No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜோதிடம் உண்மையா ?

Jun 25, 2018      591    ஆன்மிகம் 

ஜோதிடத்தின் அடிப்படை என்பது வானியல் சாஸ்திரமாகும். ஏனெனில் வானியல் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள கிரகங்கள், நட்சத்திரங்களின் இயக்கங்களை அடிப்படையாக வைத்து இயங்குவது ஜோதிட சாஸ்திரமாகும்.

கிரகங்கள், நட்சத்திரங்கள் பூமியில் உள்ள உயிர்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை கணக்கிட்டு அதனால் விளையும் பயன்களையும், தீமைகளையும் எடுத்துக்கூறும் வல்லமை உடைய நம் முன்னோர்களால் இன்றைய தலைமுறைக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதமே ஜோதிடம் ஆகும்.

ஜோதிடம் என்றாலும் சோதிடம் என்றாலும் பொருள் ஒன்றே.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு புதிய கிரகம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய பல லட்சம் செலவு செய்து அதற்கான இயந்திரங்களை கொண்டு ஆய்வு செய்கின்றனர். ஆனால் நம் முன்னோர்களோ எவ்விதமான செலவும் இன்றி வானில் சூரியன் முதலிய நவகோள்கள் இருப்பதையும் அவற்றிற்கு இடையேயான தொலைவு மற்றும் அவற்றின் சுற்றுக் காலங்களையும் எடுத்து கூறினர்.

உலகில் பிறந்த அனைத்து உயிர்களையும் இந்த நவகிரகங்கள் தங்களின் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கின்றன. தமிழர்களால் வரையறுக்கப்பட்ட அறுபத்தி நான்கு ஆயக்கலையில் ஜோதிடம் எனும் வான சாஸ்திரமும் உள்ளது.

ஜோதிடம் - ஜோதி + இடம்

ஜோதிடம் என்பது மனிதன் தன் மனதில் கொண்டுள்ள இருளை விலக்கி அறிவு என்னும் ஒளியை அளிக்கக்கூடியது. இதற்கு ஒளி பற்றிய சாஸ்திரம் என்றும் பெயருண்டு.

ஜோதிடமும் மருந்துவமும் :

அன்றைய காலக்கட்டங்களில் இன்றைக்கு இருக்கும் மருத்துவ வசதிகள் என்பது இல்லை. ஆனால், நோயாளிக்கு மருந்து தயாரித்த மருத்துவரே ஜோதிடம் அறிந்த நபராக இருந்தார்.

மருந்துவரே இன்றைய கிரக நிலைகளையும் ஆராய்ந்து தன்னிடம் வந்துள்ள நோயாளிகளின் உடலில் ஏற்பட்ட நோய்களை அகற்றியுள்ளார். ஆகவே, கிரகங்களின் தாக்கங்களினால் நமது உடலில் பல விதமான மாற்றங்கள் உண்டாகுகின்றன என்பதை நாம் இங்கு அறிய இயலும்.

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் அமைந்துள்ள விதத்தை கொண்டு அவருக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை எடுத்துக்கூறி நிவர்த்தியும் செய்ய இயலும்.

ஜோதிடத்தில் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் உடலமைப்பு விவரங்களை அறிய முடியுமா?

ஒருவர் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் அமைப்புகளை வைத்து அவரின் எண்ணங்கள் மற்றும் உடலமைப்பு பற்றியும் உடலில் உள்ள வடுக்கள் மற்றும் மச்சங்கள் வரைக்கும் சொல்ல இயலும்.

யாரென்று தெரியாத ஒரு நபர் இன்றைய சூழலில் அனுபவித்து வரும் இன்னல்களையும், நடந்து முடிந்த நிகழ்வுகள் மற்றும் அவரின் எதிர்காலம் பற்றிய வினாவிற்கு உரிய விடையை ஜோதிடம் மூலம் எடுத்துக்கூற இயலும்.

குழப்பங்களுடன், சங்கடத்துடன் தன்னை காண வரும் நபர்களின் வாழ்க்கையில் உள்ள இன்ப, துன்ப நிகழ்வுகளையும் எடுத்துக்கூறி அவருடைய மனதில் இருந்த ஐயம் நீக்கி அவரை தெளிவடைய வைக்கும் ஜோதிடர் ஒரு மனநல மருத்துவராகவும் செயல்படுகின்றார்.

ஜோதிடம் உண்மையா?

நம்மை ஆட்டுவிக்கும் இந்த கிரகங்கள் இருக்கும்வரை ஜோதிடம் என்பது உண்மையானதே.

இன்றளவும் பல நிறுவனங்களில் ஜோதிடம் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

ஜோதிடம் என்பது நமது எதிர்கால வாழ்க்கையில் ஏற்பட போகும் இன்ப, துன்ப நிகழ்வுகளை எடுத்துக்கூறும் ஒரு சிறந்த கால கண்ணாடி ஆகும்.

கண்ணாடி நாம் பார்க்கும் விதத்தை கொண்டு அதற்கான பிம்பத்தை பிரதிபலிக்கும். அதை போல் தான் ஜோதிடம் என்னும் காலக்கண்ணாடி மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

ஜோதிடர் பொய்யாகலாம் ஆனால் ஜோதிடம் என்பது பொய்யாகாது


Share this valuable content with your friends