எல்லா இடங்களுக்கும் எந்த வகையான கால கட்டத்திலும் பயணம் செய்யக்கூடிய நாரத முனிவர் விந்திய மலையில் சிவதரிசனம் செய்து கொண்டிருந்தபோது, அப்பகுதியை ஆட்சி புரிந்து கொண்டிருந்த விந்திய மன்னனான கிரிராஜன் திரிலோக சஞ்சாரியான நாரதரை கண்டார்.
விந்திய நாட்டு மன்னன் நாரதரை தனது அரசபைக்கு வரவேற்று அவரை உபசரித்து ஆசிப்பெற்று கொண்டார். பின்பு, அரியணையில் அமர்ந்து பல செயல்களை பற்றியும், உலகில் உள்ள இன்பங்களை பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடலின் போது விந்திய மன்னனான கிரிராஜன் தான் உலகிலுள்ள எல்லா வகையான இன்பங்களையும் கண்டு அனுபவித்து உள்ளேன். எனக்கு எவ்விதமான மனக்குறைவும் இல்லை என்று கூறினார்.
மன்னன் இவ்வாறு கூறியது சந்நியாசியான தன்னை இகழ்ச்சி செய்வதாக எண்ணினார் நாரதர். கலகத்தில் விருப்பம் கொண்ட தன்னை இகழ்ச்சி செய்த மன்னனை மானபங்கம் செய்ய எண்ணினார் நாரதர். அதற்கான காலமும் வந்தது. நாரதர் புறப்பட எழுந்த போது தன்னை ஆசிர்வதிக்க வேண்டிய கிரிராஜனுக்கு ஆசி வழங்கிய போது பெருமூச்சை விட்டு எழுப்பினார். நாரதரின் பெருமூச்சை கண்ட கிரிராஜன் நாரதரை நோக்கி முனிவரே தங்களின் இந்த பெருமூச்சிற்கு என்னகாரணம்? நான் ஏதாவது தவறு இழைத்துவிட்டேனா என்று கேட்டார்.
அதற்கு நாரதர் கிரிராஜனே உன்னிடம் தேவைக்கு அதிகமாக எல்லாமே இருக்கின்றன என்றார். மேலும், அவர் மேரு மலையின் சிகரங்களை கண்டு மேரு மலையானது உன் விந்திய மலையை விடப் பெரியதாகவும், அனைத்து தேவர்களாலும் மதிக்கப்பட்டு, அவர்களால் வசிக்கத்தக்க இடமாகவும், என்னவொரு உயரிய சிறப்பை பெற்றுள்ளது என்று கூறினார்.
நாரதரின் இந்த உரையாடல் கிரிராஜனின் மனதில் ஒருவிதமான சங்கடத்தை தோற்றுவித்தது. இருப்பினும் நாரத முனிவரிடம் எதையும் காட்டாமல் அமைதி காத்தார்.
இதுவரை மன்னனின் முகத்தில் காணப்பட்ட உற்சாகமானது தான் கூறிய பதிலால் காணப்படவில்லையே என்பதை உணர்ந்த நாரதர் நான் புறப்படுகிறேன் என்று கூறி அவ்விடம் விட்டு மறைந்தார்.
நாரதர் சென்ற பின்பு மேரு மலையின் உயரத்தை காட்டிலும் தன்னுடைய சிகரமான விந்திய மலையானது உயர்வானதாக இருக்க வேண்டும் என எண்ணினார் விந்திய மன்னனான கிரிராஜன். பின்பு, சிவபெருமானை எண்ணி பூஜை செய்து, அந்த மேருமலையை வெற்றி கொள்வேன் என்று கூறி, தனது அரசாட்சி இன்பங்களை விடுத்து விந்திய மலையில் ஒரு இடத்தில் ஓங்கார ரூபமான யந்திரம் ஒன்றை உருவாக்கி அதில் மண்ணால் செய்த சிவலிங்கத்தை நிறுவி சிவபெருமானுக்கு பக்தியோடு பூஜை செய்து வந்தார்.
சிவபெருமானை மனதில் எண்ணி ஆறு மாதங்கள் தானிருந்த இடத்தைவிட்டு நகராது அதாவது அசையாது இருந்து சிவலிங்க பூஜை செய்து வந்தார் கிரிராஜன். கிரிராஜனின் பக்தியால் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான், கிரிராஜனுக்கு காட்சியளிக்க உதயமானார். பல காலம் தவமிருந்து காணக்கிடைக்காத திவ்ய சொரூபமாய் மங்கல உருவம் கொண்டு காட்சியளித்தார் சிவபெருமான்.
சிவபெருமானைக் கண்ட தன்னுடைய கண்கள் காண்பது உண்மையா? என்னும் அளவில் கிரிராஜன் சிவபெருமானை வணங்கி நின்றார். அவ்வேளையில் சிவபெருமான், கிரிராஜனை நோக்கி உன்னுடைய பக்தியால் யாம் மனம் மகிழ்ந்தோம்!!.. வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார்.
சிவபெருமானை கண்ட மகிழ்ச்சியில் சர்வங்களை உள்ளடக்கிய சர்வேஸ்வரா!!... இவ்வுலகில் அனைத்திலும் இருக்கும் பரம்பொருளே!!.. இந்த விந்திய மலையானது மேரு மலையைக் காட்டிலும் உயரமாக வளரும் சக்தியை தாங்கள் அளிக்க வேண்டும் என்று வேண்டினார் கிரிராஜன்.
அதைக்கேட்ட சிவபெருமான், கிரிராஜன் வேண்டிய வரத்தினை கொடுப்பதற்கு முன் கிரிராஜன் வேண்டிய வரத்தினால் உலகில் உள்ள உயிர்களுக்கு தீங்கு விளையும் என்பதை உணர்ந்தார். இருப்பினும் கிரிராஜன் செய்த பூஜைக்கான பலனை அளிக்காமல் இருப்பது உசிதம் ஆகாது என்று எண்ணினார். எனவே, கிரிராஜன் வேண்டிய வரத்தினை ஒரு மறைபொருள் சார்ந்த கட்டுப்பாட்டுடன் அளித்தார்.
அதாவது சிவபெருமான், கிரிராஜன் வேண்டிய வரத்தினை அவ்விதமே அளித்தார். ஆனால், நீ பெற்ற இந்த வரத்தினால் ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின் என்னுடைய அடியாரால் இந்த பெரிய உருவம் கொண்ட மழையானது மீண்டும் சிறியதாக அடங்கும் என்று கூறினார்.
சிவபெருமான் கிரிராஜனுக்கு வேண்டிய வரத்தினை அளித்துக்கொண்டிருந்த அவ்வேளையில் தேவர்களும், முனிவர்களும் அவ்விடம் வந்து சர்வேஸ்வரனிடம், விந்திய மலையில் தாங்கள் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். எம்பெருமானும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கிரிராஜன் உருவாக்கிய ஓங்கார யந்திரத்தில் சுயம்பு லிங்கமாகவும், கிரிராஜன் பூஜித்த லிங்கத்தில் பார்த்திவ மூர்த்தியாகவும் தோன்றினார்.
இவ்விதம் உருவான மூர்த்தம்(லிங்கம்) ஓங்காரேஸ்வரர் மற்றும் அமரேஸ்வரர் என்ற திருநாமத்தோடு பக்தர்கள் அனைவராலும் வழங்கப்படுகின்றது. தேவர்கள் அனைவரும் மூர்த்தங்களை வணங்கி பல வரங்களைப் பெற்றனர். ஓங்காரேஸ்வரரின் ஜோதி லிங்கத்தை வழிபட மனதில் உள்ள கவலைகள் யாவும் அகன்று தெளிவு பிறக்கும்.