No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... குணமாலையும் பேசும் கிளியும்..!!

Mar 02, 2023   Ramya   146    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... குணமாலையும் பேசும் கிளியும்..!!

🌟 மதம் பிடித்த அந்த யானையை பாகனிடம் ஒப்படைத்த சீவகன் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது அந்த யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையின் பதற்றமான முகம் மட்டுமே அவனுடைய நினைவிற்கு திரும்ப திரும்ப வந்து ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.

🌟 வீணையில் காந்தருவதத்தையை வென்றதை அவன் முழுமையான வெற்றியாகவே ஏற்று கொள்ளவில்லை. யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையை, யானையிடமிருந்து காப்பாற்றி யானையின் மதத்தை அடக்கியதையே அவன் முழுமையான வெற்றியாக நினைத்தான்.

🌟 குணமாலை பார்த்த அந்த மோக பார்வையில் எத்தனை விதமான பொருட்கள் இருந்ததோ? என்று அவனுக்குள்ளே உரையாடி கொண்டிருந்தான்.

🌟 வீட்டை அடைந்ததும் அவன் கொண்ட தனிமை அவனை மிகவும் வாட்டியது. சோலையில் இருக்கக்கூடிய கிளிகளை காண அவன் உள்ளம் ஏனோ துடித்து கொண்டே இருந்தது.

🌟 அருகில் இருப்பவர்கள் வந்து சென்று தன்னுடைய கற்பனை தவத்தினை கலைப்பதை அவன் விரும்பவில்லை. அந்த யானையின் பிடியில் சிக்கியவளை அணு அணுவாக எண்ணிய விதமாக, பாற்கடலில் நீந்தி விளையாடி கொண்டு, வீட்டின் பின்புறத்தில் இருக்கக்கூடிய சோலையில் உள்ள ஒரு மேடையின் மீது ஏறி அமர்ந்தான். அங்கே மரத்தில் இருக்கக்கூடிய கூட்டில் எங்கிருந்தோ வந்த பறவைகள் முணுமுணுத்து திட்டி கொண்டிருப்பது போல ஒலிகளை எழுப்பி கொண்டிருந்தன.


🌟 இங்கு குணமாலையோ, ஆபத்து நேரத்தில் அவன் உயிரை துச்சமாக எண்ணி, களத்தில் இறங்கி தன்னை காப்பாற்றி, இப்பொழுது தான் உயிரோடு இருப்பதற்கு காரணமாக இருக்கின்ற சீவகனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் வந்ததை நினைத்து மனதளவில் தேள் கொட்டியது போல துடிதுடித்து கொண்டிருந்தாள்.

🌟 மனதில் ஏற்பட்ட இந்த குழப்பங்கள் அனைத்தையும் யாரிடத்திலாவது சொல்லி தீர்வினை அறிய வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் இதை யாரிடமாவது கூறினால் பின்னாளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு விடுமோ? என்றும் எண்ணினாள். மதில் மேல் பூனை நிற்பது போல இந்த பக்கம் இறங்குவதா? அந்த பக்கம் இறங்குவதா? என்பதே புரியாமல், இறுதியாக சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளையிடம் மனதில் இருப்பதை வெளிப்படுத்தி கொண்டிருந்தாள் யாரும் இல்லா தனிமையான பூஞ்சோலையில்.

🌟 கிளிப்பிள்ளையிடம் வந்து நெடுநேரம் ஆகியும் குணமாலை ஏதும் பேசாமல், தன்னந்தனியாக சிரித்த வண்ணமாக அமர்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்ட பேசும் கிளி, குணமாலையே! நடப்பது எதுவும் எனது பார்வைக்கு சரியாக படவில்லை என்று கூறியது.

🌟 கிளியின் குரலைக் கேட்டு நினைவுக்கு திரும்பிய குணமாலையோ என்ன கூறினாய்? என்ன சரியாக படவில்லை? அனைத்தும் நன்றாக தானே நடக்கின்றது என்று கேட்டாள்.

🌟 அதற்கு கிளியானது அதை தான் உன்னிடம் நான் கேட்கிறேன்! வந்து நெடுநேரமாகியும் என்னிடம் பேசாமல் ஏதோ அமைதியாக அமர்ந்து உள்ளுக்குள்ளே சிரித்து கொண்டிருக்கின்றாய். எப்பொழுதும் இல்லாத ஒருவிதமான பூரிப்பு இன்று உனது முகத்தில் வெளிப்படுகின்றதே! என்ன நிகழ்ந்தது? என்று வினவியது அந்த பேசும் கிளி.

🌟 இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் குணமாலை பேசும் கிளியிடம் கூறிவிட்டு, தனது மனமானது இப்பொழுது தன்னிடத்தில் இல்லை என்றும், தன்னை காப்பாற்றியவன் தனது மனதையும் களவு கொண்டு போய் விட்டான் என்றும் கூறினாள்.

🌟 மனதில் தவறான ஆசைகளை வளர்த்து கொள்ளாதே குணமாலை.. அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதை நீயே கூறி இருக்கின்றாய்! என்று அந்த கிளி கூறியது.

🌟 அதற்கு குணமாலை ஒரு சாதாரண கிளிக்கு இவ்வளவு வாய் இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு, இதில் என்ன தவறு இருக்கின்றது? என கிளியை பார்த்து கேட்டாள்.


🌟 ஆமாம்.. இப்பொழுது நீ தான் உன்னை பற்றியும், உன் மனமானது களவு போனதை பற்றியும் கூறினாய். ஆனால் உன் மனதை களவு எடுத்தவன் உன்னை காதலிக்கின்றானா? என்பதை அறியாமலே உன் மனதில் தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்து கொள்ளாதே! பின்னாளில் அந்த ஆசைகளே மிகப்பெரும் வேதனையை ஏற்படுத்தும் என்றது பேசும் கிளி.

🌟 ஏன் இவ்வாறு பேசி கொண்டிருக்கிறாய்? எனது அழகின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? என்று குணமாலை கேட்க,

🌟 உனக்கென்ன குறைச்சல்! நீ மிகவும் அழகாக தான் இருக்கின்றாய். ஆனால் சீவகன் மணந்த முதல் மனைவியான காந்தருவதத்தை உன்னை விட அழகில் சிறந்தவளாகவும், பேரழகியாகவும் இருக்கின்றாளே என்றது கிளி.


Share this valuable content with your friends