No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... அந்த காலத்தில் ஒரு இலவச டாக்டர்...!!

Feb 08, 2023   Rathika   135    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது...


விஜய்ப்பூர் என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் அனைத்து மக்களுக்கும் உதவி செய்து வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் திருமணம் செய்தால் மாறி விடுவான் என்று நினைத்து ரமா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் நீங்கள் மற்றவர்களுக்கு செய்த உதவியின் மூலம் பயன் அடைந்தார்களா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். இதை கேட்டு மற்றவர்களிடம் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள்.

அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்றார் ரகு. அதற்கு ரமா சந்திரநகர் என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி அவரிடம் சென்று நீங்கள் கற்று கொள்ளுங்கள் என்றாள். அதன்படி ரகுவும் ஒரு வருடத்தில் வைத்திய முறைகளை கற்று தேர்ந்தான். மேலும் ரகு தனது வைத்திய தொழிலை நேர்மையாக செய்யும் பட்சத்தில் தன்னிடமுள்ள அனைத்து வைத்திய குறிப்பு சுவடிகளையும் தருவதாக வைத்தியநாதன் உறுதியளித்தார். பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்க தொடங்கினான்.

ஒரு நாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான்.

இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசீர்வதித்தார். அதோடு சந்திரநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறி வந்தார்.

ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாதது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குருவான வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவந்து, மருந்து தயாரித்து அதை ரமாவிற்கு கொடுத்தான். அவளும் அதை உண்டு குணமடைந்தது போல் நடித்தாள்.

கதையின் கருத்து :

இப்போது வேதாளம் விக்ரமாதித்தா ரகுவின் சுயநலத்தைப் பார், பிறருக்கு சிகிச்சை அளிக்க தன் குருவிடம் சுவடிகளை வாங்கச் செல்லாதவன், தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஓலைகளைப் பெற்றது சரியா? மேலும் நேர்மையாக மருத்துவ தொழிலை நடத்தினால் ஓலைச்சுவடிகளை தருவதாக கூறிய வைத்தியநாதன் எப்படி ரகுவிற்கு உடனே சுவடிகளைக் கொடுத்தார்? என கேட்டது.

ரகு சந்திரநகரில் இருக்கும் தன் குருவிடம் செல்லும் காலத்தில், தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிப்பதில் தடங்கல் ஏற்படும் என்றே அவரிடம் செல்ல காலம் தாழ்த்தி வந்தான். பாதிக்கப்பட்டது மனைவி எனின் எந்த கணவனும் அவளுக்காக எத்தகைய காரியத்தையும் செய்வார்கள், இதில் அவனது சுயநலம் ஏதும் இல்லை. மேலும் ரகுவின் நேர்மையை பிறர் மூலம் அறிந்த அவனது குருவும் அவன் கேட்டவுடன், அவனுக்கு ஓலைச்சுவடிகளை கொடுத்து விட்டார் என்ற விக்ரமாதித்தனின் விடையைக் கேட்டு வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


Share this valuable content with your friends