No Image
 Sun, Oct 06, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை : நுண்ணறிவு மிக்க ஆண் மகன் யார்?

Feb 17, 2023   Ramya   191    விக்ரமாதித்தன் கதைகள் 


இறந்த மனித சவத்தை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்த விக்ரமாதித்தனிடம், அந்த சவத்துக்குள்ளிருந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.

ஒரு ஊரில் வயதான பண்டிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அம்மூவரும் ஒவ்வொரு விஷயத்தில் நுண்ணறிவாற்றல் மிக்கவர்களாக இருந்தனர்.

முதல் மகன் உணவை குறித்த விஷயத்தில் நுண்ணறிவு மிக்கவனாக இருந்தான்.

இரண்டாமவன் பெண்களைக் குறித்த விஷயத்தில் நுண்ணறிவு மிக்கவனாக இருந்தான்.

மூன்றாமவன் பிறர் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவர்கள் உடல் சம்பந்தமான விஷயங்களில் நுண்ணறிவு மிக்கவனாக இருந்தான்.

ஒருமுறை இம்மூவருக்குள்ளும் தங்களில் யார் சிறந்தவன்? என்ற போட்டி எழுந்தது. இந்த பிரச்சனை மன்னனிடம் சென்றது.

இம்மூவரும் தங்களைப் பற்றியும், தங்களின் திறமையைப் பற்றியும், இப்போது எழுந்திருக்கும் பிரச்சனையைப் பற்றியும் அந்த மன்னனிடம் கூறினர்.

நடந்ததையெல்லாம் கேட்ட மன்னன் அமூவரில் யார் சிறந்தவர்? என்பதை அறிய, அம்மூவரையும் சோதிக்க எண்ணினான். அதன்படி முதலில் அந்த முதலாவது மகனுக்கு சுவையான உணவை தயாரித்து, அவன் உண்ண ஏற்பாடு செய்து, அவனை அந்த உணவை உண்ணுமாறு வேண்டினான்.

அப்போது அந்த உணவை சிறிது எடுத்து ருசித்த அந்த முதல் மகன் இந்த உணவில் மனித பிணங்களின் ருசி இருப்பதாக கூறி அந்த உணவை மறுத்தான். இதை பற்றி விசாரித்த அம்மன்னன் அந்த உணவு சமைக்கப்பட்ட தானியங்கள் ஒரு சுடுகாட்டிற்கு அருகிலிருந்த விளைநிலத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட உண்மையை அறிந்து கொண்டான்.


இரண்டாவது மகனை சோதிப்பதற்கு ஒரு அழகான இளம் பெண்ணை, அவனிடம் பேசுவதற்கு அனுப்பி வைத்தான். அவன் தன்னிடம் அந்தப் பெண் நெருங்கும் முன்பே அவளை தடுத்து நிறுத்தினான். மேலும் அந்தப் பெண் ஒரு ஆட்டின் மணத்தை அவளது உடலில் கொண்டிருப்பதாக கூறினான். இதை பற்றி விசாரித்த அம்மன்னன் அந்த பெண் சிறு வயதிலிருந்தே ஆடுகளின் பாலை அருந்தி வளர்ந்தவள் என்ற உண்மை நிலவரத்தை அறிந்தான்.

இப்போது மூன்றாவது மகனின் திறனை அறிய அவனை, தனது அரண்மையின் ஒரு அறையில் ஏழு அடுக்கு மெத்தைகள் போட்ட ஒரு கட்டிலில் உறங்கச் செய்தான். அப்போது நள்ளிரவில் அந்த மகன் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்தான். தன் உடலில் பிறர் உடல் சம்பந்தமான ஏதோ ஒன்று பட்டு, அதனால் தன் உடல் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டது போல் உணர்ந்தான்.

இப்போது அந்த மெத்தைகளை அம்மன்னன் சோதித்து பார்த்த போது அதில் ஒரு பெண்ணின் நீண்ட தலைமுடி இருப்பதை கண்டுபிடித்தான். மூவரின் திறனையும் சோதித்து அறிந்து கொண்ட மன்னன் இந்த மூவரில் யார் சிறந்தவர் என்று தீர்மானிக்க யோசித்தான்.

கதையின் மையக்கருத்து :

விக்ரமாதித்தா இந்த மூவரில் யார் உண்மையிலேயே நுண்ணறிவாற்றல் மிக்கவன்? என்பதை நீ கூறு என்றது வேதாளம். அதற்கு சற்று யோசித்த விக்ரமாதித்தன் அந்த மூன்றாவது மகன் தான் உண்மையிலேயே நுண்ணறிவு மிக்கவன்.

ஏனெனில் முதல் இருவரும் தங்களுக்கு இருப்பதாக கூறப்பட்ட அந்த திறமைகளில்லாவிட்டாலும் பிறரிடம் விஷயங்களைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகளுக்கு உண்டான பதில்களைக் கூறி விட முடியும். ஆனால் உண்மையிலேயே பிறரின் உடல் சம்பந்தமான பொருட்களை தன் உடலால் உணர்ந்தவன் அந்த மூன்றாவது மகன். எனவே அவன் தான் அந்த மூவரில் சிறந்தவன் என்று பதிலளித்தான்.

தன் கேள்விக்கு விக்ரமாதித்தன் சரியான விடையளித்ததும் அந்த வேதாளம் அவன் பிடியிலிருந்து விடுபட்டு பறந்து, தான் தொங்கிக்கொண்டிருந்த மரத்தில் சென்று தலைகீழாக தொங்கியது.


Share this valuable content with your friends