No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... விதேய நாட்டின் அரச சபைக்கு சென்ற சீவகன்..!!

Apr 05, 2023   Ramya   201    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... விதேய நாட்டின் அரச சபைக்கு சென்ற சீவகன்..!!

🌟 சீவகனுடன் வந்த படை வீரர்களும், சீவகனின் நண்பர்களும் ரதத்தினை பின் தொடர, சீவகன் ரதத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருந்தான். அப்பொழுது விதேய நகரத்தில் இருந்த மக்கள் அனைவரும் சீவகனை அன்போடும், மகிழ்ச்சியோடும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வரவேற்றார்கள். இறுதியாக அரண்மனையின் வாயிலை அடைந்தான்.

🌟 இங்கே அரண்மனையின் வாயிலில் தன்னுடைய குடும்பத்தினர்களுடனும், அமைச்சர்களுடனும் சீவகனின் வருகையை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார் கோவிந்தன்.


🌟 பின் ரதத்தில் இருந்து இறங்கிய சீவகனை மிகுந்த மகிழ்ச்சியோடு நெருங்கி அவனை இறுக அணைத்து கொண்டு, பல கால உணர்ச்சிகளை அவனிடத்தில் சொல்ல முடியாமல் தன் விழிகளில் இருந்து வரும் கண்ணீரினால் வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.

🌟 எப்பொழுதும், எதற்கும் கலங்காத நம்முடைய மன்னர், திடீரென்று அனைவரின் முன்னிலையிலும் சீவகனை அணைத்து கண்ணீருடன் இருப்பது அங்கிருந்த அமைச்சர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

🌟 அழுது கொண்டிருந்த மாமனிடம், அழுகின்ற காலமும், கவலைப்பட்ட காலமும் முடிவு பெற்றது மாமா! இனிமேல் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய காலம். இனி அதை நோக்கி நாம் செல்வோம்! அழுவதை நிறுத்துங்கள்! என்று கூறினான் சீவகன்.

🌟 உடனே கோவிந்தன், எப்படி சீவகா! என்னால் அழாமல் இருக்க முடியும்? உன்னை காண்பதற்கு எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று! என்னுடைய மாமன் சச்சந்தனுடைய மறைவு கூட எங்களுக்கு காலம் கடந்து தானே தெரிந்தது. எனது அக்கா உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் நான் அவ்வளவு தவித்திருந்தேன்.

🌟 ஏமாங்கத நாட்டின் ஒரே வாரிசான நீயோ... பல காடுகளிலும், நாடுகளிலும் அலைந்து திரிந்து கொண்டிருந்தாயே! இதையெல்லாம் தெரிந்து கொண்டு ஏன் இன்னும் என் உடலில் உயிர் இருக்கின்றது? என்று தான் எனக்கு புரியவில்லை என ஆவேசமாக பேசினார்.

🌟 கோவிந்தன் பேசுவதை கேட்ட சீவகன், அப்படியெல்லாம் எதுவும் இல்லை மாமா! நீங்கள் என்னுடைய வருகைக்காக தான் இருக்கின்றீர்கள். பொறுமை கொள்ளுங்கள்! என்று அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான் சீவகன்.

🌟 பின் கோவிந்தன் சீவகனிடம், தனது குடும்ப உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் அறிமுகம் செய்தார். அப்பொழுது இவர் தான் உனது அத்தை. இவள் என்னுடைய மகளான இலக்கணை. உனக்கு முறை பெண் என்று கூறினார்.

🌟 அப்பொழுது இலக்கணை, சீவகனை கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருப்பதை புரிந்து கொண்ட கோவிந்தன், உமக்கு இவர் தான் முறை மாமன். நன்றாக பார்த்து கொள் என்று கூற, அருகில் இருந்து தோழிகளோ சிரித்தார்கள்.

🌟 திடீரென்று என்ன நினைத்தாளோ தெரியவில்லை. உடனடியாக அவ்விடத்திலிருந்து ஒருவித நாணத்துடன் அவளின் அறைக்குள் சென்று விட்டாள்.


🌟 இலக்கணை அவ்விடத்திலிருந்து சென்றது சீவகனுக்கு சிரிப்பாக இருந்தாலும், இலக்கணையை பார்த்ததும் விதேய நாட்டு பெண்களுக்கு என்று ஒருவித தனி அழகு இருப்பதை புரிந்து கொண்டான். ஏனென்றால் தனது தந்தையும் இந்நாட்டு பெண்ணான விசையை மணந்து தனது நாட்டையே மறந்து வாழ்ந்தவர் தான் அல்லவா!

🌟 கோவிந்தன் ஆட்சிகளிலும், நிர்வாக பொறுப்புகளிலும் சிறந்து விளங்குகின்றார் என்பதை சிறு சிறு நிகழ்வுகளில் இருந்தே தெளிவாக புரிந்து கொண்டான். அதுமட்டுமல்லாமல் அன்பிலும் சிறந்தவர் என்பதையும் உணர்ந்தான். ஏனென்றால் சீவகனுடன் வந்திருந்த நண்பர்கள் அனைவரையும் நல்ல முறையில் வரவேற்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு என்று ஒரு குழுவை அமைத்து அவர்களை நன்முறையில் பார்த்து கொண்டார்.

🌟 மேலும், கோவிந்தனை பார்க்க பார்க்க தன்னுடைய தந்தையின் நினைவு சீவகன் மனதில் வர துவங்கியது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதி கொண்டான்.

🌟 மீண்டும் பல நாட்களுக்கு பிறகு தன்னுடைய தாயின் அன்பில் தன்னை மறந்து மகிழ்ச்சியாக இருந்தான். அப்பொழுது காவலாளி ஒருவன் உங்களையும், உங்கள் தோழர்களையும் அரச சபைக்கு வருமாறு மன்னர் அழைப்பு விடுத்திருக்கின்றார் என்றான்.

🌟 சீவகனும், திடீரென்று மாமா எதற்காக அரச சபைக்கு வர சொல்லி இருக்கின்றார்? என்று எண்ணி கொண்டே, தனது நண்பர்களுடன் விரைவாக அரச சபைக்கு சென்றான்.

🌟 அரச சபையின் வாசலில் இருந்து பார்க்கும் பொழுதே தெரிந்தது, அரச சபை முழுவதும் பதற்றமாக இருப்பது. ஆனால் அங்கே ஒரு ஆள் மட்டும் யார் என்று தெரியாமல்? நின்று கொண்டிருந்தார். பின் மெதுவாக சீவகன் அரச சபைக்குள் நுழைந்தான்.


Share this valuable content with your friends