No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனுக்கும் குணமாலைக்கும் திருமணம் நடக்குமா?

Mar 04, 2023   Ramya   123    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனுக்கும் குணமாலைக்கும் திருமணம் நடக்குமா?

🌟 குணமாலையின் செயல்பாடுகள் எப்பொழுதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கொண்டாள் விநயமாலை (குணமாலையின் தாய்). முகத்தில் எப்பொழுதும் இல்லாத மகிழ்ச்சியும், சம்பந்தம் ஏதும் இல்லாமல் அவ்வப்போது வெளிப்படும் அவளது புன்னகையும், ஒருவித பயத்தை அவளிடம் ஏற்படுத்தியது.

🌟 இதை இப்படியே விட்டால் சரியாக வராது என்பதை தெளிவாக புரிந்து கொண்ட விநயமாலை, அவளிடம் இருக்கக்கூடிய இந்த மாற்றங்களுக்கான காரணங்களை அவளிடமே வினவுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தினாள்.

🌟 குணமாலையின் தாயான விநயமாலை, குணமாலையிடம் உன்னுடைய மாமன் மகன் உன்னை திருமணம் செய்து கொள்வதற்காக வரப்போகின்றான் என்று கூறினாள்.

🌟 அவன் எப்படி என்னை மணந்து கொள்ள முடியும்? அவனை எனக்கு பிடிக்கவேயில்லை.. அவன் சீர்களை வேண்டாம் என்று மறுத்து விடுங்கள்! என்று குணமாலை கூறினாள்.

🌟 யானையிடம் பிடிபட்டு உயிர் பிழைத்ததில் இருந்து உன்னுடைய செயல்கள் அனைத்தும் வித்தியாசமாக தான் இருக்கின்றது. இதுவரை என்னிடத்தில் இப்படி நீ கூறியது இல்லை. இப்பொழுது உன்னுடைய மனதில் ஏதோ இருக்கின்றது என எனக்கு தெரிகின்றது. ஆனால் அது என்ன? என்பது தான் எனக்கு புரியவில்லை. காலம் தாழ்த்தாமல் நீயே உன்னுடைய மனதில் என்ன இருக்கின்றது? என்பதை தெளிவாக சொன்னால் சரியான முடிவை அந்தந்த காலத்திற்குள் எடுத்து கொள்ள முடியும். காலம் தாழ்த்தப்பட்டால் முடிவுக்கு உண்டான பலன்களும் மாறுபடும் என்பதை நினைவில் கொள் என்றாள் விநயமாலை.

🌟 ஆமாம்... என்னிடத்தில் மாற்றங்கள் நிறைய இருக்கின்றது தான்! அது தான் இப்பொழுது உங்களுக்கு பெரிய கவலையாக இருக்கின்றதா? என்று தன் தாயை பார்த்து குணமாலை கேட்டாள்.

🌟 எனக்கு அதுதான் கவலையாக இருக்கின்றது. உன்னுடைய மாமன் மகனுக்கு என்ன குறைச்சல் இருக்கின்றது? வீடு, மனை, தோட்டம் என அனைத்தும் அவனிடம் இருக்கின்றது. அவனை மணந்து கொண்டால் இங்கு இருப்பது போல் அங்கும் நீ சுகமாக இருக்கலாமே. அப்படி இருக்கும் போது ஏன் வேண்டாம் என்று கூறுகின்றாய்? அதற்கான காரணம் என்ன? என்று வினவினாள் விநயமாலை.

🌟 தாயின் கூற்றுக்களை கேட்டுக் கொண்டிருந்த குணமாலையோ, நான் திருமணம் செய்து கொண்டால் யானையிடமிருந்து என்னை காப்பாற்றிய வீரனுக்கு மட்டுமே மாலையிடுவேன். இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினாள்.

🌟 தன்னுடைய மகளின் கூற்றுக்களை கேட்டதும் அவளிடத்தில் என்ன கூறுவது என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள் விநயமாலை. பின்பு அவளிடம் நீ ஆசைப்பட்டவன் திருமணம் ஆகாதவனாக இருந்தால் பரவாயில்லை... ஆனால் அவன் இன்னொரு பெண்ணின் கணவன் ஆவான். அவனை எப்படி மீண்டும் நீ திருமணம் செய்து கொள்ள முடியும்?

🌟 வீரனை மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் முடிவு செய்து விட்டால் பல ஆண்களின் நிலை என்னவாகும் என்பதே தெரியாது என்றாள் விநயமாலை.

🌟 மனதில் ஈரம் இருக்கின்ற பல மங்கையர்கள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்களை பார்த்துக் கொள்வார்கள். என்னை அவர்களிடத்தில் சேர்த்து விடாதீர்கள். விட்டுவிடுங்கள் என்றாள் குணமாலை.


🌟 அப்பொழுது குணமாலையின் தந்தை வீட்டிற்கு வர, இருவருக்கும் இடையே காரசாரமான பேச்சுக்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை புரிந்து கொண்டதும், என்ன இருவரும் உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வினவினார்.

🌟 விநயமாலை தன்னுடைய கணவரிடம் மகள் மனதில் கொண்டுள்ள எண்ணங்களையும், ஆசைகளையும் பற்றி கூறினாள்.

🌟 மகளுடைய எண்ணங்களை அறிந்ததும் கோபப்படுவார் என எதிர்பார்த்த விநயமாலைக்கு நிகழ்ந்த நிகழ்வு ஒரே வியப்பாக இருந்தது.

🌟 அதாவது எந்தவிதமான கோபத்தையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக ஆள சிந்திக்க துவங்கினார். எந்தவித உரையாடலும் இன்றி கனப்பொழுதில் மிகுந்த அமைதி அவ்விடத்தில் தோன்றியது.

🌟 தன்னுடைய மகளை சீவகனுக்கு திருமணம் செய்து வைத்தால் கந்துக்கடனுடன் வியாபாரத்தில் இணைந்து நல்ல பொருள் லாபத்தை அடைய இயலும். வணிகமும் மேம்படும். ஏமாங்கத நாட்டின் மொத்த வணிகத்தையும் தங்கள் கைகளிலே வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார்.

🌟 அதுமட்டுமல்லாமல் சீவகனும் நல்ல மணமகன் தானே. என்ன அவனுக்கு திருமணம் நடந்து விட்டது. அது ஒன்றுதான் இப்பொழுது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது என்று பல வினாக்கள் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தன.


Share this valuable content with your friends