No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: அந்தகாசூரன் பிரம்மதேவரை எண்ணி கடுந்தவம் செய்தல் !! பாகம் - 92

Sep 24, 2018   Ananthi   569    சிவபுராணம் 

அசுர குலத்தைச் சேர்ந்த ஹிரண்யகசிபுவின் சகோதரரான ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுக்கு பிறந்த மகன் அந்தகாசூரன். பார்வை இல்லாத அந்தகாசூரன் பல கலைகளில் தேர்ச்சிப் பெற்று மாபெரும் அசுரனாக இருந்து வந்தான். அசுரர்கள் யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு மாபெரும் வீரனாகவும், உடல் பலாக்கிரமம் பொருந்திய அசைவுகளின் ஒலிகளை உணர்ந்து தாக்குவதில் வல்லவனாகவும் இருந்து வந்தான்.

எங்கே பலம் அதிகரிக்கின்றதோ அங்கே ஆசையும், ஆணவமும் உருப்பெறத் தொடங்குகின்றன. அது தேவர்கள் ஆனாலும், அசுரர்கள் ஆனாலும் இதில் ஒன்றாகவே செயல்படுகின்றனர்.

அசுரனாக பிறந்த அந்தகாசூரனுக்கு மூன்று உலகங்களையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் நாளாக நாளாக அதிகரிக்கத் தொடங்கின. பிறகு மூன்று லோகங்களை வெற்றிக்கொள்ள பிரம்மதேவரை எண்ணி அவரை நோக்கி கடுந்தவம் செய்ய தொடங்கினான். பிரம்மதேவரும் அந்தகாசூரனின் தவத்தால் மகிழ்ந்து அந்தகாசூரனுக்கு காட்சி அளித்தார்.

பிரம்மதேவர் அந்தகாசூரனை கண்டு அந்தகாசூரா!! உன்னுடைய தவத்தால் யாம் மனம் மகிழ்ந்தோம். வேண்டும் வரத்தினை கேட்பாயாக... என்று கூறினார். பிரம்மதேவரை தன் அகக்கண்ணால் கண்ட அந்தகாசூரன் அவரை பணிந்து வணங்கினான். பார்வை பலம் இல்லாத அந்தகாசூரன் பிரம்மதேவரிடம் தனக்கு பார்வை பலத்தையும், தனக்கு என்றும் இறப்பில்லாத சாக வரத்தையும் அளித்திட வேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு பிரம்மதேவர், அந்தகாசூரனே இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் பிறப்பு எவ்விதம் இருக்கின்றதோ அவ்விதம் இறப்பு என்பதும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். எனவே, வேறு வரத்தினை கேள் என்று கூறினார். பிரம்மதேவர் கூறிய பதிலை சற்றும் எதிர்பாராத அந்தகாசூரன் தன்னுடைய மரணத்தை தானே நிர்ணயம் செய்யும் விதமாக வேறு வழிகளில் பிரம்மதேவரை வணங்கி கேட்டார்.

அந்தகாசூரன் தான் தாயாக எண்ணக்கூடிய ஒரு பெண்ணின் மூலமே என் மரணம் நிகழ வேண்டும். அதுவும் என்னுடைய மரணம் காரணமின்றி இல்லாது ஏதாவது ஒரு காரணத்தோடு மட்டுமே நடைபெற வேண்டும். அதுவும் என் தாயை நான் மோகம் கொள்ளும் சமயத்தில் மட்டுமே என்னுடைய மரணமானது நிகழ வேண்டும் என்றும், தனது பார்வை பலமும் வேண்டுமென்றும் கூறி மனதில் தந்திர எண்ணங்களுடன் தனக்கான வரத்தினை கேட்டான்.

படைப்பின் அதி உன்னத சக்தியான பிரம்மதேவர் அந்தகாசூரனின் எண்ணம் மற்றும் அவன் கேட்ட வரத்தினாலேயே அவன் அழிவையும் கேட்டு பெற்றுக் கொள்கிறானே என எண்ணி அந்தகாசூரன் வேண்டிய வரத்தினை அளித்துவிட்டு அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.

பிரம்மதேவர் மறைந்ததும் தனது முழு சுயரூபமான அசுரத்தனமான புன்னகையை கொண்டான் அந்தகாசூரன். எவரேனும் தனது தாயின் மீது மோகம் கொள்வானோ? அல்ல ஈன்ற தாயே பெற்ற மகனை கொல்ல தான் முடியுமோ? எனக்கோ என் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவ்வாறு இருக்க எனக்கு மரணம் என்பது நிகழ்வது சாத்தியம் அன்று என மிகுந்த ஆனந்தம் கொண்டான்.

இனி யாராலும் என்னை வெல்லவோ அல்லது அழிக்கவோ இயலாது என்று உறுதியாக நம்பினான். பிரம்மதேவர் அருளிய வரத்தால் பார்வையையும், இழந்த உடற்பொழிவையும் பெற்றான் அந்தகாசூரன். பிரம்மதேவரிடம் பெற்ற வரத்தால் மிகவும் செருக்குற்று இந்த மூவுலகிலும் என்னை வெல்ல எவரும் இல்லை என்ற ஆணவ எண்ணத்துடன் மந்திர மலையில் வாழ்ந்து வந்தான்.

அவ்வேளையில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டது. தன்னை வெல்ல எவர் உண்டு என்ற மமதையோடு தேவர்களுக்கு எதிராக போருக்கு சென்றான். தேவ, அசுர போரில் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் போரிட்ட தேவர்கள் முன்னிலையில் அந்தகாசூரனின் ஏராளமான அசுர வீரர்கள் கொண்ட அசுர சேனைகள் போர் புரிய இயலாமல் புறமுதுகிட்டு ஓடின.


Share this valuable content with your friends