No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் பகுதி - 2 : திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்...!! பகுதி 2

May 23, 2020   Ananthi   395    சிவபுராணம் 

திருஞானசம்பந்தர் கூறியதை கேட்டதும் மனம் மகிழ்ந்த தந்தையார் உம்மை விட்டு எள்ளளவும் எம்மால் பிரிந்திருக்க முடியாது. ஆகவே யாமும் உன்னுடன் வருகின்றோம் என்றார். பிள்ளையார் அதற்கு இசைந்த வண்ணமாக தோணியப்பரை வணங்கி விடைபெற்று கொண்டு, தந்தையார் பின்வர, முத்து சிவிகை மேற்கொண்டு, முத்துக்குடை நிழலில், திருநீலகண்டப் பெரும்பாணரோடும், மற்ற அடியார்களுடனும் சென்றார்.

பின்பு திருக்கண்ணார் கோவிலை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானை வணங்கிக் கொண்டு, காவேரிக்கு வடக்கே மேற்கு திசை நோக்கிப் பயணம் மேற்கொண்டு திருப்புள்ளிருக்குவேள10ர், திருநன்றியூர், திருநீடூர், திருப்புன்கூர், திருமண்ணிப்படிக்கரை, திருக்குறுக்கை, திருவன்னியூர், திருப்பந்தணைநல்லூர், திருமணஞ்சேரி, திருவெதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, திருக்கோடிக்கா, கஞ்சனூர், திருமங்கலக்குடி சென்றார்.

பின்பு திருவியலூர், திருந்துதேவன்குடி, திருவின்னம்பர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருப்பெரும்புலியூர், திருநெய்த்தானம், திருமலபாடி, திருக்கானூர், திருவன்பிலாலந்துறை, திருமாந்துறை என்னும் தலங்கள் தோறும் சென்று எம்பெருமானை தரிசனம் செய்த வண்ணமாக திருப்பதிகம் பாடினார். சோழ நாட்டிலுள்ள சிவபெருமான் எழுந்தருளியுள்ள பல்வேறு தலங்களை தரிசித்த வண்ணமாக திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்தனர்.

அந்நகரத்திலே கொல்லி மழவன், தன்னுடைய புத்திரி முயலகனென்னும் நோயினால் வருந்துதலைக் கண்டு, கவலையுற்று, வேறொரு மருந்துகளாலும் நீங்காமை கண்டு, தான் சைவ பரம்பரை ஆனதால் அவளை எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோவிலினுள்ளே கொண்டு போய் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் சன்னிதானத்திலேயே வைத்தான்.

திருஞானசம்பந்தர் வந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவலை கேட்டதும் திருஞானசம்பந்தரால் எப்படியும் தன் மகளுக்கு உடல் பூரண குணமடையும் என்று மனம் குளிர்ந்த மழ நாட்டு தலைவன் திருஞானசம்பந்தரைக் காண கொல்லி மழவன், புத்திரியைவிட்டு விரைந்து சென்று திருப்பாச்சிலாச்சிராமத்தை மிகவும் எழில்மிகு மலர்கள் மற்றும் வாசனை நிரம்பிய மலர்களால் அலங்கரித்து திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு மலர்கள் தூவி, முத்து சிவிகைக்கு முன்னே அடியற்ற மரம்போல விழுந்தான்.

அதைக் கண்டதும் திருஞானசம்பந்தர் 'எழுக' என்று உரைத்த வண்ணமாக கொல்லி மழவன் எழுந்து மனம் மகிழ்ந்து சிரசின்மேல் கரங்கள் வைத்த வண்ணமாக சென்றான். திருஞானசம்பந்தருடன் வேந்தனும் திருக்கோவில் கோபுரத்திற்கு வந்த உடனே, முத்து சிவிகையினின்றும் இறங்கி, உள்ளே பிரவேசித்து கோபுரத்தை வலம் வந்து சன்னிதானத்திற்கு சென்றார்.

இவர்கள் உள்ளே சென்ற பொழுது மதியற்ற நிலையில் நிலத்தில் கிடக்கின்ற கன்னியை கண்டதும் இந்த பெண்மணி யார்? என்றும், ஏன் இவ்விதம் இவ்விடத்தில் இருக்கின்றார்? என்று வினவினார். அவருடன் நின்று கொண்டிருந்த மழவன் திருஞானசம்பந்தரை வணங்கி நின்று இக்கன்னியார் அடியேனுடைய புதல்வி என்றும், இவள் முயலகனென்னும் நோயினால் மிக வருந்துவதால் இவளை சுவாமி சன்னிதானத்தில் கொணர்வித்தேன் என்று விண்ணப்பம் செய்தான்.

திருஞானசம்பந்தப்பிள்ளையார் மன்னன் கூறியதைக் கேட்டு அவர் அடைந்து உள்ள இன்னலை போக்கும் வண்ணமாக அவ்விடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வணங்கினார்.

பின் அவளிடம் குடி கொண்டு இருக்கும் நோயை நீக்கும் வண்ணமாக பொருள் கொண்ட 'துணிவளர் திங்கள்' என்றெடுத்து, 'மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோவிவர் மாண்பே' என்னும் திருப்பதிகத்தை பாடியருளினார்.

எம்பெருமானின் திருவருளால் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி முடித்ததும் தலைவன் மகளின் உடலில் இருந்துவந்த நோயானது முழுவதுமாக நீங்கி சுய உணர்வு பெற்று எழுந்தாள். அவ்விடத்தில் இருந்த அனைவரும் இக்காட்சியைக் கண்டதும் வியந்து நின்று கொண்டிருந்தனர். திருஞானசம்பந்தரின் வியக்கத்தக்க இவ்வருட்செயலை எண்ணி உள்ளமும், உடலும் பொங்கி பூரித்துப்போன தலைவனும், தலைவனின் மகளும் எம்பெருமானின் அருள் முழுவதும் நிறைந்து இருக்கக்கூடிய உமையவளின் ஞானப்பாலை பருகிய தெய்வத் திருமகனின் காலில் வீழ்ந்து வணங்கினர்.

பின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். பின்னர் பிள்ளையார் தலைவன் மற்றும் அவருடைய புதல்வி ஆகியோர் அங்கே எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை தரிசனம் செய்து அங்கு இருந்து விடைப்பெற முற்பட்டார் திருஞானசம்பந்தர். பின்னர் மன்னர் அவர்களுடன் இருந்த பல அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சில நாள் அங்கேயே தங்கியிருந்தார். அதன்பின் பிள்ளையார் திருப்பைஞ்ஞீலியையும், திருவீங்கோய் மலையையும் வணங்கி கொண்டு பின் கொங்கு தேசத்தில் காவேரி தென்கரைக்கு சென்றார்.

பின்பு திருக்கொடி மாடச் செங்குன்றூரை அடைந்து எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவ்விதம் எம்பெருமானை வழிபட்டு கொண்டு இருக்கும் நாளில் திருநணாவிற்கும் சென்று திருப்பதிகம் பாடினார். பின்னர் திருக்கொடிமாடச்செங்குன்றூருக்கு திரும்பிவிட்டார். அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பொழுது மழைக்காலம் நீங்கி பனிக்காலம் பிறந்தது. எந்த வருடமும் இல்லாத அளவில் குளிர் மிகுந்து காணப்பட்டது.

அப்பொழுது பிள்ளையாருடைய பரிசனங்கள் நளிர்சுரத்தினால் வருத்தமுற்று பிள்ளையாரை வணங்கி அவருக்கு விண்ணப்பம் செய்தார்கள். பிள்ளையார் 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் திருநீலகண்ட பதிகத்தை பாடியருளினார். உடனே அந்நகரவாசிகளை துன்புறுத்தி வந்து கொண்டு இருந்த பனிப்பிணியானது அந்நகரம் முழுவதும் தீர்ந்தது. பிள்ளையார் சிலநாள் அங்கு தங்கியிருந்து பின் அவ்விடத்தை நீங்கி, திருப்பாண்டிக்கொடுமுடி, திருவெஞ்சமாக் கூடல், திருக்கருவூர் என்னும் தலங்களை வணங்கி கொண்டு கொங்குநாட்டைக் கடந்து சோழநாட்டை அடைந்தருளினார்.

சோழமண்டலத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் தலங்களான திருப்பராய்த்துறை, திருக்கற்குடி மலை, திருமூக்கீச்சரம், திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருப்பாற்றுறை, திருவெறும்பியூர், திருநெடுங்களம், மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருவெண்ணி, திருச்சக்கரப்பள்ளி, திருப்புள்ளமங்கை, திருநல்லூர், திருக்கருகாவூர், திருவவளிவணனல்லூர், திருப்பரிதிநியமம், திருப்பூவனூர், திருவாரூர் ஆகிய இடங்களுக்கு சென்று எம்பெருமானை வணங்கி கொண்டு பின்பு திருவலஞ்சுழியை நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தார் திருஞானசம்பந்தர்.

திருவலஞ்சுழியில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டு இருக்கும் சுவாமியை தரிசனம் செய்து கொண்டிருந்தார். இவ்விதமாக இவர் வழிபட்டு கொண்டு இருக்கும் நாட்களில் முதிர்வேனிற்காலம் தொடங்கியது. அம்முதிர்வேனிற்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் எம்பெருமானை கண்டு அவரை வழிபட வேண்டும் என்ற எண்ணமானது பிள்ளையாரை திருவலஞ்சுழியில் இருந்து புறப்பட்டு திருப்பழையாறை போவதற்கு அடியார்களுடன் செல்ல துவங்கினார்.

அவ்விதமாக செல்லும் வழியில் உள்ள திருவாறை மேற்றளியை அடைந்து வணங்கி, திருச்சத்தி முற்றத்திற்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து கொண்டு திருப்பட்டீச்சரத்திற்கு போக புறப்பட்டார். திருஞானசம்பந்தர் தம்மை காண வெயில் என்றும் பாராமல் நடந்து வருவதை கவனித்த எம்பெருமான் திருஞானசம்பந்தருக்கு உதவும் பொருட்டு அவருக்கு பூதகணங்களின் மூலம் முத்துப்பந்தல் அமைத்து நிழல் கொடுக்க செய்தார். முத்துப்பந்தலின் நிழலிலே திருப்பட்டீச்சரத்தை அடைந்த திருஞானசம்பந்தர் எம்பெருமானை வழிபட்டு பதிகம் ஒன்றை பாடினார்.

பின்பு அவ்விடத்திலிருந்து விடைப்பெற்று கொண்டு திருவாறை வடதளி, திருவிரும்பூளை, திருஅரதைப்பெரும்பாழி, திருச்சேறை, திருநாலூர்மயானம், திருக்குடவாயில், திருநாரையூர், அரிசிற்கரைப்புத்தூர், திருச்சிவபுரம், திருக்குடமூக்கு, திருக்குடந்தைக்காரோணம், திருநாகேச்சரம், திருவிடைமருதூர், திருக்குரங்காடுதுறை என்னும் தலங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வணங்கி கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தர் திருவாவடுதுறையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் திருவாவடுதுறையில் இருந்த தொண்டர்களும், அடியார்களும், அந்தணர்களும், திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்று வணங்கினர். திருஞானசம்பந்தர் அத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தார். எம்பெருமான் எழுந்தருளியுள்ள பல தலங்களை தரிசித்த வண்ணமாக செங்காட்டங்குடி வழியாக திருமருகல் என்னும் தலத்தை வந்தடைந்தார்.

திருமருகல் கோவில் மடத்தில் தங்கியிருந்து எப்போதும் இறைவனை வழிபட்டு வந்தார் திருஞானசம்பந்தர். அப்போது யாரும் எதிர்பார்க்காத அரிய நிகழ்வானது நடைபெறுவதற்கான சூழல்கள் தோன்ற துவங்கின. செல்வந்தரான ஒரு வணிகரின் மகனும், அவருடைய உறவினர்களில் அவரை மணம் புரிந்து கொள்ளும் உறவு முறையும் கொண்ட ஒரு கன்னியும் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு கோவிலுக்கு புறத்திலே ஒரு மடத்தில் தங்கியிருந்தனர்.

அவர்கள் வந்த பொழுதில் ஆதவன் மறையவே... மதியானவன் தோன்ற நாளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி இரவில் மடத்தின் ஒரு பகுதியில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். நித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது பாம்பானது அவ்விடத்தில் எதிர்பாராதவிதமாக வந்தது. பின் அவ்விடத்தில் மணமகன் உறங்கி கொண்டிருக்க பாம்பு மணமகனை தீண்டிவிட்டது.

பொழுதும் விடிய தன் மணாளனிடம் எந்தவிதமான செய்கையும் இல்லாததை எண்ணிய மணமகள் அவன் அருகில் வரவே... அவன் செயலற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். பின்பு அருகில் இருந்த வைத்தியரை அழைத்து வரவே மணமகனை பரிசோதித்த பின் இவர் பாம்பு தீண்டி இறந்து விட்டார் என்று கூறினார். அதைக் கேட்டதும் இவ்வுலகில் யாவரும் அடையாத பெரும் துன்பத்தை அடைந்ததாக மனதில் எண்ணி தான் விரும்பியவரை தீண்டிய பாம்பானது தன்னை தீண்டாமல் போனதே என்று தரையில் விழுந்து புரண்டு அழுதாள்.

இவ்வுலகில் யாவரும் அடையாத பெரும் துன்பத்தை அடைந்ததாக மனதில் எண்ணி தான் விரும்பியவரை தீண்டிய பாம்பானது தன்னை தீண்டாமல் போனதே என்று தரையில் விழுந்து புரண்டு அழுதாள். பெற்றோருக்கு தெரியாமல் தன்னுடைய அத்தை மகனை மணக்க வேண்டும் என்று ஓடிவந்த தனது ஆசையில் இப்படியொரு பேரிடி வீழ்ந்ததே... என்று எண்ணி தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தாள். அப்பெண்மணி வணிக மகனை தீண்ட முடியாத நிலையில் தாங்கொணாத் துயரால் என்று பலவாறு சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தாள்.

அக்கன்னிகை மிக அயர்ந்து புலம்பி எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கோவிலின் வாயிற்புறத்தை நோக்கிய வண்ணமாக கைதொழுது

'அமுதம் கடைந்தபோது தேவர்களை காக்கும் பொருட்டு வெளிப்பட்ட நஞ்சை அமுதாக எண்ணி பருகிய பரம்பொருளே...

எமனின் பாச பிடியிலிருந்து மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்றிய இமயவனே...

தேவரீர் இந்தக்கொடிய விஷம் நீங்கும் பொருட்டும், அடியேன் துக்க சாகரத்தினின்று கரையேறும் பொருட்டும், அருள்செய்யும்' என்று பிரார்த்தித்தாள்.


அவளது புலம்பலானது கோவிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபாடு செய்ய வந்து கொண்டு இருந்த திருஞானசம்பந்தரின் செவிகளில் விழுந்தது. கன்னியரின் அழுகையையும், துன்பத்தையும் புரிந்து கொண்ட திருஞானசம்பந்தர் கன்னிகையின் அருகில் சென்று பயம் கொள்ளாதே... நிகழ்ந்த நிகழ்வுகளை கூறுவாயாக...!! என்று அப்பெண்மணியிடம் கேட்டார்.

அந்த நொடியில் துன்பத்தில் உழன்று கொண்டு யாது செய்வது? என்று அறியாமல் இருந்த கன்னியருக்கு திருஞானசம்பந்தரைக் கண்டதும் திருமருகல் தெய்வமே எழுந்தருளினாற்போல் எண்ணம் கொண்டாள். உடனே கன்னிகை விழிகளில் நீர் வழிய பிள்ளையாருடைய திருவடியில் விழுந்து வணங்கினாள். திருஞானசம்பந்தர் அப்பெண்மணிக்கு ஆறுதல் மொழியை கூறினார்.

பெண்மணி தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை எடுத்து உரைக்க துவங்கினாள். அதாவது, நான் பிறந்த ஊர் வைப்பூர். தாமன் என்பவர் என் தந்தை. என் தந்தைக்கு என்னுடன் ஏழு பெண்கள் உண்டு. என் தந்தை இங்கு இறந்து கிடக்கும் என் அத்தை மகனுக்கு தன் பெண்களில் ஒருவரை கொடுப்பதாக கூறினார். ஆனால் அவரோ மற்ற ஆறு பெண்களில் ஒருத்தியைக் கூட இவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்.

என் தந்தை செய்த செயலால் மனம் வருந்தி பின்பு நானே இவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி இவரை அழைத்து கொண்டு இரவென்றும் பாராமல் இரவோடு இரவாக இங்கு ஓடிவந்தேன். வந்த இடத்தில் விதியானது எனது வாழ்க்கையில் சதி செய்துவிட்டது. என்னுடன் இல்லறத்தில் வாழ வேண்டிய என் அத்தை மகன், பாம்பு தீண்டியதால் எனக்குமில்லாமல், இந்த உலகத்திலும் நில்லாமல் போய்விட்டார் என்று கூறி மேலும் புலம்பி கண்ணீர் வடித்தாள்.

திருஞானசம்பந்தர் பாதங்களில் விழுந்து அழுதாள் அந்த வணிக குலப்பெண்மணி. அந்த வணிக குல கன்னியருக்கு ஏற்பட்ட துன்பத்தினை நீக்கும் பொருட்டு திருஞானசம்பந்தர் திருமருகல் தெய்வத்தை பணிந்து எழுந்து விஷம் நீங்கும் பொருட்டு திருமருகல் கடவுள் மேல் 'சடையாய் எனுமால்' எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடியருளினார்.

ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டப் பெருமான், திருஞானசம்பந்தரின் செந்தமிழ் பாக்களால் இயற்றப்பட்ட பாடல்களை கேட்டதும் மனம் மகிழ்ந்தார். திருமருகலில் எழுந்தருளியுள்ள உமையொருபாகன், அரவத்தால் தீண்டப்பட்ட வணிக மகனைக் காத்தார். இறைவனின் கருணையால் வணிக மகன் உயிர் பெற்று எழுந்தான். அவ்விடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவற்றையும் கண்ட திருத்தொண்டர்கள் எல்லோரும் மகிழ்ந்தனர்.

வணிக மகனும், வணிக மகளும் திருஞானசம்பந்தரின் பாத கமலங்களில் வீழ்ந்து வணங்கினர். திருஞானசம்பந்தர் இருவரையும், திருமணம் செய்து கொண்டு என்றென்றும் நீடு புகழ் வாழ்வீராக...!! என்று ஆசி கூறி வழி அனுப்பினார். திருஞானசம்பந்தர் அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து எம்பெருமானை இடைவிடாது வழிபாடு செய்து வந்தார். அந்நாளில் திருஞானசம்பந்தர் இந்த தலங்களில் இருப்பதை அறிந்த சிறுத்தொண்ட நாயனார் திருமருகலிற்கு வந்தார்.

தன்னைக் காண வந்த சிறுத்தொண்ட நாயனாரை கண்டதும் ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்தனர். இருவரும் இணைந்து திருமருகலில் எழுந்தருளியுள்ள நீலகண்டப் பெருமானை வழிபட்டவாறு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருச்செங்காட்டாங்குடிக்கு எழுந்தருள விருப்பம் கொண்டனர். பின் தன்னுடன் வந்திருந்த அடியாரோடு அத்திருமருகல் கோவிலிற்கு சென்று வணங்க... பரமசிவன் தான் திருச்செங்காட்டாங்குடியில் இருக்கின்ற திருக்கோலத்தை அவருக்கு அங்கே காட்டியருளினார்.

பிள்ளையார் அதுகண்டு மனமகிழ்ந்து, 'அங்கமும் வேதமு மோதுநாவர்' என்னும் திருப்பதிகம்பாடி, அந்தத் திருப்பதியில் தானே எழுந்தருளியிருந்தார். அங்கு கோவில் கொண்டுள்ள கணபதீச்சுரரை வணங்கி வழிபட்டு வாழ்ந்து வரலாயினர். சில நாட்கள் சென்றபின் அத்திருப்பதியை விட்டு நீங்கி தம்முடன் தொடர்ந்து வந்திருந்த சிறுத்தொண்ட நாயனாரிடம் இருந்து விடைப்பெற்று கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் பல சிவத்தலங்களை வழிபட துவங்கினார்.

பல தலங்களை வழிபட்ட பின்பு திருப்புகலூரை அடைந்தார். திருஞானசம்பந்தர் வந்துக் கொண்டு இருக்கும் தகவலை அறிந்ததும் அவரை எதிர்கொண்டு வணங்கிய முருகநாயனார் முதலிய அடியார்களோடு சென்று, திருக்கோவிலை அடைந்து எம்பெருமானை தரிசனம் செய்து முருக நாயனாருடைய திருமடத்திற்கு சென்றார். அவர் உபசரிக்க அங்கேயே தங்கியிருந்தார். இவ்விதம் தங்கி இருக்கும் நாட்களில் வர்த்தமானீச்சரத்தை வணங்கி, முருக நாயனாருடைய திருத்தொண்டை சிறப்பித்து திருப்பதிகம் பாடினார்.

முருக நாயனாருடன் மடத்தில் தங்கியிருந்த அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் திருப்புகலூரில் இருப்பதாக கிடைத்த செய்தியை அறிந்த அப்பரடிகள் தம்முடன் இருந்த தொண்டர்கள் பலருடன் திருப்புகலூரை வந்தடைந்தார். அப்பரடிகள் திருவாரூர் சென்று எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோலத்தை பற்றியும், அவரை கண்ட தரிசனத்தை பற்றியும் மனமும், சிந்தையும் மகிழ்ந்த விதத்தை பதிகத்தால் சிறப்புற எடுத்துரைத்தார்.

அப்பர் இயற்றியதை கேட்டதும் திருஞானசம்பந்தருக்கு திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட எம்பெருமானை போற்றி பணிந்து பதிகம் பாடி வர வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் உண்டாயிற்று. திருஞானசம்பந்தர் அப்பரடிகளை திருப்புகலூரிலேயே சில காலம் தங்கி இருக்கும்படி கூறிவிட்டு திருவாரூருக்கு புறப்பட்டார். திருஞானசம்பந்தர் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள சிவத்தலங்கள் பலவற்றை தரிசித்து மகிழ்ந்தவாறே திருவாரூரை வந்தடைந்தார்.

திருவாரூரில் தியாகேசப் பெருமானை கண்குளிர கண்டு களித்தார். தமிழ் பாமாலை தொடுத்து இன்புற்றார். சில காலம் அங்கேயே தங்கியிருந்து பேரின்பம் கொண்டார். பின்பு திருவாரூரை விட்டு திருப்புகலூரை வந்தடைந்தார். அங்கு அப்பரடிகளோடு தங்கியிருந்து எம்பெருமானை வழிபட்டு வரலானார். இரு ஞான ஒளிகளும் திருப்புகலூர் பெருமானை வழிபட்டவாறு முருக நாயனார் மடத்தில் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருந்த நாட்களில் சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் அவர்களோடு இணைந்து முருக நாயனாரின் மடத்திற்கு எழுந்தருளினர்.

இரு திருஞான ஒளிகளையும் வணங்கி மகிழ்ந்தனர். சில நாட்களுக்கு பின் சிவனருள் பெற்ற அடியார்களோடு முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த திருஞானசம்பந்தருக்கும், அப்பரடிகளுக்கும் எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின் அவர்களிடம் விடைபெற்று கொண்டு தங்களுடைய சிவயாத்திரை பயணத்தை துவங்கினார்கள். இரு ஞானமூர்த்திகளும் கால்நடை பயணமாகவே சென்று கொண்டிருந்தனர்.

திருஞானசம்பந்தர் இறைவன் தமக்களித்த முத்துப்பல்லக்கில் அமர்ந்து வராமல் அப்பர் மூர்த்தியை விட்டு பிரியாமல் அவருடன் இணைந்து நடந்து வந்து கொண்டிருந்தார். திருஞானசம்பந்தர் தன்னுடன் முத்துப்பல்லக்கில் அமர்ந்து வராமல் நடந்து வந்து கொண்டிருப்பது அப்பருக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது. அப்பரடிகள் திருஞானசம்பந்தரை நோக்கி, முத்துச் சிவிகை தனித்து வரத் தாங்கள் கால் கடுக்க நடந்து வருதல் ஆகாது என்றும், தாங்கள் எம்பெருமான் அருளிய முத்துச் சிவிகையில் எழுந்தருள்க...! என்றும் அன்போடு வேண்டினார்.

அதை கேட்டு திருஞானசம்பந்தர் சிறிதும் மனம் ஒவ்வாத நிலையில் அப்பரிடம், தாங்கள் நடந்துவர நான் மட்டும் முத்துச் சிவிகையில் ஏறி வருவது முறையல்ல என்று கூறினார். எனினும் எம்பெருமானின் திருவருள் கருணையை எண்ணி பார்த்த திருஞானசம்பந்தர், தாங்கள் முன்னர் எழுந்தருளுங்கள், தங்கள் பின்னால் நான் மெதுவாக வந்து சேருகின்றேன் என்றார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்.

இவ்வாறாக அப்பரடிகள் முதலில் ஒரு திருத்தலத்தை சேர்வதும், பின்னர் திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் அத்தலத்தை அடைவதுமாக, இரு சிவநேச செல்வர்களும் தங்கள் சிவயாத்திரையை தொடர்ந்தனர். இப்படியாக இரு திருத்தொண்டர்களும் திருப்புகலூர் புண்ணியாரின் அருளோடு திருக்கடவூர் என்னும் திருத்தலத்திற்கு புறப்பட்டனர்.

எம்பெருமானின் திருவருள் பெற்றவர்களான திருஞானசம்பந்தரும், அப்பரடியாரும் திருக்கடவூரை அடைந்து, கூற்றுவனை உதைத்தருளிய விமலநாதரை அமுதத்தமிழால் பாடிப்பணிந்து குங்குலியக்கலய நாயனார் மடத்தில் எழுந்தருளினார்கள். இவ்விரு ஞானமூர்த்திகளின் வருகையால் குங்குலியக்கலய நாயனார் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இரு ஞான பேரொளிகளையும் இன்முகத்தோடு வரவேற்றார்.

குங்குலியக்கலய நாயனார் மடத்தில் திருஞானசம்பந்தரும், அப்பரடியாரும் தங்கியிருந்து, அமுதுண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். பின்பு குங்குலியக்கலய நாயனாரின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்திருநகரில் குங்குலியக்கலய நாயனாருடன் சில நாட்கள் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர். சிறிது நாட்களுக்கு பின்பு இரு ஞானமூர்த்திகளும் குங்குலியக்கலய நாயனாரிடம் விடைபெற்று கொண்டு திருஆக்கூர் வழியாக தங்கள் சிவயாத்திரையை தொடங்கினர்.

சிவயாத்திரை மேற்கொண்டு செல்லும் வழிகளில் இருந்த பல புண்ணிய சிவத்தலங்களை தரிசித்து கொண்டே தங்களது பயணத்தை மேற்கொண்டனர். அரவணிந்து காட்சி அளித்த எம்பெருமானை அழகு தமிழில் வழிபட்டனர். அதன்பின் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒரு சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான திருமால் எம்பெருமானிடமிருந்து சக்ராயுதம் பெறுவதற்காக 1008 கமல மலர்களை கொண்டு வழிபட துவங்கினார். சோதனை செய்வதில் வல்லவரான எம்பெருமான் அவர் வைத்திருந்த 1008 மலர்களில் ஒரு மலர் குறையுமாறு செய்தருளினார்.

இதை சற்றும் உணராத திருமால் ஒவ்வொரு ‌மலர்களாக எடுத்து அதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்து வந்தார். இறுதியில் ஒரு மலர் குறைகிறது என்பதை உணர்ந்து மனம் உருகினார். வேறு மலர்களை கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டு மனதில் நினைத்த வழிபாடு தடைபட்டுவிடும் என்பதை உணர்ந்தார். ஆயினும் தமது மனதில் எண்ணிய வழிபாட்டை நிறைவோடு முடிக்க எண்ணம் கொண்டு தமது மலர் விழிகளில் ஒன்றை எடுத்து அர்ச்சனை செய்யலாம் என்று முடிவெடுத்தார்.

திருமால் தமது விழிகளில் ஒரு விழியைத் தோண்டி எடுக்க துணிந்தபொழுது எம்பெருமான் அவ்விடத்தில் எழுந்தருளி அவ‌ரை தடுத்தார். திருமாலின் அன்பிற்கு கட்டுப்பட்ட திருசடைப்பிரான் சக்ராயுதத்தை கொடுத்தருளினார். திருமால் விழிகளில் ஒன்றை ‌எடுத்து இறைவனுக்கு அர்ச்சிக்க துணிந்ததால் இத்திருத்தலம் திருவீழிமிழலை என்ற திருநாமத்தை பெற்றது.

திருவீழிமிழலை நகரில் அடியார்களின் கூட்டம் கடல் வெள்ளம் போல் அதிகரித்த வண்ணமாக இருந்தது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் எம்பெருமானை தரிசிக்க திருவீழிமிழலை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றார்கள் என்னும் செய்தியை அறிந்த அடியார்கள் அவர்களை வரவேற்க நகர்புறத்தில் காத்துக் கொண்டிருந்தனர். நகர்புறத்தை அடைந்த இரு ஞானமூர்த்திகளையும் அடியார்கள் எதிர்கொண்டு வணங்கி மலர் தூவி அவர்களை வரவேற்றனர்.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க தொண்டர் கூட்டத்தோடு கலந்து கொண்டு மாடவீதி வழியாக கோவிலினுள் எழுந்தருளினார்கள். திருத்தலத்தை வலம் வந்து எம்பெருமானின் முன் பக்தி பழமாக நின்ற இரு ஞானமூர்த்திகளும் தமிழ் பதிகத்தால் வீழி அழகரை துதித்தனர்.

அப்பரடிகள், திருவீழிமிழலையானைச் சேராதார் தீயநெறிக்கே சேர்கின்றாரே என்ற ஈற்றடியினை கொண்‌ட திருத்தாண்டகப்பதிகம் பாடினார். திருவீழிமிழலை அன்பர்கள் இரு சிவனடியார்களும் தங்குவதற்கு தனித்தனி அழகிய திருமடங்களை ஏற்பாடு செய்தனர். இரண்டு மடங்களிலும் ஆண்டவன் ஆராதனையும், அடியார் துதி ஆராதனையும் சிறப்பாக நடந்தன.

இருவரும் அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர். இவ்விதம் இவர்கள் தங்கியிருந்த காலத்தில் அவ்விருவரும் இணைந்து பேணுபெருந்துறை, திலதைப்பதி என்னும் தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திருவீழிமிழலைக்கு வந்தார்கள். திருஞானசம்பந்தரும், அப்பர் அடியாரும் தினமும் தவறாது திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் அரணாரை, அழகு தமிழ் பாமாலைகளின் மூலம் வழிபட்டு வந்தார்கள்.

இரு ஞான ஒளிகளான திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் அடியாரின் வழிபாடுகளால் ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு சிவச் செல்வர்களை போற்றி பணிந்து பெருமிதம் கொண்டனர். அச்சமயத்தில் சீர்காழியில் இருந்து வந்திருந்த அந்தணர்கள், திருஞானசம்பந்த மூர்த்தியாரை காண வேண்டும் என்னும் விருப்பம் கொண்டனர். அதன்பின் அவர்கள் அனைவரும் திருவீழிமிழலையை அடைந்தனர்.

பின்பு அவர்களுடன் திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டு திருமடத்திற்கு சென்றார். திருஞானசம்பந்த மூர்த்தி இருக்கின்ற திருமடத்திற்கு வந்திருந்த அந்தணர்கள் அவரை வணங்கி திருத்தோணியப்பரை தரிசிக்க சீர்காழிக்கு வருமாறு அவர்களை வேண்டினர். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை இறைவன் விடை அளிப்பின் யாம் அங்கு வருவோம்...!! என்று மறுமொழி கூறினார்.

அன்றிரவு பிறைமுடி சூடிய எம்பெருமான் பிள்ளையாரின் சொப்பனத்தில் எழுந்தருளி யாம் திருத்தோணியில் வீற்றிருக்கும் கோலத்தை இத்திருவீழிமிழலையிலே உமக்காக காட்டுகின்றோம் என்று கூறி மறைந்தருளினார். பொழுது விடிந்ததும் திருஞானசம்பந்தரும், அப்பர் அடியாரும் மற்றும் அவர்களுடன் மற்ற அந்தணர்களும் எம்பெருமானை வழிபட கோவிலுக்கு வந்தனர். இருவரும் அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர்.

இந்த சமயத்தில் கருமேகம் பொய்த்தது. மழையின்றி எங்கும் வறட்சி ஏற்பட்டது. நாடெங்கும் விளைச்சல் இல்லாமல் போனது. மக்கள் தாங்க முடியாத பஞ்சத்தால் பெரிதும் துன்பம் அடைந்தனர். மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை நீக்கும் பொருட்டு அப்பரும், ஆளுடைப் பிள்ளையாரும் என்ன செய்வது? என்று அறியாது சிந்தித்தனர். இறுதியாக திருவீழிமிழலை திருச்சடை அண்ணலை மனதில் தியானித்த வண்ணமாகவே இருந்தனர்.

ஒருநாள் எம்பெருமான் இரு ஞானமூர்த்திகளுடைய கனவிலும் எழுந்தருளி உங்களை நம்பி தொழுது வழிபடும் தொண்டர்களுக்காக உங்களுக்கு தினந்தோறும் படிக்காசு தருகின்றோம். அந்த படிக்காசுகளை கொண்டு அடியார்களின் அவலநிலையை அகற்றுங்கள்... என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். மறுநாள் எம்பெருமான் கனவில் எழுந்தருளி கூறியதற்கு ஏற்ப கிழக்கு பீடத்தில் திருஞானசம்பந்தருக்கும், மேற்கு பீடத்தில் அப்பரடியாருக்கும் ‌படிக்காசுகளை வைத்திருந்தார்.

திருஞானசம்பந்தர் அப்பரடியாரோடு திருக்கோவிலில் புகுந்தபோது கிழக்கு பீடத்தில் காசு இருப்பதை கண்டார். பின்னர் மகிழ்ச்சியோடு அதை எடுத்து எம்பெருமானை எண்ணிய வண்ணமாக நாள்தோறும் சிவனடியார்கள் எல்லோரும் வந்து அமுது படைப்போமாக என்று பறைசாற்றி தெரிவித்தார். அதன்பின் தம்முடைய திருமடத்தில் வரும் அடியார்களுக்கு நெய், பால், தயிரோடு அன்னமிட்டு கொண்டு இருந்தார்.

இவ்விதமாக நிகழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் அப்பரடிகளது திருமடத்தில் மட்டும் தொண்டர்கள் உரிய காலத்தில் திருவமுது செய்து கொண்டு இருந்தார்கள். திருஞானசம்பந்தர் திருமடத்தில் திருவமுது செய்து முடிக்க சற்று காலதாமதமானது. இதை உணர்ந்த திருஞானசம்பந்தர், தமது திருமடத்தில் அமுது படைக்க காலதாமதம் ஆவதன் காரணம் என்ன? என்று அடியார்களிடம் வினவினார்.

அதற்கு அவர்கள் திருஞானசம்பந்தரை நோக்கி, நம்முடைய பொற்காசு நல்ல காசல்ல என்று கூறி பண்டங்களை கொடுக்க காலதாமதம் செய்கின்றார்கள். ஆனால், நல்ல காசு பெற்ற அப்பரடியாருக்கு வியாபாரிகள் வேண்டும் பொருளை விரைவிலேயே கொடுத்து விடுகிறார்கள் என்ற உண்மையை விளக்கி கூறினர்.


Share this valuable content with your friends