No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மகளைப் பற்றி கவலையடைந்த அரசன் சுபத்திரன்..!!

Mar 15, 2023   Ramya   172    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மகளைப் பற்றி கவலையடைந்த அரசன் சுபத்திரன்..!!

🌟 சீவகன் அந்த ஊரில் இருந்த ஓர் அங்காடியை அடைந்தான். அங்கே சில இளைஞர்கள் வண்ணமயமான துணிகளை அணிந்து கொண்டு இளநீர் அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த சீவகன் அவர்களிடத்தில் இந்த ஊரில் ஏதாவது விசேஷமா? என்று கேட்டான்.

🌟 அதற்கு அந்த இளைஞர்களில் ஒருவன், இந்த ஊரில் என்ன விசேஷம் என்று உனக்கு தெரியாதா? என கேட்க, மற்றவர்கள் இந்த ஊரில் உன்னை இதுவரை பார்த்ததே இல்லையே! என்றனர்.

🌟 உடனே சீவகன் நான் இந்த ஊருக்கு புதியவன் என்றான். அப்பொழுது அங்கிருந்த மேலும் சில இளைஞர்கள் அவனை சற்று பொறாமையோடு பார்த்தனர். ஏனென்றால் பார்ப்பதற்கு அழகாகவும், பெண்களை கவர்வதற்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்தவனாக அவர்களுக்கு காணப்பட்டான்.

🌟 அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், இந்த ஊரில் எந்த விசேஷமும் இல்லை என்றும், இந்நாட்டு மன்னன் இளைஞர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் விருந்து ஏற்பாடுகளை செய்திருக்கின்றார் என்றும் கூறினான்.

🌟 மற்றொருவன் அவருக்கு இருப்பது ஒரேயொரு மகள் தான். அவள் பெயர் கேமசரி என்றும், பார்ப்பதற்கு தேவலோகத்தில் இருக்கக்கூடிய பெண்களை போன்று மிகுந்த அழகு கொண்டவளாக இருப்பாள். அவளுடைய கூந்தல் மிகவும் நீளமாகவும், ரம்மியமாகவும் இருக்கும் என்றும் கூறினான்.

🌟 மேலும் மற்றொருவன் அவளுக்கு எங்களை பார்த்தால் எந்தவித உணர்வும் ஏற்படவில்லையாம். நீ சென்று அவளை பார். உன்னுடைய நேரம் நன்றாக இருந்தால் உனக்கு அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கட்டும் என்று கூற அனைவரும் சிரித்தனர். பின் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னச்சத்திரத்திற்கான வழியை கூறினார்கள்.

🌟 அந்த இளைஞர்கள் கூறிய கருத்துக்களில் எந்தவிதமான ஆர்வத்தையும் காட்டாமல் இருந்த சீவகன், நீண்ட தூர பயண சோர்வினை போக்குவதற்கு ஓரிடம் இப்பொழுது கிடைத்திருக்கிறது என்று எண்ணி அன்னச்சத்திரத்தை நோக்கி சென்றான்.


🌟 இங்கு அரண்மனையில் நின்று கொண்டிருந்த அரசனான சுபத்திரன் கோட்டையின் அகழியை (அகழி என்பது கோட்டையின் முன் சூழப்பட்டு இருக்கக்கூடிய நீர் அரணாகும்) பார்த்து கொண்டிருந்தான்.

🌟 அப்பொழுது சுபத்திரனின் மனைவி அவர் அருகில் வந்து இன்று அன்னச்சத்திரத்தில் என்ன நிகழ்ந்தது? என்று வினவினாள்.

🌟 அதற்கு சுபத்திரன், என்ன நடக்கும்? எதுவும் நடக்கவில்லை என்றும், எப்பொழுது எது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? என்றும் கோபத்துடனும், வெறுமையுடனும் கூறினான்.

🌟 ஏன் இவ்வளவு வெறுமையுடன் பேசி கொண்டிருக்கின்றீர்கள்? எல்லாம் நன்மைக்கே என்று இருந்தால் தானே எண்ணியது நடைபெறும் என்றாள் சுபத்திரனின் மனைவி.

🌟 உடனே, ஆமாம்... கேமசரி! வந்திருந்த அனைவரையும் பார்த்தாளா? என்று கேட்டான் சுபத்திரன்.

🌟 வந்திருந்த இளைஞர்கள் அனைவரையும் அவள் பார்த்தாள். பார்த்து மட்டும் என்ன பயன்? அவளுக்கு எந்தவித உணர்வும் ஏற்படவில்லையாம். நம் மகளுக்கு வயது தான் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் என்ன தான் நிகழ போகின்றதோ? என்று கவலையுடன் பேசி கொண்டிருந்தாள்.

🌟 அதற்கு சுபத்திரன், என்ன செய்வது? ஜோதிடர் சொன்னது போல தானே இதுவரை அவளுடைய வாழ்க்கையில் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது. அவளுடைய வயதில் இருக்கக்கூடிய மற்ற பெண்கள் எல்லோருக்கும் ஆண்மகனை கண்டாலே நாணம் வருகின்றது. ஆனால் நம்முடைய மகளுக்கு ஆண்மகனை கண்டாலே சிரிப்பு தானே வருகின்றது என்று கூறி கொண்டிருக்க,

🌟 எப்பொழுது தான் இவளிடத்தில் நாணத்தை ஏற்படுத்தக்கூடிய இளைஞன் வருவான்? என்று ஜோதிடரிடம் கேட்க வேண்டியது தானே. அப்பொழுது தானே நமக்கு இருக்கக்கூடிய கடமைகளில் இருந்து ஒன்றாவது குறையும் என்று கூறினாள் சுபத்திரனின் மனைவி.


Share this valuable content with your friends