No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - வேடுவர்கள் பசுக்களை கவர்தல்...!!

Feb 04, 2023   Rathika   138    சீவக சிந்தாமணி 


வேடுவர்கள் பசுக்களை கவர்தல்...

🌟 காத்திருந்தது வீண்போகவில்லை வேடுவர்களுக்கு. அவர்கள் எதிர்பார்த்த தருணங்களும் சாதகமாக அமைந்தன.

🌟 இடையர்கள் சிலர் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கக்கூடிய காட்டில் உள்ள புற்களை மேய்வதற்காக மாடுகளை ஓட்டிச் சென்றார்கள்.

🌟 அதுவரை பொறுமை காத்திருந்த வேடுவர்கள் எதிர்பாராத தருணத்தில் திடீரென்று இடையர்களை தாக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய தாக்குதலுக்கு மறு தாக்குதல் செய்ய முடியாத இடையர்கள் தப்பித்தோம், பிளைத்தோம் என்ற எண்ணத்தில் அவ்விடத்தை விட்டு ஓடி நகரத்திற்குள் வந்தனர்.

🌟 இடையர்கள் பயந்து ஓடுவதை கண்டு சிரித்த வண்ணமாக இருந்த வேடுவர்கள் இடையர்கள் அனைவரையும் துரத்தி அடித்த பின்பு அந்த பசு மாடுகளை அவர்களுடைய இடத்திற்கு கவர்ந்து சென்றனர்.


🌟 தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் அப்பசுவின் உரியவர்களிடம் சென்று நிகழ்ந்த நிகழ்வுகளை எடுத்துக் கூறினார்கள். தன்னுடைய தாயை எதிர்பார்த்து குரல் கொடுத்து காத்துக்கொண்டிருந்த கன்று குட்டியை பார்த்த வண்ணமாக வீட்டில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இருந்தார்கள்.

🌟 இது போன்றதொரு நிகழ்வு மீண்டும் இனிவரும் நாட்களில் நிகழக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பசுவை இழந்த இடையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசனிடம் சென்று அவனுடைய கடை வாயிலில் முறையிட்டனர்.

🌟 குறை கேட்டவன் படைகளை அனுப்பி பசுக்களை மீட்டு வருக! என்று ஆணையை பிறப்பித்தான். படைகள் அனைத்தும் மன்னருடைய மைத்துனனான மதனன் தலைமையில் வேடுவர்களை விரட்டி அடித்து ஆநிரைகளை மீட்டு வருவோம் என்று கூறி புறப்பட்டார்கள். சென்ற வேகத்தை விட திரும்பிய வேகம் அதிகம் என்பது போல முரடர்களான வேடுவர்களை எதிர்த்து அவர்கள் யாவரையும் விரட்டி அடிக்க முடியாமல் அவரவர்கள் தாம் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு உடலுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே வீரத்தை விட உயிரை பெரிதாக மதித்து ஊர் திரும்பினர்.

🌟 திரும்பிய வீரர்களை கண்ட மக்கள் அனைவரும் வேடுவர்களை விரட்டி விட்டீர்களா? ஆநிரைகளை மீட்டு விட்டீர்களா? என்று வினவிய வண்ணமாக ஆநிரைகளை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால் ஆநிரைகள் ஒன்றும் திரும்பவில்லை என்பதை அறிந்து பசுக்களைப் பறி கொடுத்தவர்கள் செய்வது அறியாது கலக்கம் அடைந்தனர்.

🌟 வேடுவர்களை எதிர்த்துப் போரிட முடியாமல் படை வீரர்கள் அனைவரும் புறமுதுகிட்டு திரும்பி வந்ததை அறிந்து கொண்ட இடையர்களின் தலைவனான நந்தகோன் இனி அரசனையும், அரசபடையினரையும் நம்பியிருந்தால் எந்தவித பயனும் ஏற்படாது என்பதை புரிந்து கொண்டான். ஆகவே ஆநிரைகளை மீட்கும் பொறுப்புகளை தானே ஏற்றுக்கொண்டார்.

🌟 மாடுகளுக்காக உயிர் விடுவதா? என சிந்தித்து எந்த செயலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருக்கக்கூடிய இளைஞர்களை அவர் வெறுக்கத் தொடங்கினார். இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்ட இடையர்களின் தலைவன் அவர்களை எவ்விதத்தில் தூண்டிவிட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்.

🌟 நந்தகோனின் மகள் அழகு பதுமையாக இருந்தாள். அவளை திருமணம் செய்து கொள்வதற்காக இராசமாபுரத்தில் நிறைய இளைஞர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

நந்தகோனின் மகள் அழகை பதுமுகன் வர்ணித்தல்...

🌟 எருதுகளின் கூரிய அம்பினை கண்டு அஞ்சுபவனை இடையர் பெண் விரும்பமாட்டாள் என்றும் வீரத்திருமகனையே இடைப் பெண்கள் விரும்புவார்கள். வீரம் மிக்கவனுக்கு என் மகள் தாரம் ஆவாள் என்று நந்தகோன் பறையறிவித்தான். ஆநிரையை மீட்டுக் கொண்டு வரும் வீரத்திருமகனுக்குத் தன் மகள் உரியள் எனவும், அவளோடு வரிசை என்ற பேரால் பசுக்கள் ஈராயிரமும், பொற்பாவைகள் ஏழும் தருவதாகவும் உரைத்தான்.


🌟 ஊரில் இருக்கக்கூடிய அனைத்து காளைகளும் பறையொலியை கேட்டார்கள். கோவிந்தை என்ற அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ளக் காத்திருந்தவர்கள் எல்லாம் காத தூரம் ஓடினார்கள். கட்டி வெண்ணெய் போன்ற காரிகை கோவிந்தையானாலும் சரி, கொட்டிய முல்லை போன்ற நிறம் உடைய அரமகளிர் ஆயினும் சரி, வெட்டி வீழ்த்தும் செயல் உடைய வேடுவரை எதிர்க்க நம்மால் முடியாது என்று விதிர்விதிர்த்து ஒடுங்கினர்.

🌟 சீவகனின் தோழர்களும், தம்பியரும் இச்செய்தி கேட்டனர். புதுமுகம் என்றால் நகைமுகம் காட்டும் பதுமுகன் சீவகனிடம் வந்து போர் தொடுப்போம் என்று தூண்டினான். நம்மால் இயலுமா? என்று சிந்தித்துப் பார்த்தனர். அழகி ஒருத்தி கிடைப்பாளே என்று அங்கலாய்த்தான் பதுமுகன். அதற்காக நாம் வைரக் கத்தியில் கழுத்து அறுத்துக் கொள்ள முடியுமா? யோசித்துச் செயல்படுவோம் என்றான் புத்திசேனன்.

🌟 பதுமுகனுக்கு அந்த அழகு தாரகையை கண்டது முதல் அவள் மீது இனம் புரியாத ஆவல். அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஊரில் உள்ள அனைத்து இளைஞர்களும் என்னும் போது நான் மட்டும் என்ன விதி விலக்கா? சிந்தித்தால் சிந்தித்து கொண்டே தான் இருக்க முடியும். ஆனால் அவளுடைய லாவண்யா பிரதிமை உரைப்பது அவ்வளவு எளிதல்ல.

🌟 வெண்ணெய் போன்று இனியவளாகவும், பால் போல் வெண்மை மனம் கொண்டவளாகவும், வெண்ணெய் உருக்கிய பசு நெய்போல் இளைத்த தேக மேனியள். நீ எப்போதாவது கரும்பு வில்லை பார்த்திருக்கிறாயா? பார்க்க வில்லை என்றால் விடு. ஏன் அதை பார்க்க வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை அவளுடைய இரண்டு புருவங்களைப் பார்த்தால் போதும்.

🌟 கயல் விழி என்று கேள்விப் பட்டிருக்கிறாயா? சிலர் அவளைக் கயல்விழி என்றே கூப்பிடுகிறார்கள். கட்டமைந்த மேனி, தொட்டால் துவண்டு விடும் இடை, அழகுக்காகவே அவளை ஆராதிக்கலாம். கோயில் சிலைபோல அவளுடைய லாவண்யா வடிவம் இருக்கும் என புதுமுகம் சிறு நொடியில் கண்ட அந்த பதுமையின் லாவண்யா வடிவங்களை ஏதோ யுகம் பொழுது அவளுடன் வாழ்ந்தவன் போல கூறிக்கொண்டு இருந்தான்.

🌟 அவனுடைய நண்பர்களோ கவிஞரே! போர் புரிய செல்லலாம் என்று கூறியது ஆநிரைகளுக்காக இல்லை என்பது போல தெரிகின்றதே.. என்று புத்திசேனன் கூறிய போது தான் பதுமுகன் கற்பனை உலகத்தை விடுத்து நிகழ் உலகிற்கு வந்தான். வந்தவன் அது இல்லை, இது இல்லை என்று கூறி விளையாடிக் கொண்டு இருந்தான்.

🌟 ஆனால் சீவகனோ நண்பர்களின் பேச்சுக்களையும், உரையாடல்களையும் கேட்டுக் கொண்டு இருந்தாலும், அவனுடைய உடலில் ஓடுவது என்னவோ அரச ரத்தம் தானே. தன் நாட்டின் நிலையையும், பொதுமக்களுடைய சூழலையும் எண்ணி மிகுந்த கவலை கொண்டான். பதுமுகன் கூறியதுபோல சிந்தித்தால் சிந்தித்துக் கொண்டே தான் இருக்க முடியும். ஆகவே செயலில் இறங்க வேண்டும் என்றும், அதற்கான வாய்ப்புகள் அமைந்து விட்டன என்றும் திண்ணமாக எண்ணினான்.

🌟 அதுவரை புன்னகைத்துக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் சீவகனை கண்டார்கள். சீவகனோ இங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய நிகழ்வுக்கும், தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது போலவே எதையோ சிந்தித்துக் கொண்டே இருப்பதை அவனுடைய முகத்தின் வெளிப்பாடுகள் மூலம் தெரிந்து கொண்டார்கள் அங்கிருந்த நண்பர்கள் அனைவரும்.

🌟 என்ன சீவகனே! ஆழ்ந்த யோசனையில் அகப்பட்டுக் கொண்டாயோ? சிரிப்பதற்கு கூட நொடிகள் இல்லாமல் சிந்தித்துக் கொண்டே இருக்கின்றாய் என்று கேட்டான் பதுமுகன்.

🌟 சீவகனோ தன்னுடைய நண்பர்களைப் பார்த்து நம்முடைய நாட்டு நிலைதான் என்ன? வேடுவர்களை எதிர்த்துப் போராடக்கூட நம் நாட்டில் வீரர்கள் இல்லையா? இனியும் பொறுத்திருப்பது என்பது முடியாது. இது நமக்கு விட்ட சவால் அல்ல. நமது நாட்டிற்கே விட்ட சவால் ஆகும். இதை முளையிலேயே கிள்ளி விடுவது நாட்டிற்கும் நல்லது... நாளைய தலைமுறைக்கும் நல்லது என்று நண்பர்களிடையே தனது மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் கூறினான்.

🌟 சீவகன் வெளிப்படுத்திய எண்ணங்களுக்கு பின்புதான் நகைச்சுவையாக இருந்த களமானது போர்க்களமாக மாறத் துவங்கியது. சீவகன் கூறுவது உண்மை தானே என்று புத்திசேனனும் எண்ணினான். சீவகனோடு இணைந்து அவனுடைய நண்பர்கள் அனைவரும் வேடுவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக படைகளைத் திரட்ட தொடங்கினார்கள்.

🌟 இராசமாபுரத்திலிருந்து இளைஞர்களை நோக்கி அன்னியர்கள் வந்து சூழ்ந்து சூறையாட நம் நாடு அவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டதா? இது நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்கல்ல. நம்முடைய ஆண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று கூறி, இளைஞர்களிடமிருந்து வேடுவர்களை பற்றிய அச்சத்தால் மறைந்திருந்த வீரத்தினை வெளிக்கொணர்ந்து அவர்களை வீரமிக்க ஒரு படைவீரனாக மாற்றி தன்னுடைய படையில் இணைத்துக் கொண்டான்.


Share this valuable content with your friends