No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: அனுசுயா தேவி தனது பலன்களில் ஒரு வருட பலனை கங்கை தேவிக்கு அளித்தல் !! பாகம் - 85

Sep 01, 2018   Ananthi   551    சிவபுராணம் 

அத்திரி முனிவருக்கு தன் மனைவியான அனுசுயா தேவி கூறியவற்றையாவும் ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் பெரிய ஞானிகளுக்கும், முனிவர்களுக்கும் எட்டாத கனியாக இருக்கும் இந்த பாக்கியம் உனக்கு எப்படி கிடைத்திருக்கும்? என்னால், உன்னை முழுமையாக நம்ப முடியவில்லையே?

கங்கை இங்கு இருப்பதாக கூறினாய் அல்லவா? கங்கை இருக்கும் இடத்தை பார்த்தால் மட்டுமே என்னால் உன்னை நம்ப இயலும் என்று கூறினார். பின்பு அனுசுயா தன் பதியானவரை வணங்கி கங்கா தேவி உதயமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அனுசுயா தேவி தோண்டிய குழியில் இருந்து நீர் வெளிப்பட்டு வருவதைக் கண்ட அத்திரி முனிவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அத்திரி முனிவர் தன் துணைவியை நோக்கி நீ பெரும் பாக்கியம் நிறைந்தவள். எம்பெருமான் திருமுடியில் வீற்றிருக்கும் கங்கா தேவியே உனக்காக இங்கே தோன்றி அருள் செய்தார் என்றால் உன்னுடைய தவம் இனிதே பூர்த்தியாகிவிட்டது என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார்.

கங்கா தேவி இங்கே தோன்றியிருக்கின்றாள் என்றால் என் தவமும் பூர்த்தியாகிவிட்டது. யாருக்கும் கிடைக்காத பாக்கியமான கங்கை நீரில் ஸ்நானம் செய்யும் அருள் பெற்றேன் என்று கூறி கங்கை நீரில் நீராடி ஆசமனம் செய்து கங்கா தேவியை மனதார வேண்டினார்.

அப்போது கங்கா தேவி அவர்களுக்கு சர்வ அலங்காரத்தோடு காட்சியளித்தார். ஞானிகளுக்கும், ரிஷிகளுக்கும் காண கிடைக்காத காட்சியை கண்ட அத்திரி முனிவரும், அவரது துணைவியாரும் கங்கா தேவியின் தோத்திரம் பலவற்றை பாடி அவர்களை வலம் வந்து வணங்கினார்கள்.

அனுசுயா நான் உனக்கு வாக்களித்தப்படி உன்னுடைய கணவரின் தவம் நிறைவடையும் வரை இருந்துவிட்டேன். சிறிது நேரத்திற்கு முன்பு உன்னுடைய கணவர் தன்னுடைய தவம் நிறைவு பெற்றதாக கூறினார் அல்லவா? இனி நான் விடைபெறுகிறேன் என்று கூறினார்.

அவ்வேளையில் அனுசுயா தேவி மீண்டும் கங்கா தேவியை வணங்கி, உலகில் உள்ள உயிர்கள் யாவும் பருவ மழைகள் பெய்யாததால் எண்ணற்ற இன்னல்களை அடைந்துள்ளன. பயிர்கள் அனைத்தும் நீரின்றி கருகிவிட்டன. அதைச் சார்ந்த உயிர்களும், மக்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர். ஆதலால் தாங்கள் இங்குள்ள ஊர்களின் வாழ்வாதாரமாக விளங்கி அவர்களை செம்மைப்படுத்த இங்கேயே நிலைத்து இருக்க வேண்டும் என வேண்டினார். அத்திரி முனிவரும் கங்கா தேவியை இங்கேயே இருக்கும் படி வேண்டி துதித்தார். அனுசுயா முன்பு நான் தோன்றிய போது இங்கேயே உன் கணவரின் தவம் முடியும் வரை இருக்க உன் பதிவிரதத்தின் ஒரு மாத பலனை அளித்தாய் அல்லவா? அதைப் போலவே நான் இங்கு நிரந்தரமாக நிலைப்பெற்று இருக்க வேண்டுமாயின் உன்னுடைய பதிவிரத்தினால் உண்டான பலனில் ஒரு வருட பலனை எனக்கு அளிப்பாய் எனில் நான் இங்கேயே இருக்கிறேன்.

பிறருக்கு தானம் செய்வதால் உண்டாகும் பலன்கள், பல புண்ணிய நதிகளில் நீராடுதல் மற்றும் யாகம் செய்தல் ஆகியவற்றால் கிடைக்கும் பலன்களைக் காட்டிலும், பதிவிரதத்தின் மூலம் கிடைக்கும் பலனானது இவைகள் அனைத்திலும் உயர்ந்தது என்றால் நான் அனுதினமும் உன்னைக் கண்டு இங்கேயே இருக்கின்றேன் என்று கூறினார்.

கங்கா தேவி கூறியதைக் கேட்ட அனுசுயா சற்றும் சிந்திக்காமல் உலக மக்களின் நன்மைக்காக தனக்கு கிடைத்த பதிவிரதத்தால் உண்டான பலன்களில் ஒரு வருட பலனை கங்கை தேவிக்கு அளிப்பதாக கூறி உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் வேண்டிய பலனை அளித்தார்.

பின்பு கங்கா தேவி அதை ஏற்றுக்கொண்டு அங்கே மிகுந்த ஆனந்தத்தோடு நிலைப்பெற்று அங்குள்ள வறண்ட சூழலை மாற்ற தொடங்கினார். இவை யாவற்றையும் கண்ட எம்பெருமான் அனுசுயா தேவி அனுதினமும் பூஜித்து வணங்கி வந்த சிவலிங்கத்தில் இருந்து எழுந்தருளி அவர்களுக்கு காட்சி அளித்தார்.

அனுசுயா தேவி, எம்பெருமானை கண்டதும் அவரை வணங்கி பலவாறு துதித்துப் போற்றினார். எம்பெருமானோ அனுசுயா தேவியை கண்டு தேவி உன் பக்தியாலும், நீ செய்து வந்த பூஜையாலும் யாம் மனம் மகிழ்ந்தோம். உனக்கு வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார்.

அனுசுயா தேவி எம்பெருமானிடம் கருணைக் கடலான கருணாமூர்த்தியே உலக மக்களை துன்பத்தில் இருந்து காக்கும் பொருட்டு தாங்கள் இங்கேயே எழுந்தருளி அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என வேண்டினார்.


Share this valuable content with your friends