No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... சிறையிலிருந்து தப்பித்த சீவகனும் சுதஞ்சணனும் எங்கு சென்றனர்?

Mar 09, 2023   Ramya   105    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சிறையிலிருந்து தப்பித்த சீவகனும் சுதஞ்சணனும் எங்கு சென்றனர்?

🌟 சீவகன் இறந்த செய்தி ராசமாபுரம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் ஊர் மக்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர்.

🌟 இச்செய்தியானது ஊர் மக்கள் மத்தியில் அதிகளவில் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. சீவகனின் பெற்றோர்கள் என்ன செய்வது? என்று புரியாமல் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.


🌟 சிறைச்சாலையில் இருந்து மறைந்து சென்ற சீவகன் மற்றும் சுதஞ்சணன் சங்கவெண் மலையில் (வெள்ளிமலையில் உள்ள ஒரு பகுதி) உள்ள நீர் நிரம்பிய ஒரு அருவியின் அருகில் தோன்றினார்கள்.

🌟 இப்பொழுது நாம் எந்த இடத்திற்கு வந்திருக்கின்றோம்? என்று சீவகன் வினவினான். அதற்கு சுதஞ்சணன் இப்பொழுது நாம் வெள்ளிமலையில் இறங்கி இருக்கின்றோம் என்றான்.

🌟 இதுவரை வெள்ளிமலை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுது தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது. இந்த அருவியில் சென்று குளிப்போமா? என்று வினவினான் சீவகன்.

🌟 அதற்கென்ன சீவகா! இப்பொழுதே அருவியில் குளிக்கலாம் என்று இருவரும் அருவியில் இறங்கி குளிக்க துவங்கினார்கள். நேரம் சென்றது அவர்கள் இருவருக்கும் புலப்படவில்லை.

🌟 குளித்து முடித்த பின்பு கரையேறிய சுதஞ்சணன், சீக்கிரம் புறப்படு சீவகா! உனக்காக இசை நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். என் மனைவியர்கள் அனைவரும் காத்து கொண்டிருப்பார்கள் என்று கூறினான்.

🌟 சீவகனும் உடனே கரையேறினான். பின் இருவரும் சுதஞ்சணன் தங்கியிருக்கும் மாளிகையை அடைந்தனர்.

🌟 சீவகனின் வருகையை அறிந்து கொண்ட சுதஞ்சணனின் மனைவியர்கள் அனைவரும் வெளியில் வந்து அவர்களை வரவேற்றனர். இவர் தான் சீவகன் என்பவரா? என்று வினவினார்கள்.

🌟 பின் சுதஞ்சணனை பார்த்து, உங்களுக்கு இவ்வளவு உதவி செய்திருக்கின்றார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டியது தானே! உங்களுடைய தோழனுக்கு துன்பத்தை ஏற்படுத்திய அரசனை கொன்று அவருடைய ராஜ்யத்தை இவருக்கு கொடுத்து முடி சூட்ட வேண்டியது தானே! அதை விடுத்து ஏன் இவரை சிறையில் இருந்து அழைத்து வந்தீர்கள்? என்று ஒவ்வொருவரும் வினவினார்கள்.

🌟 நானும் அதை செய்ய தான் விரும்பினேன். ஆனால் சீவகன் தான் தனக்கென்று அந்த மாதிரியான செயல்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும், என்னை இப்பொழுது இந்த சிறையில் இருந்து அழைத்து சென்றால் மட்டும் போதும் என்றும் கூறிவிட்டான். ஆகையால் அவனுடைய விருப்பத்திற்கு மாறாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறினான்.

🌟 இதை கேட்ட அவனுடைய மனைவியர்கள் ஏன் சீவகரே அவ்வாறு கூறினீர்கள்? என்றனர்.

🌟 அதற்கு சீவகன், கட்டியங்காரனை கொல்வது எனக்கு ஒரு சின்னஞ்சிறு விஷயம் தான். இதற்காக சுதஞ்சணனின் உதவியை நாடுவது என்பது சரியாக இருக்காது. மேலும் இது என் ஆண்மைக்கு இழுக்காகும் அல்லவா! நண்பரிடம் இருந்து சிறு உதவிகளை கேட்டு பெறலாம். அவர்கள் செய்கின்றனர் என்பதற்காக மூலதனத்தையே அவர்களிடத்தில் இருந்து பெறுவது முறையானதா? என்றான்.

🌟 சீவகனுடைய கூற்றுக்களில் இருந்து அவனை பற்றிய முழு விவரங்களையும் மனைவியர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர். ஏற்கனவே கணவன் வாயிலாக பல செய்திகள் சீவகனை பற்றி அறிந்திருந்தனர். இருப்பினும் அனைத்தையும் நேரடியாக சீவகனிடத்தில் அறிந்து கொண்டது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

🌟 பின் சுதஞ்சணனின் மனைவியர்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் உடனடியாக கேட்கலாம் என்றும், எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் எங்களிடத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

🌟 எந்தவொரு காரியத்திலும் வெற்றி என்பது அவ்வளவு எளிதாக கிடைக்காது. காலம், இடம் மற்றும் அதற்கான துணை இம்மூன்றும் எவனொருவன் சாதகமாக்கி கொள்கின்றானோ, அவனே இறுதியில் வெற்றி பெறுவான் என்றான் சீவகன்.

🌟 சீவகா நீ கூறுவது உண்மை தான். காலம் வரும் வரை அனைவரும் பொறுமையுடன் தானே இருக்க வேண்டும். உன்னுடைய காலம் வருகின்ற வரை நீ என்ன செய்ய போகின்றாய்? என்று கேட்டான் சுதஞ்சணன்.

🌟 அதற்கு சீவகன், என்னுடைய குருநாதர் ஓராண்டு காலம் வரை பொறுமை காத்தருள வேண்டும் என்று கூறினார். அது முடிவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. அதுவரை நான் பல நாடுகளையும் பல மனிதர்களையும் காண வேண்டும். அப்பொழுது தானே எனக்கு அனுபவம் கிடைக்கும் என்று கூறினான்.

🌟 எந்த நாட்டிற்கு நீ செல்ல விரும்புகிறாயோ, அந்த நாட்டிற்கு நானே அழைத்து செல்கின்றேன் என்று முடிவாக கூறினான் சுதஞ்சணன்.

🌟 இல்லை நண்பனே.. நீயே நீண்ட காலத்திற்கு பின்பு இப்பொழுது தான் உன்னுடைய குடும்பத்தோடு இணைந்திருக்கின்றாய். நீ உன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக காலத்தை கழிப்பாயாக. நான் மட்டும் தனியாக சென்று வருகின்றேன் அப்பொழுது தானே புதுவிதமான அனுபவங்கள் எனக்கு கிடைக்கும்.

🌟 தனித்து செல்வது இனிமை தான். ஆனால் அனைத்து இடங்களிலும் தனிமை என்பது இனிமையாகாது அல்லவா என்றான் சுதஞ்சணன்.


🌟 நீ சொல்வதும் உண்மை தான். இவ்வளவு காலம் தனிமையில் இருந்தாய், அதனால் தான் உன்னை குடும்பத்தோடு இருக்க சொல்கின்றேன் என்றான் சீவகன்.

🌟 தனித்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய். இனி உன்னை மாற்றுவது என்பது முடியாத காரியம் என்பதை நான் அறிவேன். நான் உன்னோடு வரவில்லை? ஆனால் உன்னுடைய சகோதரர்களும், நண்பர்களும் உன்னை வந்து பார்க்க சிறந்த இடமாக இருப்பது மத்திய தேசம் தான்.

🌟 அங்கு நீ போவதற்குள் அவர்கள் அனைவரையும் அங்கு வந்து உன்னை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்கின்றேன். ஆனால் நீ தனித்து மேற்கொள்ளக்கூடிய பயண பாதை என்பது மிகவும் கடினமும், அபாயமும் நிறைந்தது என்றான் சுதஞ்சணன்.

🌟 பயணம் என்றாலே கடினமும், அபாயமும் நிறைந்தவைகள் தான். எந்த இடத்தில் எந்தவிதமான அபாயம் ஏற்படும் என்பதை நீ தெரிவித்தால் மட்டும் போதும். அதற்கு தகுந்த விதத்தில் நான் அந்த அபாயத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் அல்லது அந்த அபாயத்தை விட்டு விலகி செல்வேன். இதற்காக பயம் கொண்டு பயணத்தை நான் தடை செய்ய முடியுமா? என்றான் சீவகன்.

🌟 அதற்கு சுதஞ்சணன், நீ சொல்வதில் கூட ஒரு உண்மை மறைந்திருக்கின்றது. பயம் ஒருவனை எவ்விதத்திலும், எப்படியும் செயல்பட வைக்கும். அதே சமயம் அவனிடத்தில் தன்னம்பிக்கை இருந்தால் அந்த தடைகளை அவன் நேர்மறை சிந்தனைகளை கொண்டு வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளாக உருவாக்கி கொள்ள முடியும். உன்னுடைய பயணத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களையும், தடைகளையும் உமக்கு நான் கூறுகின்றேன். அந்த இடர்பாடுகளை சரியான முறையில் கையாண்டு உனக்கான வெற்றியையும், இலக்கையும் அடைவாயாக என்று கூறினான். பின் சீவகன் பயணம் மேற்கொள்ளக்கூடிய பாதை பற்றி கூற துவங்கினான்.


Share this valuable content with your friends