No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கந்துக்கடனிடம் பெண் கேட்கும் குபேரமித்திரன்...!!

Mar 06, 2023   Ramya   191    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கந்துக்கடனிடம் பெண் கேட்கும் குபேரமித்திரன்...!!

🌟 விநயமாலை சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த தனது கணவரை நிகழ்காலத்திற்கு கொண்டுவர அவரிடம் உரையாட துவங்கினாள். என்னங்க! எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றீர்களே. மகளுக்கு தகுந்த அறிவுரைகளை கூறலாம் அல்லவா! நான் கூறி அவள் எதுவும் ஏற்றுக்கொள்ளாமல் ஒரே பிடிவாதமாக இருக்கின்றாள் என்றாள்.

🌟 நான் பேசுகிறேன் என்று கூறி குபேரமித்திரன் தனது மகளை கூப்பிட்டு, என்ன ஒரு வித்தியாசமான ஆசை. திருமணமானவரிடத்தில் ஆசை கொள்வது சரியா? என்று மனதில் ஆசை இருந்தாலும் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

🌟 குணமாலை தந்தையே! ஆபத்து நேரத்தில் சூழ்ந்து இருந்த அனைவரும் விலகிச் சென்ற பொழுது அவன் உயிரை துச்சமாக எண்ணி என்னை காப்பாற்றிய அந்த நொடியிலேயே நான் முழுவதும் அவனுக்கே சொந்தமாகி விட்டேன். அப்பொழுது மட்டும் அவன் வரவில்லை என்றால் இப்பொழுது உங்கள் முன் நான் நிற்க இயலாது. ஆகையால் நான் அவனை மட்டுமே மணந்து கொள்ள ஆசை கொள்கிறேன் என்று கூறினாள்.

🌟 அட அவன் உன்னை காப்பாற்றினான் என்றால் அதற்கு அவனுக்கு தக்க வெகுமதி கொடுத்து சிறப்பிக்கலாம். அதற்காக அவனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுவது தவறு என்றார். குணமாலையோ தந்தை கூறிய எந்த கூற்றுக்களையும் ஏற்று கொள்ளாமல் ஒரே பிடிவாதமாக இருந்தாள்.


🌟 மகளின் கூற்றுக்களை கேட்ட குபேரமித்திரனுக்கு அவள் கொண்டிருக்கக்கூடிய ஸ்திரத்தன்மை தெளிவாக புரிந்தது. இனி அவளை மாற்றுவது என்பது சற்று கடினமான வேலை தான் என்பதையும் புரிந்து கொண்டார். பலவிதமாக எடுத்து கூறியும் அவள் மனம் மாற்றம் அடைவதாக இல்லை. இறுதியாக சீவகனின் பெற்றோரிடத்தில் உரையாடுவோம். அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் திருமண நிகழ்வு பற்றி யோசிப்போம். அவர்கள் இல்லை என்று கூறிவிட்டால் உனது ஆசையும், கனவுகளையும் மறந்துவிட வேண்டும் என்று கூறினார்.

🌟 சீவகனின் எண்ணமும், ஆசையும் என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொண்ட குணமாலையோ, நடப்பதெல்லாம் சரியாக தான் நடக்கும் என்று எண்ணி தந்தையின் விருப்பத்திற்கு இணங்குவது போல உங்களின் முடிவே இறுதியாகட்டும் தந்தையே என்று கூறினாள்.

🌟 தனது மகள் கொண்டிருக்கக்கூடிய ஆசையை பற்றி விவாதிக்க குபேரமித்திரன் தனக்கு நெருக்கமான சில நண்பர்களுடன் கந்துக்கடன் வீட்டிற்கு சென்றார்.

🌟 குபேரமித்திரன் சில நண்பர்களோடு தன்னுடைய வீட்டிற்கு வருவதை கண்ட சுநந்தை அவர்களை இன்முகத்தோடு வரவேற்றாள். என்ன அண்ணா! இப்பொழுது தான் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு உங்களுக்கு வழி தெரிந்ததா? என்று வினவினாள்.

🌟 என் தங்கை வீட்டிற்கு வருவதற்கு எனக்கு எப்பொழுதும் வழி தெரியுமே. கொஞ்ச நாட்களாக வியாபார சம்பந்தமாக பயணங்கள் அதிகம் மேற்கொண்டமையால் வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது தங்கையே. எங்கே? அவர் இருக்கின்றாரா? என்று வினவினார் குபேரமித்திரன்.

🌟 அவர் இப்பொழுது தான் வெளியே சென்று இருக்கின்றார். இருங்கள் அண்ணா அவரை அழைத்து வருவதற்கு ஆள் அனுப்பி விடுகின்றேன் என்று கூறி, தனது வீட்டில் இருந்த வேலையாள் ஒருவர் மூலமாக குபேரமித்திரன் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை கந்துக்கடனிடம் தெரிவித்தாள். குபேரமித்திரன் வருகையை கேட்ட கந்துக்கடனும் வேகமாக வீட்டிற்கு வந்தார்.

🌟 வாருங்கள்... குபேரமித்திரா வாருங்கள்.... எங்கே என் தங்கை? அவளும் வந்திருக்கின்றாளா? என்றார் கந்துக்கடன்.

🌟 குபேரமித்திரன் அவரிடம் தங்கை வரவில்லை... நான் மட்டும்தான் வந்தேன். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்பதற்காக என்று கூறினார்.

🌟 சரி.. சரி.. தங்கை நலம் தானே. குழந்தை குணமாலை நலமாக தானே இருக்கின்றாள். செய்தி கேள்விப்பட்டேன் யானையின் பிடியில் சிக்கிக் கொண்டால் என்று. ஏதும் கவலைப்படும் அளவில் ஒன்றும் இல்லையே என்று நலம் விசாரித்தார்.

🌟 வீட்டில் அனைவரும் சுகமாகத்தான் இருக்கின்றோம். ஆனால் ஒருத்தியை தவிர என்று இழுத்தான் குபேரமித்திரன்.

🌟 ஏன்? யாருக்கு என்னவாயிற்று? செய்தி எதுவும் வரவில்லையே என்றார் கந்துக்கடன்.

🌟 இல்லை... இல்லை... அச்சப்படும் அளவில் ஏதும் நடக்கவில்லை. குழந்தை குணமாலை இன்னும் குழந்தையாகவே இருக்கின்றாள் என்று நீங்கள் தான் நினைக்கின்றீர்கள். ஆனால் அவள் வளர்ந்து விட்டேன் என்று என்னிடம் கூறுகிறாள் என்றார்.

🌟 ஏன்? குணமாலைக்கு என்ன ஆயிற்று? என்றார்.


Share this valuable content with your friends