No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - போட்டியில் வெற்றி பெற்ற குணமாலை..!!

Feb 27, 2023   Ramya   137    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... போட்டியில் வெற்றி பெற்ற குணமாலை..!!

🌟 சேடி பெண்கள் கேட்ட கேள்விக்கு, சீவகனோ அது மிக மிக எளிது.. திருவிளையாடல் புராணம் படித்திருந்தால் உங்களுக்கு அதனுடைய பதில் தெரியும். அதாவது நக்கீரருக்கும், சிவபெருமானுக்கும் நடக்கும் வாதம் தன்னுடைய காதலியின் கூந்தலுக்கு மணம் இருப்பது இயற்கையாகவா அல்லது செயற்கையாகவா? என்பதே அவர்களுக்குள் ஏற்பட்டு இருக்கக்கூடிய ஒரு கருத்து விவாதமாகும். அந்த விவாதத்திற்கு உண்டான பாடலை இதோ கூறுகிறேன்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

🌟 வாசனை நிறைந்த பல பூக்களை சுற்றி கொண்டிருக்கும் வண்டுகளே, என்னுடைய தலைவியின் கூந்தலில் இருந்து வெளிப்படும் மணத்தை விட அதிக மணம் கொண்ட பூக்களை நீங்கள் கண்டதுண்டோ? என்று வினவுகிறான் என்பதே அந்த பாடலுக்கு உரிய கருத்தாகும்.

🌟 இந்த பாடல் தான் உங்களுடைய கேள்விக்கு உண்டான பதிலை கூறுவதற்கு எனக்கு உதவியாக இருந்தது என சீவகன் கூறினான்.

🌟 பரவாயில்லை கற்ற கல்வி தகுந்த சமயத்தில் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றது என்று உரைத்து சேடி பெண்கள் சீவகனை பாராட்டினர். பின், காலம் மிகவும் தாழ்ந்து விட்டது எங்கள் வருகைக்காக எங்கள் தலைவிகள் காத்துக்கொண்டு இருப்பார்கள். இந்த போட்டியின் முடிவினை நாங்கள் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி அவரிடத்தில் இருந்து விடைபெற்று அவர்களின் தலைவிகள் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

🌟 குணமாலை அரைத்த சுண்ணம் தான் சிறந்தது என்றும், இருவரில் குணமாலையே வெற்றி பெற்றாள் என்றும் சேடி பெண்கள் இறுதி முடிவினை கூறினார்கள்.

🌟 சேடி பெண்களின் முடிவினை கேட்டதும் சுரமஞ்சரிக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. யார் இந்த முடிவினை கூறினார்கள்? எவ்விதம் கூறினார்கள்? நான் அரைத்த சுண்ணத்தை விட குணமாலை அரைத்த சுண்ணம் உயர்ந்தது என்று கூறியவன் யார்? என்று சேடி பெண்களை பார்த்து சுரமஞ்சரி வினவினாள்.

🌟 யாழிசை போட்டியில் வெற்றி பெற்று காந்தருவதத்தையை திருமணம் செய்து கொண்ட சீவகன் தான் இந்த முடிவினை கூறினார் என்று சேடி பெண்கள் கூறினார்கள்.

🌟 ஓ... சீவகனா... அவன் என்னைவிட உன்னைத்தான் மிகவும் ரசிக்கின்றான் போல் இருக்கிறது. நம்மிருவருக்கும் நடைபெற்ற இந்த போட்டியை ஒரு காரணமாக கொண்டு அவனிடத்தில் நல்ல மதிப்பையும், பாராட்டையும் பெற்றுவிட்டாய் போல் இருக்கிறது. நீ சரியான கெட்டிக்காரி தான்.

🌟 போட்டியில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், அவனுடைய மனதையும் வென்று விட்டாய். உன்னுடைய பெயரை கேட்டதும் அவன் முடிவு செய்து இருப்பான் பெயருக்கு ஏற்றார் போல் குணம் கொண்டவளாக இருப்பாள் என அவன் எண்ணியிருப்பான் என்று குற்றம் சாற்றினாள்.

🌟 குணமாலை போட்டியில் வெற்றி பெற்றதை பொறுக்க முடியாத சுரமஞ்சரி, சுரமஞ்சரி என பெயர் வைத்து எனக்கு என் பெற்றோர்கள் தவறு இழைத்து விட்டார்கள். மாலைக்கு ஒரு காலம் என்றால், மஞ்சரிக்கும் ஒரு காலம் வரும். கண்டிப்பாக அவனை அடைந்தே தீருவேன். இப்பொழுது நான் கன்னி மாடம் சேர்வேன் என்றாள். ஆண்மகன் என்றால் அவன் தான் ஆண்மகன். என் மனம் கவர்ந்த நாயகன். அவனை விடுத்து இனி யாரையும் நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்று கூறினாள்.

🌟 பார்ப்பதற்கு இனியவனாக இருக்கின்றான் என்று நீயே கூறுகின்றாய். அதனால் அவனை காதலிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. இது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு தான். இதற்கு ஏன் உன்னுடைய மனதை புண்ணாகும்படி நீயே பேசிக்கொண்டு இருக்கின்றாய். அதனால் உனக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்றாள் குணமாலை.

🌟 ஆமாம்... ஆமாம்... எனக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ஆனால் உனக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். அவனுக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டது போல. பிடித்ததும் பிடித்தாய் நல்ல புளியங் கொம்பாகவே பிடித்துக் கொண்டாய். இனிமேல் என்ன உனக்கு? மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை தானே என்று சுரமஞ்சரி கூறும் பொழுதே..

🌟 போதும் சுரமஞ்சரி.. போதும்.. இப்பொழுது வரை எனக்கு அவன் மீது எந்த நாட்டமும் இல்லை. நீ சொல்லி தான் எனக்கு தெரிகின்றது அவன் என்னை காதலிக்க கூடும் என்று. என்னிடம் பார்த்து மகிழ என்ன இருக்கின்றது? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நீ ஏதேதோ சொல்கின்றாய். இனி அதையும் காட்டிவிட்டால் போகிறது என்று கூறினாள் குணமாலை.


🌟 அதற்கு சுரமஞ்சரியோ, இப்பொழுது வருகிறது பார் உன் மனதில் இருக்கும் உண்மை. நீ வேண்டாம் என்று விலகி சென்றாலும் உன்னிடத்தில் தன்னுடைய காதலை உரைத்து, உன்னை திருமணம் செய்து கொள்ளாமல் அவன் இருக்க போவதில்லை என்றும், ஒரு பார்வையிலேயே அவன் உன்னை கட்டிப்போட்டு விடுவான். ஒரு சிறிய பூ போதும் உனது மனதை கவருவதற்கு. இப்பொழுது அந்த பூவும் உனக்கு தேவையில்லை. நீ தான் அவனை பொடி போட்டு மயக்கி விட்டாயே என்றும்,

🌟 சுண்ணம் என்று எங்களிடத்தில் மட்டும்தான் கூறினாய். ஆனால் உண்மையில் அது அவனை மயக்கும் சொக்குப்பொடியாக செயல்படும் விதத்தில் தயாரித்து இருக்கின்றாய். என்னை ஒரு கருவியாக கொண்டு நீ அவனிடத்தில் உன் காதலை தூது அனுப்பியிருக்கின்றாய். உங்களுடைய பேச்சுவார்த்தை இன்னும் தொடரட்டும். அவன் திருமணம் செய்ய போகின்ற இரண்டாவது பெண்ணாக நீ கூட இருக்கலாம் என்று சுரமஞ்சரி கூற..

🌟 போதும்.. சுரமஞ்சரி போதும்..! இனியும் இல்லாத காதலை உன்னுடைய பேச்சுக்களாலே என்னிடத்தில் உருவாக்கி விடாதே. இல்லை என்றால் கிடைக்கும் சிறு வாய்ப்பாக இருந்தாலும் உனக்காகவே அவனை காதலிப்பேன் என்று குணமாலை கூறினாள்.


Share this valuable content with your friends