No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - வனத்தில் வேடுவனை சந்தித்த சீவகன்..!!

Mar 09, 2023   Ramya   127    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... வனத்தில் வேடுவனை சந்தித்த சீவகன்..!!

🌟 சுதஞ்சணனும், அவனுடைய குடும்பத்தினரும் உங்களுடைய பயணம் இனிமையாக அமையட்டும் என்று வாழ்த்திய வண்ணமாக பயணங்களுக்கு தேவையான சில பொருட்களையும் அவனிடத்தில் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

🌟 தன்னுடைய பயணத்தை மேற்கொண்ட சீவகன் தனிமையான அந்த காலத்தில் காந்தருவதத்தையை பற்றியும், குணமாலையை பற்றியும் எண்ணி கொண்டிருந்தான்.

🌟 அந்த பழைய நினைவுகள் அவனுடைய பயணத்தில் சில மாற்றங்களை உருவாக்கியது. ஒளி சிறிதும் இல்லாமல் இருள் நிறைந்து காணப்பட்ட அந்த நேரத்தில் பகலில் நடந்து கொண்டிருக்கின்றேனா? அல்லது இரவில் நடந்து கொண்டிருக்கின்றேனா? என்பதே தெரியாத அளவில் சீவகன் சென்று கொண்டிருந்தான்.

🌟 சீவகன், இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று தெரியாமலும், அரணபாத மலை வந்துவிட்டதா என்பதை அறியாமலும், குழப்பமான நிலையில் நடந்து கொண்டிருந்தான்.

🌟 கதிரவன் ஒளிகள் காடு முழுவதும் நிரம்பி இருக்காமல் ஒரு சில இடங்களில் மட்டும் நிரம்பி இருந்தது. அவ்விடத்தை காணும் பொழுது சீவகனுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் பிறந்தது. பயணம் செல்லும் வழியில் அவ்வப்போது காணப்படக்கூடிய அழகிய பூக்களும், நீர்நிலைகளும், தாமரைகளும் அவனுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தின.

🌟 அவன் மேற்கொண்டிருந்த அந்த பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சத்தத்தை கேட்டான். அதாவது திடீரென்று வனத்தில் இருக்கக்கூடிய இலைகள் யாவும் நொறுங்கும் சத்தத்தை கேட்டான்.

🌟 அந்த சத்தத்தை கேட்ட சீவகன் ஏதோ மிருகங்களின் கூட்டமாக இருக்குமோ? என்று எண்ணி, ஒரு மரத்தின் பின்பு மறைந்து நின்றான். சிறிது நேரத்தில் அந்த சத்தத்திற்கு காரணமானவன் யார்? என்றும் அறிந்து கொண்டான்.

🌟 கையில் வேலும், அம்பும் ஏந்திய வண்ணமாக வேடுவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய தோளின் ஒரு பக்கத்தில் இறந்த மிருகத்தின் மாமிசமும், மறு பக்கத்தில் கிழங்கும், கரங்களில் மதியை மயக்கக்கூடிய மதுவும் இருந்தது.

🌟 அவன் தன்னை போன்ற சாதாரண மனிதன் தான் என்பதை முடிவு செய்த சீவகன் மறைவிலிருந்து வெளியே வந்தான். திடீரென்று இருளில் இருந்து வெளியே வந்த சீவகனை பார்த்த வேடுவன், ஒரு நிமிடத்தில் திடுக்கிட்டதோடு மட்டுமல்லாமல் உடனே கரங்களில் அம்பை தொடுத்து எய்துவதற்கு தயாராக இருந்தான்.


🌟 பின்பு தன்னை நிதானம் செய்து கொண்டு யார் நீ? இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? என்று வேடுவன் வினவினான்.

🌟 அதற்கு என் பெயர் சீவகன் என்று கூறி, நீங்கள் இந்த வனத்திலா வசித்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டான்.

🌟 இல்லை.. நான் இந்த மலையில் வாழவில்லை. இங்கு மனிதர்களெல்லாம் தங்க முடியாது. அதோ அங்கு தெரிகின்றது பார்த்தாயா! அந்த மலையில் தான் வேடுவர்கள் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும், நான் தான் அந்த கூட்டத்தின் தலைவன் ஆவேன் என்றும் கூறினான்.

🌟 அந்த வேடுவன் சீவகனிடம் பேசி கொண்டிருக்கும் பொழுதே அவனிடத்தில் இருந்து ஒருவிதமான கள்ளின் வாடை வீசியது. என்ன சாப்பிட்டு கொண்டிருக்கின்றீர்கள்? உங்கள் மீதிருந்து ஒருவிதமான வாடை வந்து கொண்டிருக்கின்றது என்றான் சீவகன்.

🌟 என்னது உனக்கு இது கூட தெரியவில்லையா? நீ இந்த மலைக்கு தான் புதியவனாய் இருப்பாய் என்று எண்ணினால் நீ உலகிற்கே புதியவனாக இருப்பாய் போல தோன்றுகிறது என்றான் வேடுவன்.

🌟 பின்பு தன் தோளின் மீது இருப்பது பன்றியின் மாமிசம் என்றும், அதை நெருப்பில் வாட்டி, தேன் விட்டு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாகவும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் கூறினான். வரும் வழியில் தாகம் ஏற்பட்டால் அந்த தாகத்தை தணிப்பதற்காகத்தான் கள்ளு குடிக்கின்றேன். உனக்கும் கொஞ்சம் வேண்டுமா? என்றான் வேடுவ தலைவன்.


Share this valuable content with your friends