No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: போட்டியில் வெற்றி பெற்ற கணபதி !! பாகம் - 80

Aug 20, 2018   Ananthi   507    சிவபுராணம் 

பார்வதி தேவி கணபதியிடம், எப்படி குமரா? உன்னால் மட்டும் இந்த உலகத்தை எங்கும் செல்லாமல் வலம் வர முடிந்தது என்று கேட்டார். அதற்கு கணபதி தன்னுடைய தந்தையான சிவபெருமானை வணங்கி, தந்தையே! தங்களிடம் இருந்து உருவானவை தானே வேதங்கள், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் உண்மை என்றால் நான் இந்த உலகத்தை வலம் வந்துள்ளேன் என்பது உண்மையே என்று கூறினார்.

இந்த உலகத்தை வலம் சென்று கனியை பெற வேண்டும் என்று எண்ணிய கந்தன் கூடுமானவரையில் தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றார். பின்னால் தம்முடைய தமையன் கணபதி இன்னும் வரவில்லையே என எண்ணினார். ஆனாலும், நிதானம் கொள்ளாமல் வேகத்தை அதிகப்படுத்தினார்.

இங்கு கைலாய மலையிலோ கணபதி, சிவபெருமானிடம் ஒருவர் தன்னை ஈன்றெடுத்த தாயையும், தந்தையையும் பூஜித்து அவர்களை வலம் வந்து வணங்கினால், இந்த உலகை வலம் வந்த பயனை அடைவார்கள் என்று வேதங்கள் உரைக்கின்றன என்று கூறினார்.

மேலும், ஒருவர் எங்கும் செல்லாமல், தீர்த்த யாத்திரை பயணம் மேற்கொண்டு புண்ணிய நதிகளில் நீராடிய பலனை தன்னுடைய வீட்டில் இருக்கும் தாய், தந்தையரை பூஜிப்பதாலும், அவர்களுடைய பாதங்களை அலம்பி அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதாலும் புனித நதியான கங்கை நதிக்கரையின் தீர்த்தத்திற்கு இணையாகும் என்று வேதங்கள் யாவும் உரைக்கின்றன.

வேதங்கள் என்பது தங்களின் திருமுகத்தில் இருந்து தோன்றியவை. வேதங்களின் பிறப்பிடமாக உள்ள தங்களையும், என்னை ஈன்ற என் தாயையும் வலம் வந்தாலே இந்த உலகத்தை வலம் வந்ததற்கு ஈடாகாது எனில் வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் உண்மை இல்லாமல் பொய்யாகுமா? என்று தன் தந்தையிடம் கேட்டார் கணபதி.

கணபதியின் சாதுர்யமான உரையாடல்களை கண்ட பார்வதி தேவி அவரை அரவணைத்து மிகவும் மகிழ்ந்தார். அங்கு சூழ்ந்து இருந்த சிவகணங்கள், நந்தி தேவர் மற்றும் நாரதர் ஆகிய அனைவரும் கணபதியின் அறிவுத்திறனை கண்டு வியந்தனர்.

சிவபெருமானோ நீ கூறிய அனைத்தும் மெய்தான். யார் ஒருவர் தன்னுடைய பெற்றோர்களை வணங்கி பாதுகாத்து வருகிறார்களோ, அவருக்கு இந்த உலகத்தை சுற்றிய பலன் கிடைக்கும் என்று கூறினார். ஆகவே, உன்னுடைய மதியால் இந்த உலகை வலம் வந்து போட்டியில் நீயே வெற்றி பெற்றாய் என்று கூறினார்.

நீ என்னிடம் வேண்டியப்படி ஞானக்கனியானது உனக்கே உரியதாகும் என்று கூறி நாரதரிடமிருந்து ஞானக்கனியை வாங்கி கணிபதியிடம் எம்பெருமான் வழங்கினார். போட்டியானது நிறைவுப்பெற்றது என அங்கு சூழ்ந்திருந்த அனைவரும் எண்ணினார்கள்.

இந்த உலகத்தை தன்னுடைய அண்ணனை விட முதலில் வலம் வந்துள்ளதாக எண்ணி வெற்றியின் மகிழ்ச்சியில் கைலாயத்திற்கு குமரன் வந்தார். அப்பொழுது கைலாய மலையில் இருந்து திரிலோக சஞ்சாரியான நாரதர் அவருடைய கரங்களில் அந்த ஞானக்கனி எதுவும் இல்லாமல் வருவதைக் கண்டார்.

நாரதர் தன் கரங்களில் கனி இல்லாமல் வருவதைக் கண்ட குமரன் நாரதரிடம் சென்று நாரத முனிவரே தாங்கள் கொண்டு வந்த கனி எங்கே? என்று கேட்டார். இன்னும் என்னுடைய தமையன் இங்கே வரவில்லையே என்று கூறினார்.

அதற்கு நாரதர் எப்பொழுதும் போல தனது வேலையை தொடர்ந்தார். அதாவது, குமரா உன்னுடைய தாய், தந்தை செய்தது முறையே அல்ல. ஏனெனில், உன்னை உலகத்தை வலம் வர சொல்லிவிட்டு உன்னுடைய தமையனுக்கு அக்கனியை கொடுத்து விட்டனர் என்று கூறினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத குமரன் எப்பொழுது என் தமையன் இங்கே வந்தார். நான், அவர் உலகத்தை வலம் வரும்போது காணவில்லையே என்றார். நாரதரோ உன் தமையன் எங்கும் செல்லாமல் இருந்த இடத்திலேயே இருந்து ஞானக்கனியை பெற்றுக்கொண்டார். ஆனால், நீயோ இதை அறியாமல் இந்த உலகை வலம் வந்தாய் என்று கூறினார்.

என் தமையன் இருந்த இடத்திலேயே இருந்து கனியை பெற்றுக்கொண்டாரா? எனக் கேட்டு குமரன் மிகவும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார். அதே சமயம் கோபமும் கொண்டார்.


Share this valuable content with your friends