No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: எம்பெருமான் பாணாசுரனை ஆசிர்வதித்தல் !! பாகம் - 112

Oct 22, 2018   Ananthi   539    சிவபுராணம் 

பார்வதி தேவி எம்பெருமானுடன் மகிழ்ந்துக் கொண்டிருந்த தருணத்தை கண்டு கொண்டிருந்த பாணாசுரனின் மகளாகிய உஷையின் உள்ளத்தில் ஒருவிதமான ஏக்கம் உண்டாயிற்று. அதாவது தன்னை நேசிக்கும் நாயகன் ஒருவர் இருந்திருந்தால் இச்சூழலானது எவ்வளவு இன்பமாக இருந்திருக்கும் என எண்ணினாள்.

மேலும், எப்பொழுது அந்த நாள் வருமோ என தன் மனதில் எண்ண எண்ண, அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல் அதுவரை மகிழ்ச்சியாக இருந்த முகமானது வாடியிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி மலர்ந்திருக்க உஷையின் முகத்தில் மட்டும் கவலையும், சஞ்சலமும் காணப்பட்டதை பார்வதி தேவி கவனித்தார்.

உஷையின் மனவருத்தத்திற்கான காரணத்தையும், அவள் மனதில் கொண்டுள்ள எண்ணத்தையும் உணர்ந்த பார்வதி தேவி, உஷையை தனது பக்கத்தில் அழைத்து, வருத்தம் வேண்டாம் தேவி... உன் மனதில் இருந்த எண்ணங்களை நான் அறிவேன். கூடிய விரைவில் உன் மனதிற்கு பிடித்த நாயகனோடு மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய காலம் வரும் என்று கூறினார்.

பார்வதி தேவியின் அருளால் மனதில் இருந்த துன்பங்கள் யாவும் நீங்கிய உஷை, மனதில் புதுவித நம்பிக்கையோடு தாயே!!.. நான் எப்பொழுது என் நாயகனான கணவருடன் கூடி இன்புறுவேன்? என்று கேட்டார். இப்பொழுதில் இருந்து ஏழாவது மாதத்தில் வைகாசி சுக்லபட்ச துவாதசி திதியில் உபவாசம் இருந்து நடுராத்திரியில் நீ அயர்ந்த நித்திரையில் இருக்கும்போது உன்னை யார் வந்து அடைந்து இன்புற செய்கிறானோ அவனே உன் நாயகனான கணவன் என்றும், அவனுடன் இணைந்து சகல சௌபாக்கியத்தையும் அனுபவித்து சுகமாய் வாழ்வாய் என்றும், நீ இளம் வயதிலிருந்தே திருமாலை எண்ணி பூஜித்து வந்து கொண்டிருந்தால் உனக்கு இத்தகைய பேறு கிடைக்கும் என பார்வதி தேவி ஆசீர்வதித்தார்.

மனதில் இருந்த கவலைகள் நீங்கி உஷை நாணத்தால் தலை குனிந்து நின்றாள். பின்பு, தேவியைப் பார்த்து பணிந்து வணங்கினாள். சிறிது காலம் கழித்து எம்பெருமானும், பார்வதி தேவியும் கைலாயம் சென்றனர். மற்ற தேவர்கள் அவரவர் வாகனங்களில் அமர்ந்து தத்தமது இடங்களை அடைந்தார்கள்.

எம்பெருமானின் கூற்றுகளை கேட்ட பாணாசுரன் மிகவும் மகிழ்ந்து எம்பெருமானை துதித்து இரு கைகூப்பி வணங்கி தன்னை ஆசிர்வதிக்க வேண்டினார். எம்பெருமானும் அவரை ஆசிர்வதித்து பின் மறைந்தார். எம்பெருமான் மறைந்த பின்பு தனது இரு தோள்களையும் பாணாசுரன் மிகுந்த கர்வத்துடனும், தனது ஆயுதத்திற்கு வேலை வந்துவிட்டது என்று கூறி தட்டிக் கொண்டு தனது அரசாட்சியில் உள்ள ஆயுதக்கிடங்கை அடைந்தான்.

சிவபெருமானின் கூற்றுகளை தனது மந்திரியான குபாண்டனிடம் தெரிவித்து எந்த கணத்திலும் தோன்றக்கூடிய யுத்தத்திற்கு தகுந்த முறையில் படைகளையும், ஆயுதங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

யுத்தக் கலையில் தேர்ச்சி பெற்று என் இரு கைகளையும் வெட்ட வருகின்ற அவன் தலையை கொய்து எறிய வேண்டும். அப்பொழுது தான், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று கூறி ஆயுதக்கிடங்கு அதிரும் வண்ணம் சிரித்துக்கொண்டு அந்த கணப்பொழுதிற்காக காத்துக் கொண்டிருந்தான்.

இவ்வாறு இருக்கையில் பார்வதிதேவி, பாணாசுரனின் மகளான உஷைக்கு வரமளித்த வைகாசி மாதமும் வந்தது. இந்த மாதத்தில் பெருமாளின் அருளை எண்ணி பெருமாளுக்காக உபவாசமிருந்து திருமாலை பூஜித்து அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு, அந்தப்புரத்தில் பார்வதிதேவி அளித்த வரத்தினை எண்ணி, தன்னை அடைந்து இன்புற செய்யும் தனது நாயகனை மனதில் நினைத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள் உஷை. பார்வதிதேவி அவருக்கு அளித்த வரத்தின்படி தனது காரியங்களை நிறைவேற்ற தொடங்கினார்.

சிவபெருமான் ரதிதேவிக்கு அளித்த வரத்தின் அடிப்படையில் மன்மதன் துவாரகையில் கிருஷ்ணனின் புத்திரனாக பிரத்யும்னன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தார். பிரத்யும்னன் மகனான அநிருத்தனே உஷைக்கு ஏற்ற துணைவனாக இருப்பான் என்று தீர்மானித்த பார்வதிதேவி அவ்விருவரையும் ஒன்றுசேர்க்க எண்ணினார்.

அப்பொழுது மனித அவதாரம் எடுத்த கிருஷ்ணனின் பேரனாகிய அநிருத்தன் என்பவர் பார்வதிதேவியின் யோகா மாயையால், துவாரகையில் இருந்து சோனிதபுரியில் உஷை இருக்கும் இடமான அந்தப்புரத்தில் நித்திரையில் இருந்த அவளின் அருகில் விட்டுவிட்டார்.

சிறிது நேரத்தில் கண் விழித்த அநிருத்தன் தான் இருக்கும் இடம் எதுவென்று அறியாமல் தான் இருக்கும் இடத்தை சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வேளையில் தனது அருகில் இதுவரை காணாத அப்சரஸ் தேவதைகளை விட அழகில் உயர்ந்தவராகவும், சந்திரனை விட எழில் கொண்டவராக உள்ள பதுமையை கண்டதும் தன்னிலை மறந்தார். இது போன்ற எழில் கொண்ட பதுமையை நான் கண்டதே இல்லை என எண்ணி தனது சிந்தனைகள் யாவற்றையும் அவளின் மீது ஒரு முகப்படுத்தி கண்டு கொண்டிருந்தார்.


Share this valuable content with your friends