No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மத்திய தேசத்தை அடைந்த சீவகனின் நண்பர்கள்..!!

Mar 27, 2023   Ramya   180    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மத்திய தேசத்தை அடைந்த சீவகனின் நண்பர்கள்..!!

🌟 உங்கள் மகன் இப்பொழுது மத்திய தேசத்தில் இருக்கின்றான். அவனை பார்ப்பதற்காக தான், நான் உங்களிடம் வழியை கேட்கலாம் என்று வந்தேன் என்றான் பதுமுகன்.

🌟 இங்கிருந்து சிறு தொலைவில் தான் மத்திய தேசம் உள்ளது. அங்கே சென்று அவனை பார்த்து உனது தாய் இங்கே இருக்கின்றாள் என்று கூறி அழைத்து வாருங்கள்! இதோ வழியை கூறுகின்றேன் என்று மத்திய தேசத்திற்கான வழியை கூறினாள் விசையை.

🌟 நண்பர்கள் அனைவரும் விசையையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டு, சீவகனை உங்களிடம் பத்திரமாக அழைத்து வருகின்றோம் என்று நம்பிக்கையாக கூறிவிட்டு, களைப்புகள் சிறிதும் இல்லாமல் மிகுந்த புத்துணர்ச்சியோடு மீண்டும் பயணத்தை தொடர்ந்தார்கள். மேலும் சீவகன் ஒரு வணிகனுடைய மகன் அல்ல, ராஜகுலத்தை சேர்ந்தவன். அதுமட்டுமல்லாமல் கட்டியங்காரனோடு போர் செய்து சீவகன் அரசன் ஆவது அவனுடைய உரிமை என்பதை எண்ணி கொண்டே சென்றனர்.

🌟 இதற்கு நாம் அனைவரும் அவனுடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி கொண்டு, குதிரையை வேகமாக விரட்டி சென்று மத்திய தேசத்திற்குள் நுழைந்தார்கள். பின் சீவகன் எங்கே இருக்கின்றான்? என்பதை அறிந்து கொண்டு அவனை உடனடியாக அழைத்து சென்று விடுவோம் என்று அவர்களுக்குள்ளேயே கூறி கொண்டார்கள்.


🌟 ஆனால் புத்திசேனன் மட்டும், இவ்விதம் செய்வது சரியாக இருக்காது! ஏனென்றால் இங்கு என்ன நடக்கின்றது? என்று நமக்கு தெரியாது. நாமோ ஒரு படையோடு சென்று கொண்டிருக்கிறோம். சீவகன் அவனுடைய உண்மையான பெயரில் இருக்கின்றானா? அல்லது சூழ்நிலையின் காரணமாக வேறு பெயரில் இருக்கின்றானா? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்மை பார்த்து ஏதோ போரிட வந்திருக்கின்றார்கள் என்று எண்ணிவிட்டால் தேவையில்லாத இன்னல்கள் நமக்கு நேரிடும். ஆகவே சற்று பொறுமையுடன் செயல்படுவோம். அதாவது, முதலில் நாம் ஒற்றர்களை அனுப்பி இங்கு இருக்கக்கூடிய சூழ்நிலை என்ன? என்பதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல திட்டங்களை அமைத்து செயல்படுவோம் என்று கூறினான்.

🌟 புத்திசேனன் கூறுவதிலும் ஒரு உண்மை இருக்கிறது. உடனடியாக நாம் நகரத்திற்குள் சென்றால், சூழ்நிலைகள் மென்மேலும் சிக்கல்களாக மாறிவிடும் என்றான் அவர்களில் ஒருவன்.

🌟 இறுதியாக புத்திசேனனின் ஆலோசனைப்படியே, அவர்கள் ஒரு ஒற்றனை மத்திய தேசத்திற்குள் அனுப்பி வைத்தார்கள். நீண்ட நேரமாகியும் எந்தவொரு தகவலும் கிடைக்காததால், மற்றொரு ஒற்றனை அனுப்பி வைத்தார்கள். அவன் சென்றும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மேலும் மூன்றாவதாக ஒரு ஒற்றனை அனுப்பி வைத்தார்கள். அவன் சென்றும் எந்தவொரு பலனும் ஏற்படவில்லை. பின்பு நானே செல்கின்றேன்! என்று அவர்களில் ஒருவன் புறப்படும் சமயம் அவர்கள் அனுப்பிய மூன்று ஒற்றர்களும் திரும்பி வந்து கொண்டிருப்பதை கவனித்தார்கள்.

🌟 அப்பொழுது பதுமுகன் கோபத்தோடு, ஏன் இவ்வளவு காலதாமதத்தோடு வந்து கொண்டிருக்கிறீர்கள்? அப்படி அங்கு என்ன நிகழ்ந்தது? சீவகனை பற்றி ஏதாவது அறிந்து கொண்டீர்களா? என்று கேட்டான்.

🌟 பதுமுகன் கூறியதற்கு ஒற்றர்களில் ஒருவன், தாமதத்திற்கு மன்னிக்கவும்! நாங்கள் நகரத்திற்குள் சென்ற பொழுது யானை ஒன்று மதம் பிடித்து அந்த இடத்தையே ஒரு வழி செய்து விட்டது என்றான்.

🌟 என்னது யானையா! மீண்டும் யானைக்கு மதம் பிடித்து விட்டதா? இப்பொழுது யார் அதில் சிக்கி கொண்டார்கள்? மேலும் அங்கு என்ன நிகழ்ந்தது? என்று கேட்டான் பதுமுகன்.

🌟 சீவகனை பற்றி ஊருக்குள் சென்று விசாரிக்கலாம் என்று சென்றோம். அப்பொழுது அரசருடைய பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதனால் மக்கள் அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அந்த யானையுடைய பாகன் எவ்வளவோ முயற்சி செய்தும் யானையை அடக்க முடியவில்லை. அப்பொழுது அங்கிருந்த மக்கள் அனைவரும் இந்த மதம் பிடித்த யானை, பாகனுக்கு எல்லாம் கட்டுப்படாது. இளவரசருடைய குருவை தான் அழைக்க வேண்டும் என்று கூறினார்கள் என்றான் ஒற்றர்களில் ஒருவன்.

🌟 உடனே ஸ்ரீதத்தன், முதலில் யானையை அடக்க வேண்டியது தானே? அதற்கு எதற்காக குருவை அழைக்கின்றார்கள்? என்று கேட்டான்.

🌟 அப்பொழுது, அட நான் கூறுவதை பொறுமையாக கேளுங்கள்! நமது ராஜ்யத்தில் மதம் பிடித்த அசனி வேகத்தை அடக்கியது யார்? மதம் கொண்ட யானைக்கு எங்கு எதை செய்தால், அது அடங்கும் என்பது தெரிந்து வைத்திருப்பது யார்? எல்லாம் நம்முடைய நண்பனாக தான் இருக்க முடியும். வேறு யார் இதையெல்லாம் செய்ய முடியும்? என்றான் தேவதத்தன்.

🌟 அதற்கு மற்றொரு ஒற்றன், நீங்கள் கூறுவது போல் வந்தது சீவகன் அல்ல.. அவர் பெயர் வாமனன். அவரே இளவரசர்களின் குரு ஆவார். ஆனாலும் அவர் சீவகனை போல தான் இருந்தார்.

🌟 அப்பொழுது அந்த மூன்றாவது ஒற்றன், அந்த ஒற்றர் கூறுவது சரி தான். சீவகன் இந்த ஊரில் வாமனன் என்ற பெயரில் தான் இருந்து வருகின்றார். அவரே இளவரசியான கனகமாலையின் கணவர் என்றும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அவர் வந்த வேகத்தில் யானையின் திசையை அறிந்து, அதன் உயரத்திற்கு ஏற்ப இருக்கக்கூடிய மரத்தில் சில நொடிகளில் ஏறி யானையின் மீது அமர்ந்தார். பின்பு யானையின் செவிகளில் ஏதோ சில விஷயங்களை பேச, யானையானது அவருடைய கட்டுப்பாட்டிற்கு சென்றது. உடனே அங்கிருந்த மக்கள் அனைவரும் குருவினை மிகவும் புகழ்ந்தார்கள் என்றான்.

🌟 ஆமாம், நந்தட்டன் எங்கே இருக்கின்றான்? அவ்விடத்தில் நந்தட்டனை பார்த்தீர்களா? என்று கேட்டான் பதுமுகன்.

🌟 மற்றொரு ஒற்றர், ஆம் நந்தட்டனும் அங்கே தான் இருந்தார். மேலும் பார்ப்பதற்கு சீவகனை போலவே இருந்தார் என்றான்.


Share this valuable content with your friends