No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மந்திரத்தால் சீவகன் இருக்கும் இடத்திற்கு சென்றடைந்த நந்தட்டன்..!!

Mar 23, 2023   Ramya   135    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மந்திரத்தால் சீவகன் இருக்கும் இடத்திற்கு சென்றடைந்த நந்தட்டன்..!!

🌟 காந்தருவதத்தை இவ்விதம் கேட்டதும் பல நாட்களாக அலைந்து திரிந்தும் சீவகனை பார்க்க முடியாத நந்தட்டன், இப்பொழுது அவரை என்னிடத்தில் காட்டுகின்றீர்களா? நான் அவரை பார்க்க விரும்புகிறேன். உங்களால் அண்ணனை காட்ட முடியுமா? என்று கேட்டான்.

🌟 புன்னகைத்து கொண்டே காந்தருவதத்தையும் உன்னுடைய விருப்பத்தை என்னால் எளிதில் நிறைவேற்ற முடியும். அது அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு சில வாக்குறுதிகளை நீ என்னிடத்தில் அளிக்க வேண்டும். அப்படி அளித்தால் நான் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன் என்றாள்.

🌟 உங்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்க வேண்டும்? அதை இப்பொழுதே கூறுங்கள். என் அண்ணனை காணுவதற்காக நான் எதுவும் செய்வேன்! எந்த எல்லைக்கும் செல்வேன்! என்றான் நந்தட்டன்.

🌟 பின் நந்தட்டனை பார்த்து, நான் உன்னிடத்தில் கேட்க போகும் வாக்குறுதி அவ்வளவு கடினமானதாக இருக்காது என்று தான் எண்ணுகின்றேன். ஆனாலும் அது எளிதானதும் அல்ல என்று கூறினாள் காந்தருவதத்தை.

🌟 அதற்கு நந்தட்டன் ஒப்பு கொண்டவுடன், எப்பொழுதும் என்னுடைய பேச்சுக்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவாய்! என்று வாக்குறுதி அளித்தால், உன் அண்ணனை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்கின்றேன் என்றாள் காந்தருவதத்தை.

🌟 உடனே நந்தட்டன், இது அவ்வளவு கடினமானதும் அல்ல.. எளிதானதும் அல்ல.. இருந்தாலும் என் அண்ணனை நான் பார்க்க வேண்டும். ஆகையால் நான் இந்த நொடியில் இருந்து உங்களுடைய பேச்சுக்களுக்கும், வார்த்தைகளுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்று தன்னுடைய வாக்குறுதியை அளித்தான்.

🌟 அப்படியானால் சரி, இதோ நான் கூறும் மந்திரத்தை கூறினால் உனது அண்ணனை இப்பொழுதே நீ பார்க்க முடியும் என்று கூறிவிட்டு அந்த மந்திரத்தையும் கூறினாள் காந்தருவதத்தை.

🌟 நந்தட்டன் அந்த மந்திரத்தை கூறிய உடனே சீவகனும், கனகமாலையும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்த காட்சியானது தெரிந்தது. அதாவது சீவகன் ஒரு அழகான மாலையை தொடுத்து கனகமாலையிடம் கொடுத்து சூடிக்கொள் என்றான்.

🌟 அதற்கு கனகமாலை, மாலையை தொடுத்து திருமணம் வரை சென்ற பின்னும் இந்த மாலை இன்னும் நம்மை விடவில்லையே! என்று பேசிக்கொண்டே அந்த மாலையை வாங்கி சூடிக்கொண்டாள்.

🌟 கனகமாலை கூறிய கூற்றுக்கு பதில் கூற்று சீவகன் கூறுவதற்கு முன்பாகவே, அந்த காட்சியானது காற்றில் கரைய துவங்கியது. அப்பொழுது தான் நந்தட்டன் நிகழ் உலகத்திற்கு வந்தான்.

🌟 உடனே காந்தருவதத்தை, நந்தட்டனிடத்தில் பார்த்தாயா உனது அண்ணனை! நம்மை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் அவர் மட்டும் இன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றார். ஆனால் நாமோ அவர் இல்லாத இடத்தை எண்ணி வருந்தி கொண்டிருக்கின்றோம். நம் நினைவு அவருக்கு துளியும் இல்லை என்றாள்.

🌟 நந்தட்டன், காந்தருவதத்தை கூறியதை கேட்டு விட்டு தனது அண்ணியிடம், அண்ணி எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்வீர்களா? என்றான்.

🌟 என்ன உதவி வேண்டும் கொழுந்தனாரே! என்னால் முடிந்த உதவிகளை நான் செய்கின்றேன் என்று கூறினாள் காந்தருவதத்தை.

🌟 என்னுடைய அண்ணன் இருக்கும் ஊருக்கு என்னை உங்களால் அனுப்ப முடியுமா? என்று கேட்டான்.

🌟 மந்திரத்தால் முடியாதது எதுவுமில்லை. என்னால் உன்னுடைய அண்ணன் இருக்கும் இடத்திற்கு உன்னை அனுப்ப முடியும் என்று கூறினாள் காந்தருவதத்தை.

🌟 காந்தருவதத்தை கூறியதை கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நந்தட்டன், இப்பொழுதே என்னுடைய அண்ணன் இருக்கும் இடத்திற்கு என்னை அனுப்புகின்றீர்களா? என்று கேட்டான்.

🌟 அதற்கு காந்தருவதத்தை இப்பொழுது உன்னை அனுப்ப முடியாது. நான் கூறும் மந்திரத்தை உரைத்துவிட்டு நீ உறங்குவாயாக! உறக்கத்திலேயே உன்னுடைய அண்ணன் இருக்கும் ஊருக்கு நீ சென்றுவிடுவாய். ஆனால் இந்த தோற்றத்தில் செல்ல மாட்டாய்! உன் உருவ தோற்றத்தை உன்னுடைய அண்ணனை போன்றே மாற்றி அனுப்பி வைக்கின்றேன். மேலும் நீ பார்ப்பதற்கு சீவகன் போலவே இருப்பாய்! என்று கூறினாள்.

🌟 உடனே நந்தட்டன், அப்படியே ஆகட்டும் அண்ணி! என்று கூறிவிட்டு காந்தருவதத்தை கூறிய மந்திரத்தை உரைத்துவிட்டு பின் உறங்கினான். அவன் கண்விழித்த பொழுது எதுவென்று தெரியாத புதிய இடத்தில் இருந்தான். எந்த ஊரில் இருக்கின்றோம் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. தன்னிடத்தில் எப்பொழுதும் இருக்கக்கூடிய தற்காப்பு வாள் இருக்கின்றதா? என்பதை சோதித்து கொண்டே, எங்கே செல்வது? என்று புரியாமல் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவனை கடந்து சென்ற தேர் திடீரென்று நின்றது.

🌟 தேர் இப்படி நின்றதை பார்த்த சீவகன் உருவில் இருக்கும் நந்தட்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. தேரில் இருந்து இறங்கிய சீவகனின் சீடன் நந்தட்டனை பார்த்து, குருவே வணக்கம்! என்று வணங்கினான்.

🌟 பின் நந்தட்டனின் செயலை கவனித்தவன், இவர் நம்முடைய குருவாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லையே என்று எண்ணினான் சீடன்.


🌟 சீடன் தயங்கி நின்றது ஏன்? என்பதை புரிந்து கொண்டான் நந்தட்டன். அதாவது, அண்ணி கூறியதை போலவே தன்னுடைய உருவத்தை சீவகன் போலவே மாற்றி விட்டார்கள் என்பதை புரிந்து கொண்டான். மேலும் இவனுடைய குரு சீவகன் தான் என்பதையும் தெளிவாக உணர்ந்து கொண்டான்.

🌟 உடனே நந்தட்டன், சீடனை நோக்கி தம்பி! நான் உங்கள் குரு அல்ல. உங்கள் குருவின் சகோதரன் ஆவேன். நான் அவரை காண்பதற்காக தான் இந்த ஊருக்கு வந்திருக்கின்றேன். அவர் எங்கே இருக்கின்றார்? என்று கூறினால் அவரை சந்திக்க ஏதுவாக இருக்கும் என்றான்.

🌟 நீங்கள் எங்கள் குருவின் சகோதரரா? எங்கள் குருவை பார்ப்பது போலவே இருக்கின்றீர்களே என்று கேட்டான். மேலும் அவர் இருக்கும் இடத்தை சொல்வதை காட்டிலும், அவர் இருக்கும் இடத்திற்கே அழைத்து செல்கின்றேன் என்று கூறி, அந்த தேரில் நந்தட்டனையும் அழைத்து கொண்டு சீவகன் இருக்கும் இடத்திற்கு சென்றான் அந்த சீடன்.


Share this valuable content with your friends