No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் பள்ளிப்பருவம்...!!

Feb 02, 2023   Rathika   167    சீவக சிந்தாமணி 


சீவகனின் பெயர் சூட்டு விழா...

🌟 தன்னுடைய குழந்தையை காணவந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களையும், ஆபரணங்களையும் கொடுத்து தன்னுடைய மனதில் இருந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கந்துக்கடன்.

🌟 தன்னுடைய குழந்தை சிறந்ததொரு முறையில் வளர்ந்து பெரியவனாக வேண்டும் என்ற முறையில் அவனுக்குத் தகுந்த ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டும் என்று தம்பதியர்கள் விரும்பினார்கள்.

🌟 குழந்தைக்கான பெயர் தேடல்களும் துவங்கின. பல பெயர் தேடலின் முடிவில் இறுதியான பெயராக இடுகாட்டில் அவனுடைய அன்னை வாழ்த்திய சீவ என்ற சொற்கள் நிறைந்த சீவகன் என்ற பெயரை கந்துக்கடன் சூட்ட, சுநந்தையும் எவ்விதமான தடைகளையும் கூறாமல் அதையே விரும்பி அப்பெயரையே குழந்தைக்கு சூட்டினாள்.


🌟 தன்னுடைய கணவன் குழந்தைக்கு இந்த பெயரை சூட்டுகின்றார் என்றால் அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று அவளுடைய மனைவி, கணவனின் எண்ணங்களை புரிந்து செயல்பட்டு மனமொத்து அப்பெயரை ஏற்றுக் கொண்டாள். இல்வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்பது புரிதல் என்பதை நன்கு உணர்ந்தவள்.

🌟 பிறப்பில் எந்தவிதமான உயர்வும், தாழ்வும் இல்லை அனைவரும் சமமே. ஆனால் அந்தக் குழந்தை வளருகின்ற சூழ்நிலையே உயர்வையும், தாழ்வையும் நிர்ணயம் செய்கின்றன. நல்ல எண்ணங்களும், கருத்துக்களும் கேட்கும் பொழுது உயர்வான சூழ்நிலைகளும், பயனற்ற எண்ணங்களும், விதண்டாவாதமும் வளர்கின்ற பொழுது தாழ்வான சூழ்நிலைகளையும் அடைகின்றன.

🌟 கந்துக்கடன் செல்வக்குடியைச் சேர்ந்தவன் ஆவான். அதனால் அவன் எடுத்துச் சென்ற சீவகனும் செல்வக்குடி சூழ்நிலையிலேயே வளர்கின்றான். அவனைப் பாராட்டி வளர்க்க செவிலித் தாயார்களும் இருந்தனர்.

🌟 குழந்தைகள் வளர்கின்ற பொழுது எந்த கதைகளை கேட்டு வளர்கிறார்களோ.. அதைப் போலவே அவர்களின் வாழ்க்கையின் எதிர்காலமும் அமையும் என்பதை உணர்ந்திருந்த மக்கள் தன்னுடைய குழந்தைகளுக்கு இறை நம்பிக்கை சார்ந்து தர்மம் எதுவென்றும், அதர்மம் எதுவென்றும் பகுத்தறிந்த உணர்வும், தன்மையையும், வீரமிக்க நாயக்கர்கள் நிறைந்த கதைகளைச் சொல்லி இந்த பூமிக்கு நன்மைகளை செய்யக்கூடிய நாயகனாக வளர்க்க வழி செய்தார்கள்.

🌟 தாலாட்டி வளர்த்தபோது அவனுக்கு இசைக் கலை அறிமுகம் ஆகியது. முக்கால் தேரைச் செலுத்த வைத்து அவனை நடைபயிலச் செய்தனர். யானை, தேர், குதிரை இவற்றின் பொய்ம்மை வடிப்புகளில் அவனை அடியெடுத்து வைக்கக் கற்றுத் தந்தனர். ஊர்திகளைத் தள்ளி உரம் கொண்ட நெஞ்சும், உடலும் பெற்றான். இந்த நிலையில் சீவகன் வளர்ந்து வரும் வேளையில் சுநந்தை நந்தட்டன் என்னும் ஒரு மகவினை ஈன்றாள்.

🌟 கந்துக்கடன் சீவகன், நந்தட்டன் முதலியோரை கல்வியிலும், நல்ல பழக்கவழக்கத்துடன் வளரவும் விரும்பினான். ஆகவே ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாமல் நடைமுறை கல்வியையும், அரசியல் முதலியவற்றையும் சிறந்த முறையில் சொல்லிக் கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரிய பெருமக்களை தேடினார்.

🌟 அவருடைய தேடலுக்கு உகந்த வகையில் நல்ல ஆசிரியரும் கிடைத்தார். அவர் தான் அச்சணந்தி என்னும் பேராசிரியர் ஆவார். அவரிடத்தில் இருவரும் மாணவராக சேர்ந்து பல்கலைகளை கற்க துவங்கினார்கள். அவர்கள் இருவரில் சீவகன் சிறந்து விளங்கினான். அப்பேராசிரியர் சீவகனுடைய நுண்மாணுழைபுலனை உணர்ந்து மகிழ்ந்தனர்.

🌟 பூக்களில் தாமரை போன்றும், விண்மீன்களிடையே ஒளிவீசும் திங்களைப் போன்றும், அடர்ந்து எதிர்ப்பதில் சிங்கம் போன்றும் ஆற்றலோடும், வீரத்தோடும் தனித்து செயல்பட்டான்.

🌟 மழலை மொழி பேசி மகிழ்வித்த அவனுக்கு எழுத படிக்க கற்றுத்தர விரும்பினார். அவனை மையாடுக என்று சொல்லி ஓலை தந்து எழுத வைத்தார். ஆரம்பக்கல்வி ஆறாம் வயது வருவதற்குள் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் நாமகள் இலம்பகம் ஆகியது.

🌟 சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வியும் மனப்பழக்கம் என்பதற்கு ஏற்பத் தொடர்ந்து கல்வி கற்றான்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக


🌟 என்னும் குறட்பாவின் கருத்துப்படி அவன் கற்கவேண்டிய நூல்களைக் குற்றமறக் கற்றான். சான்றோர்கள் நூல் வழியாகத் தெரிவித்த அறக் கருத்துக்களை அவன் ஆழ்ந்து கற்று ஒழுக்கத்தால் சிறந்த நன்மகனாக வளர்ந்தான். கல்வி கேள்விகளில் சிறந்ததோடு ஆன்ற ஒழுக்கம் மிக்கவனாக வளர்ந்தான்.


🌟 காலம் செல்ல செல்ல வயதுக்கேற்ப படிப்பும், பல கலைகளையும் கற்றான். வீரனாவதற்கு வேண்டிய அனைத்து வித்தைகளையும் அறிந்து கொண்டான். யானை ஏற்றம், குதிரை ஏற்றம், மற்போர், விற்போர் முதலிய படைக்கலப் பயிற்சிகளை கற்று இராசமாபுரத்தில் நிகரற்ற வீரம் உடையவனாக திகழ்ந்தான். யாழ், குழல் முதலிய இசைக் கலைகளிலும் தேர்ந்தவனாக விளங்கினான்.

🌟 மற்ற மாணவர்களை காட்டிலும் ஒரே காலத்தில் பலதுறைகளில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தினான் சீவகன். கல்வியிலும் உடல் திறனை வெளிப்படுத்தக்கூடிய பயிற்சிகளிலும், அரசியல் சார்ந்த துறைகளிலும் படைப்பயிற்சியிலும் சிறந்து விளங்கினான் சீவகன்.

சீவகனைப் பார்த்ததால் ஆசிரியருக்கு நடந்த இரகசியம்...

🌟 ஒருநாள் யாரும் எதிர்பாராதவிதமாக அனைத்திலும் சிறந்து விளங்கிய இக்காளையை அவனுடைய ஆசிரியராக விளங்கிய அச்சணந்தி என்பவர் அருகில் அழைத்து அன்புடன் பேசிக்கொண்டிருந்தார்.

🌟 அவர்களுடைய பேச்சுக்கள் எதிர்காலத்தை நோக்கியதாக அமைந்தது. பின்பு தன்னுடைய மாணவனான சீவகனுடைய எதிர்காலத்தினை அவர் வரைபடமாக காட்டி அறிவுரை கூறினார். அப்பொழுது தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் அவனிடம் கூறினார்.

🌟 நான் இராசமாபுரத்தில் நீண்ட நெடுங்காலமாக தங்கிக் கொண்டு இருக்கின்றேன். நான் இங்கு வந்து தங்கி கொண்டிருந்த நாட்களில் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு அறிந்து கொண்டேன்.

🌟 நீ பச்சிளம் குழந்தையாக இருக்கின்ற பொழுது உன்னுடைய இல்லத்திற்கு நான் வந்திருந்த பொழுது உன்னுடைய தாய் இன்முகம் காட்டி நல்வரவு செய்து என்னிடத்தில் இருந்த பசி என்ற உணர்வை போக்கிக் களைப்புகளை நீக்கினாள்.

🌟 பச்சிளம் குழந்தையாக இருக்கக்கூடிய பவித்திரமான உன்னைக் கண்டதும் அந்நாள் வரை எனது உடலில் நீங்காமல் பல துன்பங்களை அளித்துவந்த யானைத்தீ என்னும் நோயானது முழுவதுமாக நீங்கப் பெற்றேன். அது எனக்கு மிகுந்த வியப்பையும், மகிழ்ச்சியையும் அளித்தது என்றார்.

🌟 அதைக்கேட்டு சீவகனும் சில வினாடிகள் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தான்.

🌟 அதிலிருந்து உன்னை பற்றிய விவரங்களை நான் அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். அதில் சில ரகசியங்களையும் புரிந்துகொண்டேன் என்று கூறினார் ஆசிரியர்.

🌟 சீவகனோ மிகுந்த ஆச்சரியத்தோடு யான் அறியாத எனது ரகசியம் இருப்பதென்றால் அது அதிசயம் தானே! என்னைப் பற்றிய ரகசியம் என்னவென்று தாங்கள் கூறலாமா என்று ஆசிரியரிடம் வினவினார்.

🌟 ஆசிரியரோ! அதை அறிந்து கொள்வதற்கான காலம் வரும்பொழுது அந்த ரகசியத்தை பற்றி உன்னிடத்தில் நான் கண்டிப்பாக கூறுவேன் என்று விடுகதையும் விடுத்தார்.

🌟 விடுகதை விடுத்த நாள்முதல் சீவகனுக்கு மற்ற மாணவர்களைவிட படைக்கலப் பயிற்சியை கற்றுத் தருவதில் அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார் அச்சணந்தி.

🌟 நாட்கள் செல்லச் செல்ல அவன் திறமையும், அறிவும், அழகும் கொண்டவனாக பலராலும் விரும்பப்பட கூடியவனாகவும், இவ்விதம் செயல்பட முடியுமா? என்று ஆச்சரியம் கொள்ளும் விதத்திலும் செயல்பட்டான்.

🌟 இவ்விதமாக சென்று கொண்டிருந்த சீவகனின் வாழ்க்கையில் காலம் தன்னுடைய வேலையை செய்யத் தொடங்கியது. அதாவது சீவகனுக்கு தெரியாமல் இருந்துவந்த சில ரகசியங்களும் அவனுக்குத் தெரிந்து கொள்வதற்கான காலங்களும், வாய்ப்புகளும் அமையத் தொடங்கின.

🌟 பயிற்சிகள் அனைத்திலும் சிறந்து விளங்கிய சீவகனை ஆசிரியர் வாழ்த்தி, ஒரு கதையையும் சொல்ல துவங்கினார். நான் சொல்லும் இந்த கதையை கவனமாக கேட்க வேண்டும் அதில் சில ரகசியங்களும், சூட்சுமங்களும் மறைந்திருக்கின்றன.


Share this valuable content with your friends