும்பாலான மக்கள் மனித உடலும், மிருகத் தலையுடனும் இருப்பதைக் கண்டனர்.

இந்த ஊரில் உள்ள மந்திரவாதி தனது சக்தி வாய்ந்த மந்திரக்கோலின் மூலம் இவ்வூரின் பெரும்பாலான மக்களை இப்படி அவன் மாற்றிவிட்டதாக கூறினர்.

அப்போது அவ்வழியே அந்த மந்திரவாதி செல்வதைக் கண்ட கபாலி, அவன் மீது பாய்ந்து சண்டையிட்டு அவனை அவ்வூர் மக்கள் உதவியுடன் ஒரு மரத்தில் கட்டி, மீண்டும் அம்மக்கள் அனைவரையும் முழுமனிதர்கள் ஆக்கினான்.

ஆனந்தனும், கபாலியும் செய்த உதவிக்கு கைமாறாக அந்த தசமூலிகையை அவர்களுக்கு கொடுத்தனுப்பினர். அதைப் பெற்றுக்கொண்டு பறக்கும் தட்டில் திரும்பிய இருவரும் சிவநாதன் அங்கிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். மேலும் சஞ்சயன் மீண்டும் இளைஞனாகியிருந்தான். இப்போது அந்த நால்வரும் அந்த பறக்கும் தட்டில் தங்களது ஊருக்கு திரும்பினர்.

ஆனந்தன் அந்த மூலிகையைக் கொண்டு பேசமுடியாத பெண்ணிற்கு சிகிச்சையளித்து, குணப்படுத்தி அவளை திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியிடம் பறித்த செங்கோலை கொண்டு அதன் மூலம் பொருளீட்ட எண்ணினான் கபாலி. அப்போது, அது வேலை செய்யவில்லை. மேலும் அது அவனை தாக்க ஆரம்பிக்க அவன் அந்த ஊரைவிட்டே ஓடினான்.

விக்ரமாதித்தா! கபாலி அந்த மந்திரக் கோலை பயன்படுத்த நினைத்த போது அது ஏன் வேலை செய்யவில்லை? மேலும் அது அவனை தாக்கவும் செய்தது ஏன்? எனக் கேட்டது வேதாளம். அதற்கு விக்ரமாதித்தன் மற்ற இருவரும் ஆனந்தனுக்கு உண்மையாக உதவி செய்தனர்.

ஆனால் கபாலி அந்த மந்திரக்கோலை அந்த மந்திரவாதியிடம் பெற்றது முதலே அதை தனது சுயநலத்திற்கு பயன்படுத்த எண்ணினான். அதற்கான தண்டனையை அவன் அந்த மந்திரக்கோலின் மூலமாகவே பெற்றான். என்று பதிலளித்ததும் வேதாளம் தான் முன்பிருந்த முருங்கை மரத்தின் மீதே மீண்டும் ஏறிக்கொண்டது.


Share this valuable content with your friends