No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனிடம் நந்தகோன் தன் மகளைப் பற்றி கூறுதல்...!!

Feb 08, 2023   Rathika   214    சீவக சிந்தாமணி 


சச்சந்தன் பற்றி சீவகனிடம் நந்தகோன் கூறுதல்..

🌟 சீவகனும் எதையும் அறியாதது போல, புதிதாக கதை கேட்பது போல நின்று அவரிடத்தில் யார் அந்த மன்னன் இவ்வளவு வளங்கள் நிறைந்த நாட்டை ஆட்சி செய்து, இன்றைய நிலைக்கு காரணமாக இருக்கக்கூடிய மன்னனை அமர வைத்தவன் யார்? ஏனென்றால் இன்று இந்நாட்டினை ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய மன்னனை நம்பிக்கை துரோகி என்று கூறுகின்றீர்கள் என எதுவும் அறியாதது போல வினவினான்.

🌟 நந்தகோன் சீவகனிடத்தில் அவர் தான் மக்களின் மன சிம்மாசனத்தில் இன்றும் மறையாமல் நிலையாக அமர்ந்திருக்கின்ற அரிச்சந்திரனாகிய சச்சந்தன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

🌟 மன்னருடைய மனைவி இன்றைய நிலையில் என்னவாக இருக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாததாக இருக்கின்றது. இருப்பினும் அவள் கர்ப்பமாக இருந்தாள். அன்றைய பொழுதில் அவளுடைய குழந்தையை ஈன்றெடுத்து இருந்தாள். அந்த குழந்தையின் வயது ஏறக்குறைய உன்னுடைய வயதாக தான் இருக்கும்.

🌟 உன்னை பார்க்கின்ற பொழுதெல்லாம் எனக்கு அவனுடைய எண்ணமும், சிந்தனைகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் அவன் நிச்சயமாக வருவான். தன்னுடைய தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணமாக இருந்தவர்களை அழித்து அவன் தந்தை இழந்த நாட்டை மீண்டும் பெறுவான். அவன் ஒருவன் தான் இந்த நயவஞ்சகனை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் ஆகும். அவனுக்காக தான் இந்த நாட்டு மக்களும் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவன் வருவான் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருக்கின்றது.

🌟 சூரியன் மறைந்ததும் கருமையான இருள் சூழ்ந்து வானத்தை முழுமையாக மறைத்துக் கொள்ள முடியாது. அது போல் தான் மக்களுடைய மனதில் நிலை கொள்ளாத மன்னர்களும், கொடுமையான ஆட்சிகளை செய்கின்ற மன்னர்களும் நிலைத்து வாழ்ந்திருக்கின்றார்கள் என்று எந்த ஒரு சரித்திரமும் பேசியதில்லை.

🌟 உன்னுடைய செயல்களையும், பேச்சுக்களையும் கேட்கும் போதெல்லாம் இந்த சிந்தனைகள் என்னிடத்தில் அளவுக்கு அதிகமாக ஏற்படுகின்றன. இந்த எண்ணத்தை உன்னிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது. அதனால் தான் உன்னிடத்தில் நான் என்ன நினைக்கிறேனோ அனைத்தையும் கூறி விட்டேன். அதிகமாக பேசி இருந்தால் என்னை மன்னித்துவிடு. இது பொதுவான விஷயமாகும். நாட்டு அரசியல். இனி நம் வீட்டு அரசியலுக்கு செல்வோமா.

🌟 நாங்கள் இடையர் குலத்தில் பிறந்தவர்கள். கண்ணனை வழிபடக்கூடியவர்கள். அவனுடைய பெயரைத் தான் எனக்கு வைத்தார்கள். கோவிந்தன் என்று என்னை அழைப்பார்கள். எனக்கு வாய்த்த மனைவி மகா குணவதியாவாள். என்னுடைய விருப்பு, வெறுப்புகளை அறிந்து செயல்படக் கூடியவள். நல்ல வாழ்க்கை துணைவர்.

🌟 நான் எனக்கு ஒரு ஆண் மகன் பிறப்பான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பெண் குழந்தை பிறந்து விட்டாள். என்ன ஆண் குழந்தையாகப் பிறந்து இருந்தால் நான் சேமித்து வைத்திருக்கக் கூடிய அனைத்து சொத்துக்கும் வாரிசாக இருந்திருப்பான்.


நந்தகோன் தன் மகளைப் பற்றி புகழ்தல்..

🌟 ஆனால் பெண் குழந்தை பிறந்ததும் என்னுடைய மனைவி அடைந்த மகிழ்ச்சி என்பது மட்டற்றதாக இருந்தது. அவளைப் பார்த்த அந்த நொடியில் திருமகளே என் வீட்டில் மகளாகப் பிறந்து விட்டாள் என்று எண்ணினேன். அவள் பிறந்து வளர வளர எங்களுடைய செல்வாக்கும், செல்வமும் அதிகரிக்கத் தொடங்கியது.

🌟 இன்றைக்கு நான் இந்த சமுதாயத்தில் ஒரு பெரும் புள்ளியாக இருக்கின்றேன் என்றால் அதற்கு முழு காரணம் என் மகள் தான். என் மகள் பிறந்ததும் அவளுடனே என்னுடைய அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்துவிட்டது போல எனக்கு தோன்றியது. அவளுடைய புன்னகை பூத்த முகத்தை பார்த்துவிட்டு எங்கே நான் சென்றாலும் அங்கெல்லாம் மகிழ்ச்சியும், பொன்னுமாக கிடைத்தது.

🌟 என்னுடைய பாட்டனார் இரு நூறு பசுக்களை வைத்திருந்தார். என்னுடைய தந்தையார் அதை இரண்டாயிரமாகப் பெருக்கினார். இப்பொழுது என்னிடம் இருபதாயிரம் பசுக்கள் இருக்கின்றன.

🌟 பசுக்கள் தானே நம்முடைய செல்வம். நிலம், நீர் இவற்றில் விளையும் பயிர்கள் ஒரு நாட்டின் அடிப்படை செல்வ வளத்தில் குறிப்பிடும். அதற்கு அடுத்தபடியாக இருப்பது பசு வளமாகும். பொன்னும், மணியும் இல்லாமல் இருந்தாலும் உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் பாலும், சோறும் இல்லாமல் எவராலும் உயிர் வாழ முடியாது. அது மட்டும் அல்லாமல் இந்த ஊரிலேயே நான் தான் இடையர்களின் தலைவன். என்னுடைய ஒரே மகளை உனக்கு மணம் முடித்துத் தர விரும்புகிறேன்.

🌟 ஓ..! உன்னிடம் என்னைப் பற்றி இவ்வளவு தெளிவாக கூறினேன். ஆனால் என் மகளைப் பற்றி உன்னிடம் கூற மறந்துவிட்டேனே. அவள் பண்பிலும், குணத்திலும் சிறந்தவள். அவள் அன்னையை போன்றவள். மனதிற்கு பிடித்தவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படக்கூடியவள். அனைவரையும் அனுசரித்துச் செல்வாள். சிறிது காலம் அவளிடம் பழகினாலே அவளை ரொம்ப பிடித்து விடும். அவளை பிரிவதற்கு மனமே வராது. நீ மட்டும் என்னுடைய மகளை திருமணம் செய்து கொண்டால் என் மனைவி, மகள் பெற்ற பலனை முழுமையாக அடைந்து விடுவாள் என்று கூறினார்.


🌟 ஆனால் சீவகன் எதையும் பேசாமல் அமைதியாக நந்தகோன் கூறியதைக் கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்தான். ஆனால் அவனுடைய மனதில் உள்ள எண்ணங்கள் மாறுபாடாக இருந்தது.

🌟 சீவகனின் சிந்தனை ஓட்டங்களை புரிந்துகொண்ட நந்தகோன் ஏன் அமைதியாக இருக்கின்றாய்? ஜாதி வேறுபாடு நம்மிடையே இருக்கும் என்று நினைக்கிறாயா? என் மகள் உன்னுடைய மனைவியாக மாறிவிட்டால் ஜாதி பற்றிய பேச்சுக்கள் இங்கே இருக்காதே.

🌟 மனிதர்களாகிய நாம் மட்டும் தான் இன்றும், என்றும் ஜாதியை பற்றி பேசிக் கொண்டே இருக்கின்றோம். ஆனால் நம்மைப் படைத்தவன் எந்த ஜாதி வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரிடத்திலும் ஒரே கருணை கொண்டவனாக மட்டுமே இருக்கின்றான்.

🌟 வள்ளியின் கணவனான முருகப்பெருமானின் பெயரை சொல்லும் பொழுது அனைவரின் மனமும் குளிரும் அல்லவா. சர்வேஸ்வரனின் மகனான முருகன் குறமகளை மனம் செய்து கொண்ட பொழுது அவனுடைய அன்னையான பார்வதி எந்தவொரு வார்த்தையும் சொல்லவில்லை.

🌟 உமக்குத் தெரியும் தேவேந்திரனின் மகள் தெய்வானையை அவர் ஏற்கனவே திருமணம் செய்து இருக்கின்றார். ஆனாலும் அவளிடத்தில் இருப்பதைவிட வள்ளியின் மீதுதான் முருகனுக்கு ஆசைகள் அதிகமாக இருந்தன என்று மற்றவர்கள் கூற நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

🌟 வள்ளி எங்கள் குலத்தைச் சார்ந்த பெண் தான். மனதிற்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அதற்குப் பிறகு நாம் எதையும் யோசிக்க வேண்டியது இல்லை. நான் உன்னிடத்தில் என்ன உரைத்தாலும் நீ அனுபவித்தால் மட்டுமே அதைப் பற்றிய புரிதல் உன்னிடத்தில் ஏற்படும். ஒரு முறை நீ அவளை வந்து பார் அதற்குப் பிறகு நீயே அவளை வேண்டாம் என்று கூறமாட்டாய் என்றார்.

🌟 சீவகனும் நந்தகோன் கூறியதிலிருந்து ஒரு புதிய தகவலை அறிந்து கொண்டான். அதாவது சச்சந்த மன்னருடைய மகனின் வரவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும், தனக்கான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அருகில் இருப்பதையும் புரிந்து கொண்டான்.

🌟 ஆனால் இன்றைய சூழ்நிலையில் இடையர்களின் தலைவருடைய மகளை திருமணம் செய்து கொள்வது என்பது முறையாக இருக்காது. படைகளை பெருக்க வேண்டும் என்பதில் சீவகன் நிலையாக இருந்தான். அவனுடைய குருவின் ஆலோசனைகளும் அவன் மனதில் ஆழ பதிந்து இருந்தது.

🌟 அதாவது தனி மரம் தோப்பாகாது. அரசனுடைய மகளைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உனக்கு படை உதவி கிடைக்கும். அந்த படைகளின் மூலமாக உன்னுடைய இழந்த நாட்டினையும், தந்தைக்கு இழைத்த கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்து உன்னால் வெற்றிகொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.


Share this valuable content with your friends