No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - தனது குடும்பத்தினரை சந்தித்த சீவகன்..!!

Apr 04, 2023   Ramya   114    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... தனது குடும்பத்தினரை சந்தித்த சீவகன்..!!

🌟 சீவகனின் பிறப்பை பற்றி கந்துக்கடனுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததினால் அவருக்கு எதுவும் பெரியதாக தெரியவில்லை. ஆனால் சுநந்தைக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. பின்பு சீவகன் தனது தாயிடம் சென்று, எப்பொழுதும் நீங்கள் என் தாய் தான் அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவரை சமாதானப்படுத்தும் விதத்தில் பேசிவிட்டு கந்துக்கடன் அருகில் அமர்ந்தான்.

🌟 சுநந்தைக்கு கந்துக்கடனின் மீது மிகுந்த கோபம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் அழுது கொண்டே இருந்தாள். தனது மகன் இதுவரை வரவில்லையே என்று அழுதவள், இன்று தன் மகன் இவன் இல்லையே என்று அழுதாள்.


🌟 அவளுடைய அழுகை அதிகரிக்க அதிகரிக்க சீவகன் சுநந்தையின் அருகில் அமர்ந்து, எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். எப்பொழுதும் நான் உங்களின் மகன் தான். இதை நீங்கள் எப்பொழுதும் மறந்துவிட வேண்டாம் என்று கூறினான். பின் கந்துக்கடன் சென்று தன்னுடைய மனைவியை சமாதானம் செய்தார்.

🌟 அப்பொழுது கந்துக்கடன் சீவகனிடம், விசையை இப்பொழுது எப்படி இருக்கின்றார்? எங்கே இருக்கின்றார்? என்பதை பற்றி வினவினார்.

🌟 அதற்கு சீவகன், இப்பொழுது தாய் நலமாக இருக்கின்றார். விதேய நாட்டில் உள்ள அவரது சகோதரனான கோவிந்தனை பார்த்து, நடந்து முடிந்த நிகழ்வுகளை அவரிடம் கூறி, நமது நாட்டின் சுதந்திரத்தை பற்றி பேசுவதற்காக சென்றிருக்கின்றார். இன்னும் சில தினங்களில் நானும் அவ்விடத்திற்கு சென்று படைகளை வழி நடத்தி வந்து, கட்டியங்காரனுடன் போரில் வெற்றி பெற்று, நமது நாட்டினை நல்வழிப்படுத்துவேன் என்று கூறினான்.

🌟 சீவகனுடைய கூற்றை கேட்ட கந்துக்கடன் என்ன செய்வது? என்று புரியாமல் ஒருவிதமான ஏக்கத்துடனும், குற்ற உணர்ச்சியுடனும் அவ்விடத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

🌟 தனது தந்தை திடீரென்று அமைதியானதை பார்த்த சீவகன், தந்தையே! நீங்கள் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை. என்னை காப்பாற்றுவதற்கு உங்களால் என்ன முடியுமோ? அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்திருக்கின்றீர்கள். நான் உங்கள் மகனாக இல்லாத பட்சத்திலும் உங்களை நான் அறிவேன்.

🌟 நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். நான் தாயிடம் என்ன கூறினேனோ அதை தான் உங்களிடமும் கூறுகிறேன். நான் எப்பொழுதும் உங்களுடைய புதல்வன் தான். அதை நீங்கள் எப்பொழுதும் மறக்க வேண்டாம். நீங்கள் தான் எனது தந்தை என்று சீவகன் உறுதியாக கூறினான்.

🌟 சீவகன் கூறியதை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்த கந்துக்கடன் கண்களில் கண்ணீருடன் தனது புதல்வனை இறுக அணைத்து கொண்டார். பின் எப்பொழுதும் நீ தான் என் மூத்த மகன். நீ இல்லாமல் இந்த குடும்பத்தில் எதுவும் செய்ய மாட்டேன்! என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

🌟 தந்தையின் அரவணைப்பு பிடியிலிருந்து விலகிய சீவகன், வீட்டின் பின்புறம் சென்றான். அங்கு அவன் சென்றதும் தன்னவன் எப்பொழுது வருவான் என்று காத்திருந்த காந்தருவதத்தை அவன் பேசுவதற்கு முன்பாகவே அவனை இறுக அணைத்து கொண்டாள். அதாவது பல நாட்களாக சீவகனை பிரிந்திருந்த ஏக்கம் தீரும் அளவிற்கு இறுக அணைத்து கொண்டாள்.

🌟 ஒருவருக்கொருவர் தங்களை அமைதிப்படுத்தி கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது. ஒரு சிறு சத்தத்தின் பொருட்டே அவர்கள் இருவரும் கனவுலகத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தனர்.

🌟 பின்பு காந்தருவதத்தை தனது உடைகளை சரி செய்து கொண்டு சீவகனை பார்த்து குணமாலை உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறாள் அவளையும் சென்று பாருங்கள் என்று கூறினாள்.

🌟 அதற்கு சரியென்ற சீவகன், குணமாலையை பார்ப்பதற்காக வீட்டின் உள்ளறைக்கு சென்றான்.

🌟 இங்கு குணமாலையோ, சீவகன் வந்து விட்டான் என்பதை அறிந்தும் கூட அவனை பார்க்க செல்லாமல் அறையிலேயே அழுது கொண்டிருந்தாள்.

🌟 குணமாலை அழுது கொண்டிருப்பதை பார்த்த சீவகன் அவளிடம், நான் தான் இப்பொழுது வந்து விட்டேனே.. இனியும் ஏன் அழுது கொண்டே இருக்கின்றாய்? இனிமேலாவது சிரிப்பாயாக என்று கூறினான்.

🌟 உடனே குணமாலை குரல் வந்த திசையை பார்க்க அங்கு சீவகன் நிற்பதை கண்டாள். பின் அழுது கொண்டே சீவகனின் கால்களில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள்! நான் ஒரு பாவி! என்னிடம் வராதீர்கள். நான் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாதவள். என்னால் தான் நீங்கள் பல இன்னல்களை அனுபவித்திருக்கின்றீர்கள். எனக்கு பிடித்த உங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என தன்நிலை மறந்து அவள் சீவகனிடம் பேசிக்கொண்டே இருந்தாள்.


Share this valuable content with your friends