No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மத்திய தேசம் செல்லும் வழியில் வழிப்போக்கனை சந்தித்த சீவகன்...!!

Mar 17, 2023   Ramya   187    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மத்திய தேசம் செல்லும் வழியில் வழிப்போக்கனை சந்தித்த சீவகன்...!!

🌟 நிலவின் ஒளியில் பாதையை அறிந்து போய் கொண்டிருந்த சீவகனுக்கு ஆதவன் பிரகாசமான ஒளியை அழித்து பாதையை தெளிவுப்படுத்தினான். இந்த நிகழ்வு அவனிடத்தில் இருக்கக்கூடிய இருளையும் போக்கியது போல அவன் உணர்ந்து, சுதஞ்சணன் கூறிய பாதையின் படி தனது அடுத்த இலக்கான மத்திய தேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

🌟 தக்க நாட்டில் இருந்து செல்லும் போது அவசரத்தில் சீவகன் அணிந்திருந்த அணிகலன்களை அரண்மனையிலே வைக்க மறந்து விட்டு, அணிந்து கொண்டே பயணத்தை மேற்கொண்டான்.

🌟 இனியும் இந்த நகைகள் அணிந்து கொண்டிருப்பது நல்லதல்ல, இவை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று எண்ணி கொண்டிருந்தான். அப்பொழுது சீவகனுக்கு தக்க துணையாக வழிப்போக்கன் ஒருவன் அறிமுகம் ஆனான். அந்த வழிப்போக்கனை கண்டதும் அவன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விட்டதாக எண்ணினான் சீவகன்.

🌟 அந்த வழிப்போக்கன் சீவகனை கண்டதும் மனதில், தனியாக சென்று கொண்டிருந்த நமக்கு தக்க துணை ஒருவன் கிடைத்து விட்டான் என்று சீவகனோடு இணைந்து பயணத்தை மேற்கொண்டான்.

🌟 பயணத்தை மேற்கொண்ட போது வழிப்போக்கன் சீவகனை பார்த்து எந்த ஊரில் இருந்து நீர் வருகிறீர்கள்? உங்களுக்கு திருமணம் ஆயிற்றா? என்று வினவினான்.

🌟 சீவகனும், தான் தக்க நாட்டில் இருந்து வருவதாகவும், திருமணம் ஆகி விட்டதாகவும் கூறினான்.

🌟 பரவாயில்லை காலம் தாழ்த்தாமல் காளை வயதிலேயே கன்னியை கரம் பிடித்தாய். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றாய்? எத்தனை பாவையை கரம் பிடித்தாய் என்று தெரியவில்லையே? என்றான் வழிப்போக்கன்.

🌟 அதற்கு சீவகன் நால்வரை கரம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று கூறினான்.

🌟 இதை கேட்ட வழிப்போக்கனுக்கு பொறாமை அதிகரித்தது. அதே சமயம் இவன் மீது பரிதாபமும் ஏற்பட்டது. எப்படியப்பா உன்னால் மட்டும் நால்வரை சமாளிக்க முடிகிறது? நான் ஒருத்தியை மணந்து கொண்டு படும் வேதனைகளை சொல்ல முடியாமல் இருக்கும் பொழுது, நால்வரை மணந்து கொண்டு எப்படியப்பா நிம்மதியாக இருக்கின்றாய்? என்று கேட்டான் அந்த வழிப்போக்கன்.


🌟 அது மிகவும் எளியது. நால்வரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொள்வார்கள். அவர்களுக்கிடையே நான் செல்லாத வரையும் நிம்மதியாக இருக்க முடியும் என்று நகைச்சுவையாக கூறினான் சீவகன்.

🌟 வழிப்போக்கனும் ஒருவேளை நால்வரும் ஒன்று சேர்ந்து விட்டால் என்ன நடக்கும்? என்று கேட்க, சீவகன் நால்வரும் ஒன்று சேர்ந்தால் அங்கு வீடுபேறு உண்டாகும் அல்லவா! என்று கூறினான்.

🌟 நீ எதை கூறிக்கொண்டு இருக்கின்றாய்? ஆமாம் உன்னுடைய ஊர் ஒழுக்கம் உடைய ஊரா? என்றான் வழிப்போக்கன்.

🌟 வழிப்போக்கன் இந்த கேள்வியை கேட்டதும் சீவகனுக்கு கோபம் வந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் நால்வர் வயிற்றில் பிறந்தால் தானே ஒருவன் ஒழுக்கமுடையவனாக இருக்க முடியும் என்றான்.

🌟 என்னது நால்வர் வயிற்றில் ஒருவன் பிறப்பதா! உனக்கு என்னவாயிற்று? பயணத்தின் போது ஏதாவது ஆகி விட்டதா? என்று கேட்டான் வழிப்போக்கன்.

🌟 அதற்கு சீவகன் சிரித்து கொண்டே ஒருவனிடத்தில் இருக்கும் நல்ல தானம் என்பது ஒரு தாய், நல்ல எண்ணங்களும், ஒழுக்கங்களும் இரண்டாவது தாய், பெரியவர்களிடத்திலும் அறிவில் சிறந்தவர்களிடத்திலும் மதிப்பு வைத்து அவர்களை வணங்கி பின் தொடர்வது மூன்றாவது தாய், எந்தவிதமான தவறும் இல்லாமல் தவம் செய்யக்கூடியது நான்காவது தாய்.

🌟 இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா! நான் கூறிய நான்கு தாய்கள் யார் என்று? இந்த நான்கு தாய்கள் ஒன்றிணைந்து ஒருவனை ஈன்றெடுக்கும் பொழுது அவன் ஒழுக்கம் நிறைந்தவனாகவும், எளிதில் வீடுபேற்றினை அடையக்கூடிய தகுதியை உடையவனாகவும் இருக்கின்றான் என்றான்.


Share this valuable content with your friends