No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் பகுதி - 2 : சுந்தரமூர்த்தி நாயனார்...!! பகுதி 6

Apr 30, 2020   Ananthi   442    சிவபுராணம் 

இரவு பொழுதில் அந்தணர் வடிவத்தில் வந்தது யாராக இருக்கும்? என்ற எண்ணம் பரவையாருக்கு தோன்றியது. ஒருவேளை திருவாரூர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானோ? என்று எண்ணத் துவங்கியதும், வந்திருப்பவர் யார்? என்ற உண்மையை நிரூபிக்கும் பொருட்டு பரவையார் மாளிகைக்குள் பல வியக்கத்தக்க நிகழ்வுகள் யாவும் நடைபெற துவங்கின. அவைகள் யாவற்றையும் கண்டதும் பரவையாரின் மனம் திடுக்கிட்டது.

நான் என்றும் வணங்கும் எம்பெருமான் இவ்விடத்தில் எழுந்தருளியும் அவரை உணராமல் எவ்வளவு பெரிய பிழையை இழைத்து விட்டோம். என்னுடைய நாயகனின் மீது கொண்டுள்ள சினத்தால் எம்முடைய அகக்கண்களும், புறக்கண்களும் வந்திருப்பவர் யார்? என்று அறியாமல் இருக்கும் பொருட்டு நான் எம்பெருமானுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவிட்டேன் என்று எண்ணிய வண்ணம் நித்திரை கொள்ளாமல் வாயிலை நோக்கிய வண்ணமாக அமர்ந்திருந்தாள் பரவையார்.

வாயிற்படியை நோக்கி அமர்ந்திருந்த பரவையாருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் சூழ்நிலைகள் யாவும் அமையப் பெற்றன. பல காலம் தவமிருந்து கிடைக்க வேண்டிய அரும் காட்சியானது அவளுக்கு கிடைக்க தொடங்கியது. எம்பெருமானின் அருளால் இருளில் இருந்த பரவையாரின் இல்லமானது ஆதவனின் ஒளியை விட மிகுந்த பிரகாசமான ஜோதியில் இருப்பது போல் காட்சியளிக்க துவங்கியது.

அவ்விடத்தில் எம்பெருமான் எழுந்தருளியபோது பரவையார் எம்பெருமானை நோக்கி யாம் என்ன தவம் செய்தேனோ?...

அல்லது புண்ணியம் இழைத்தேனோ?

என்று புரியவில்லையே எம்பெருமானே...


என்று கரம் குவித்து, சிரம் தாழ்ந்து விழிகளில் நீர் வழிய மனம் அஞ்சி நின்று கொண்டிருந்தாள்.

பரவையாரே...!! என் தோழன் கொண்டுள்ள வேதனையை நீக்கும் பொருட்டு யாம் இங்கு மீண்டும் எழுந்தருளி இருக்கின்றோம். என் தோழன் என் மீது கொண்ட அன்பினாலும், யாம் அவனை ஆட்கொண்ட உரிமையாலும், அவன் கொண்டுள்ள துன்பத்தையும், பிணியையும் போக்குவது எனது கடமை ஆகும் அல்லவா?. இம்முறையும் முன்னர் போன்றே மறுக்காமல் யாம் உரைப்பதை கேட்பாயாக என்று கேட்டார் எம்பெருமான்.

எம்பெருமான் பரவையாரிடம், எனது தோழரான சுந்தரர் உமது பிரிவினால் சொல்ல முடியாத அளவிற்கு மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். அதற்கு பரவையார்...

எம்பெருமானே...!!

அந்தணர் உருவத்தில் இந்த ஏழையின் வீட்டில் எழுந்தருளிய பிறைசூடிய நாதனே...!!

என்னுடைய வீட்டிற்கு வந்த உங்களை நான் அறியாமல் செய்த தவறை மன்னித்து... பொறுத்தருள வேண்டும்...

இனியும் தேவரீருடைய மனம் புண்படாமல் நடந்து கொள்வேன்...

தங்களின் விருப்பம் போலவே தங்களுடைய தோழருடன் யாம் இணைந்து வாழ்கின்றோம்...


என்று உரைத்து நிலத்தில் விழுந்து வணங்கினாள் பரவையார்.

எம்பெருமான் பரவையார் உரைத்ததை கேட்டதும் மகிழ்ச்சியில், நங்கையே...!! உமது பண்பிற்கு நீ உரைத்தது மென்மேலும் மதிப்பை அதிகரிக்கட்டும் என்று உரைத்த வண்ணமாக அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார். எம்பெருமான் மறைந்த திசையை நோக்கி வணங்கிய வண்ணமாக நின்று கொண்டிருந்தாள் பரவையார். அவ்வேளையில் அவளது மனதில் இருந்த கோபங்கள், பிணிகள் யாவும் நீங்கி தனது நாயகனின் எண்ணங்கள் மனதில் ஆக்கிரமிக்க தொடங்கின. தனது நாயகனின் எண்ணங்களோடு அவ்விடத்திலேயே சிலையாக நிற்க தொடங்கினாள் பரவையார்.

எம்பெருமான் சுந்தரரின் முன்பு எழுந்தருளினார். சுந்தரர், எம்பெருமான் முன்பு வீழ்ந்து பணிந்து வணங்கி...

எம்பெருமானே...!!

இம்முறை நிகழ்ந்தது யாது?

சுபச்செய்திகள் கிடைக்குமா...?


என்ற எண்ணத்துடனும் வினவினார் சுந்தரர்.

எம்பெருமான் சுந்தரரை நோக்கி... சுந்தரா...!

பரவையார் உன்மீது கொண்டிருந்த கோபங்கள் யாவும் நீங்க செய்தோம்.

இனிமேல் பரவையாருடன் எவ்வித தடையுமின்றி முன்புபோல அவளுடன் இணைந்து வாழலாம்...


என்று உரைத்த வண்ணமாக அவ்விடத்திலிருந்து மறைந்தார்.

எம்பெருமானின் கருணையும், அருளையும் எண்ணி விழிகளில் நீர் வழிய... சுந்தரர்,

எம்பெருமானே...!!

என்னை ஆட்கொண்டவரே...

மாதொருபாகனே...

என்று பலவாறு துதித்த வண்ணமாக மகிழ்ந்த மனநிலையுடன் அவ்விடத்தில் என்ன செய்வது?


என்று புரியாமல் எதையும் அறிந்து கொள்ள இயலாத நிலையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது போல் ஆனந்தம் கொண்டார்.

இருள் நீங்கி ஒளி பிறப்பது போல... மதியானவன் மறைந்து ஆதவன் உதிக்கையிலேயே அடியார்களுடன் பரவையார் மாளிகையை நோக்கி புறப்பட்டார் சுந்தரர். தமது நாயகன் தம் இல்லத்தில் எழுந்தருள போகின்றான் என்பதை உணர்ந்த நாயகியோ அவர் வருவதற்கு முன்பே மாளிகையை நல்லவிதத்தில் அலங்காரம் செய்ய வேண்டும் என்று எண்ணி அதற்கு தகுந்தாற்போல ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தாள். சுந்தரரும் மங்கள இசை முழங்க மங்களப் பொருட்களுடன் எம்பெருமானின் துதித்த வண்ணமாக மாளிகைக்குள் செல்ல விரைந்தார்.

மாளிகையின் முன்பு சுந்தரரை வரவேற்க நின்று கொண்டிருந்த தோழியர்களின் முன் நின்று பரவையார் அவரை வரவேற்றாள். சுந்தரரோ பரவையாரின் இருகரங்களை பற்றிக்கொண்டு மாளிகைக்குள் சென்றார். முன்பு போலவே இருவரும் ஒன்றாக வாழத் துவங்கினர். சுந்தரர் வாழ்க்கை என்னும் கடலில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் எம்பெருமானின் பக்தி என்னும் ஓர் இடத்தில் அமர்ந்து அவரின் திருவடிகளை அடைவதற்கான வழிகளையும் மேற்கொள்ளத் துவங்கினார். பரவையாரும் எம்பெருமானை பணிவோடு வழிபட்டு வந்தாலும், தனது நாயகனையும் மனம் நோகாத வண்ணமாக பார்த்து வந்தாள்.

நாட்கள் செல்ல செல்ல எம்பெருமானின் நினைவாகவே தம்முடைய காலத்தை கடத்தி கொண்டிருந்தவர்களில் ஒருவர் கலிக்காமர். அக்காலங்களில் எம்பெருமானின் அடியார்கள் செய்த செயல்களையும், எம்பெருமானின் மீதுள்ள பக்தியையும் கேள்வியுற்று அதில் மெய்மறந்து மகிழ்ச்சி கொண்டிருந்தார். அவ்விதம் கேட்டு கொண்டிருந்த அடியார்களின் செயல்களில், சுந்தரர் தாம் விருப்பம் கொண்ட பரவையாரிடம் தூது போக எம்பெருமானே சென்றதை கேள்வியுற்றார்.

சுந்தரருக்காக எம்பெருமானே தூது சென்றதை கலிக்காமர் கேள்விப்பட்டது முதல் மிகவும் மனம் வருந்தினார். தேவர்களுக்கும், பிரம்மனுக்கும் மற்றும் திருமாலுக்கும் காணக்கிடைக்காத திருவடிகளை உடைய எம்பெருமானை தனது விருப்பத்திற்கு இணங்கி தூது செல்ல அவர் இசைந்தாலும், அடியாராகிய இவர் அவரை தூது அனுப்புதல் என்பது முறையாகுமா? இத்தகைய முறையற்ற செயலை செய்த பின்னரும் இவர் அடியார் என்று கூறிக்கொள்வதில் எவ்வித கூச்சமும், அச்சமும் இல்லாமல் இருக்கின்றாரே?... இவர் இதற்கு வெட்கப்பட வேண்டியது இல்லையா?... இது எவ்வளவு பெரிய பாவச்செயலாகும்?

இத்தகைய பாவச்செயல்களைப் புரிந்த அடியார்களைப் பற்றி கேள்வியுற்றதும் ஏன் என் உடலில் என் உயிர் இன்னும் நீங்காமல் இருக்கின்றது? என்று தன் மீது மிகுந்த சினம் கொண்டார் கலிக்காமர். அதைக் கேள்வியுற்றது முதல் மிகுந்த கவலையில் மூழ்கினார். செவிவழி செய்தி போல கலிக்காமர், தன் மீது கொண்ட கோபத்தை பற்றி கேள்வியுற்ற சுந்தரர் மிகவும் மனம் கலங்கினார். மருத்துவரின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த கலிக்காமரின் மனைவியானவர் வீட்டிற்கு வரும் பொழுது ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்த தன் கணவரைக் கண்டு என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார்.

பின்பு தனது கணவர் அடைந்த இடத்தை தானும் அடைய வேண்டும் என்று எண்ணி தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருந்தார். அந்த வேளையில் சுந்தரமூர்த்தி நாயனார் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை ஏவலர்கள் மூலம் அறிந்து கொண்டார் கலிக்காமரின் துணைவியார். பின் நிகழ்ந்த நிகழ்வுகளை மறைத்து சுந்தரமூர்த்தி நாயனார் சென்ற பின்பு தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி, அங்கு நிகழ்ந்தவற்றை எதுவும் உரைக்காமல் சுந்தரமூர்த்தி நாயனாரை வரவேற்க தயாராகி கொண்டு இருந்தார்.

மனைவியார் தனது இல்லத்தில் இருக்கும் யாவரையும் அழ வேண்டாம் என்று உரைத்து, பின்பு தம்முடைய பதியின் உடலை மறைத்து, சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொண்டு வரவேற்கும் பொருட்டுத் தங்கள் சுற்றத்தார்களை அனுப்பி வைத்தார். அவர்கள் சென்று சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொண்டு வணங்கினார்கள். தனது எண்ணத்தின் படியே தான் இழந்த தனது கணவனின் உடலை யாரும் காணாத வகையில் மறைத்து வைத்தார் கலிக்காமரின் மனைவி. பின்பு இல்லத்தை பூக்களாலும், வாசனைப் பொடிகளாலும் அலங்காரம் செய்வதில் ஈடுபடத் தொடங்கினார்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த கலிக்காமரின் துணைவியார் முன்னிலையில் சுந்தரமூர்த்தியும் தனது அடியார்களுடன் வந்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனாரை மலர்கள் தூவி வரவேற்றார் கலிக்காமரின் துணைவி. பின் கலிக்காமரின் வீட்டிற்குள் நுழைந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார் கலிக்காமரின் மனைவியார்.

சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்கு கட்டுப்பட்டவராய் அம்மையாருக்கு அருள் செய்தார். சுந்தரர் கலிக்காமரின் துணைவியாரை நோக்கி, அம்மையே...!! என் தோழர் கலிக்காமர் எங்கு இருக்கின்றார்? அவருக்கு இப்பொழுது துன்பம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் சூலை நோயினைக் குணப்படுத்த பரம்பொருளான எம்பெருமான் எனக்கு ஆணை பிறப்பித்தார். கலிக்காம நாயனாருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயை நீக்கவே தாம் இங்கு வந்துள்ளோம் என்றும், மேலும் அவருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி அவருடன் நட்புறவு கொள்ளவே என் மனமானது ஆவல் கொண்டு இருக்கிறது.

மேலும், காலம் தாழ்த்தாமல் அவர் இருக்கும் இடத்தை கூற வேண்டுமென்று உரைத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அவ்வேளையில் கலிக்காம நாயனாருடைய மனைவியார் சுந்தரரை வணங்கி எவ்விதமான நோயும் அவருக்கு ஏற்படவில்லை என்றும், அவர் தற்போது உறங்கிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். அம்மையாரின் ஏவுதலின்படி அங்கிருந்த அனைவரும் கலிக்காமருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறினார்கள். ஆயினும் சுந்தரனாருக்கு அவர்களின் கூற்றுகளிலிருந்து மனத்தெளிவு என்பது ஏற்படவே இல்லை.

ஏனெனில் பரமனே வந்து தம்மிடம் உரைத்து சென்றுள்ளார் எனில் இங்கு ஏதோ நடந்து உள்ளது? என்று தனது மனதில் எண்ணினார். பின்பு கலிக்காம நாயனாருக்கு உடல்நலம் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். ஆனாலும் யாம் அவரை நேரில் கண்டால் எனக்கு மனத்தெளிவும், நிம்மதியும் உண்டாகும் என்று உரைத்து அவர் எங்கே உள்ளார்? என்று வினாவினார். அங்கிருந்த அனைவரும் பலவாறு உரைத்தும் சுந்தரனார் கேட்காமல் அவரை நான் நேரில் கண்டே ஆக வேண்டும் என்று திடமாக நின்றார்.

சுந்தரருடைய எண்ணத்திற்கு முன்பு எதுவும் செய்ய இயலாத அன்பர்கள் வேறு வழியின்றி கலிக்காமர் இருக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் மடிந்து கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். குருதியின் மடியில் வீழ்ந்து இருந்த கலிக்காமரை கண்டதும் சுந்தரமூர்த்தி நாயனார் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்தார். குடலானது வெளிப்பட்டு உயிர் இன்றி கிடந்தவரை கண்டதும் உள்ளம் பதறிப்போன சுந்தரர், வேதனை தாங்காமல் கண்களில் நீர் பெருக எம்பெருமானைத் தியானித்தார்.

இது என்ன விபரீத செயல்...?

இவருடைய செயலைக் கண்ட பின்பு நான் மட்டும் ஏன் இன்னும் உயிருடன் வாழ்கின்றேன்?.

இனியும் இந்த உடலில் இந்த உயிர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை...


என்று உரைத்து கலிக்காமருக்கு அருகிலிருந்த வாளினை எடுத்து தனது உயிரைப் போக்கிக்கொள்ள ஆயத்தமானார் சுந்தரர். சுந்தரமூர்த்தி நாயனார் தன் உயிரை போக்கிக்கொள்ள ஆயத்தமான வேளையில் யாரும் எதிர்பாராத ஒரு அற்புதச் செயலானது நடைபெறத் துவங்கியது.

அதாவது, எம்பெருமானின் கருணை என்பது கடலை போன்றதாகும். அதில் அளவிட முடியாத முத்துக்களும், பவளங்களும் இருப்பது போல அவருடைய அருளால் உயிரிழந்த கலிக்காமர் உயிர்பெற்று எழுந்தார். உயிர்பெற்று எழுந்த அந்த நொடியில் நிகழ்ந்த யாவற்றையும் எம்பெருமானின் கருணையால் அறிந்து கொண்டார். பின்பு தனது உயிரை மாய்த்துக் கொள்ளப்போகும் சுந்தரரை கண்டதும் என்ன ஒரு அபத்தமான செயல்? என்று உரைத்து, அவரது கரங்களில் உள்ள வாளைப் பிடித்த வண்ணம் எழுந்து நின்றார்.

அடியாரே... இது என்ன ஒரு அபத்தமான முடிவுகள்? நான்தான் தங்களுடைய நட்பினை பற்றி அறிந்து கொள்ளாமல் உங்களின் மீது பகை கொண்டு என்னை நானே அழித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும், உங்களுடைய வாழ்க்கைக்கும் பெரிய இன்னலை உருவாக்கிவிட்டேன். எம்பெருமானின் அன்பிற்கு பாத்திரமான தங்களின் மீது பயனற்ற வகையினால் நெறி தவறி நடந்த என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி மனமும், முகமும் மலர்ந்திட... கலிக்காம நாயனாரை தழுவி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமர் உயிர்பெற்று எழுந்ததை கண்டதும் தேவியாரும் எண்ணில் அடங்கா மகிழ்ச்சி கொண்டார்.

சுந்தரர், கலிக்காமரின் துணைவியார் கொண்டுள்ள பக்தியைப் பெரிதும் போற்றினார். மானக்கஞ்சாரர் மகள் அல்லவா? என்றும் பாராட்டி குறிப்பிட்டார். எம்பெருமானின் திருவருளால் கலிக்காமரும், சுந்தரரும் நண்பர்களாகித் திருப்புன்கூருக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டு சிலநாட்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

எம்பெருமானும் சுந்தரர் பாடிய திருப்பதிகத்தில் மனம் மகிழ்ந்து அவருக்கு வேண்டிய பொன்னும், நவமணிகளும், பலவிதமான மணம் வீசும் பொருட்களும், விலை உயர்ந்த பட்டாடைகளும் காற்றை விட விரைந்து செல்லும் குதிரைகளையும் பரிசாக வழங்கி அருளினார். அப்பொருட்களை பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையிலிருந்து புறப்பட்டு திருவாரூரை அடைந்தார்.

சுந்தரர் திருவாரூரை அடைந்த காலத்தில் சேரமண்டலத்தை ஆண்ட சேரமான் பெருமாள் அவர்கள் நம்பியாரூரரின் பெருமையினை கேட்டு அதிசயமும், ஆச்சரியமும் அடைந்தார். பரம்பொருளான எம்பெருமானின் அருளை பெற்று இருக்கின்ற சுந்தரரை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலுடன் தில்லை சிற்றம்பலவரை தரிசித்து திருவாரூரை அடைந்தார்.

சேரமண்டலத்தை ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார் அவர்கள் தம்மை காண வந்து கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தார் சுந்தரர். பின் அடியார்கள் புடைசூழ சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தார். சுந்தரரை நேரில் கண்டதும் அவர் அடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். சுந்தரரும் அவரடிகளில் வீழ்ந்து இறைஞ்சித் தம் இருகைகளாலும் அவரைத் தழுவினார். பின்பு அவர்கள் இருவரும் ஒன்றிணைந்த வண்ணமாக அடியார்களுடன் இணைந்து எம்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலத்திற்கு சென்றனர்.

சேரமான் பெருமாள் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் ஆரூர் இறைவனைப் பணிந்து மும்மணிக்கோவை என்னும் நூலைப் பாடினார். சிறிது நேரத்திற்கு பின்பு சுந்தரர் சேரமான் பெருமாளை தம்முடைய மாளிகைக்கு வருமாறு பணித்தார். சுந்தரரின் அழைப்பை தவிர்க்க முடியாமல் அவருடன் பரவையார் மாளிகையை அடைந்தார். சுந்தரர் தம்முடைய துணைவியிடம் சேரமான் பெருமாளை பற்றி கூறினார். சுந்தரரின் துணைவியோ வந்திருக்கும் சேரமான் பெருமாளை சிறந்த முறையில் வரவேற்று உபசரித்தார். இருவரும் ஆரூர் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர்.

நம்பியாரூரர் பாண்டிய நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணி சேரமான் பெருமாளுடன் புறப்பட்டார். திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களைப் பணிந்து பாண்டிய நாட்டை அடைந்து திருப்புத்தூரை வழிபட்டு மதுரையை அடைந்தார்கள். திருவாரூர் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சில நாட்கள் சென்ற பின்பு சேரமான் பெருமாளை நினைத்து மலைநாடு செல்லத் திருவுள்ளம் கொண்டார்.

சோழ நாட்டைக் கடந்து, கொங்கு நாட்டை அடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கள ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகை ஒலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழ காரணம் யாது? என வினவினார். அவ்விடத்தில் இருந்தவர்கள் நிகழ்ந்தவற்றை எடுத்து உரைக்க துவங்கினார்கள்.

ஒரே பருவமாய் ஐந்து வயது நிரம்ப பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்து கொண்டு இருந்தபோது மடுவில் எங்கோ இருந்து வந்த முதலை ஒருவனை விழுங்கியது. மற்றொருவன் அந்த முதலையிடம் இருந்து தப்பித்து பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. அதன் பொருட்டு இவர்கள் வீட்டில் எழும் மங்கள ஒலி முதலை வாயில் அகப்பட்டிருந்த சிறுவனுடைய பெற்றோருக்கு, புதல்வனின் நினைவை ஏற்படுத்தியமையால் அவர்கள் புதல்வனின் எண்ணங்களால் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்டார்.

சுந்தரர் வேதியர் கூறியதை கேட்டதும் மிகவும் மனவேதனை கொண்டார். பின்பு குழந்தையை இழந்த பெற்றோர்கள் இல்லத்திற்கு சென்றார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரரின் வருகையை அறிந்து மனதில் இருக்கும் கவலைகள் யாவற்றையும் மறைத்த வண்ணமாக முகமலர்ச்சியோடு வரவேற்றனர். தாங்கள் இங்கு எழுந்தருளியது எங்கள் தவப்பேறே ஆகும் என மகிழ்ந்து கூறினார்கள்.

சுந்தரர் அவர்கள் மனதில் இருக்கும் துன்பத்தையும் மறந்து தன்னை வரவேற்பதில் மகிழ்ச்சி கொண்டார். பின் மடுவில் முதலை வாயிலிருந்து உங்கள் புதல்வனை அழைத்து தந்த பின்னரே அவிநாசி பெருமானை வழிபட வேண்டுமென்று உறுதி கொண்டார். சுந்தரர் பெற்றோர்களை நோக்கி உங்கள் மகன் விழுங்கிய முதலை இருக்கும் மடு இருக்கும் இடத்தை கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டு வந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி எற்றான் மறக்கேன் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.


உரைப்பா ருரையுகந் துகள்கவல்லார் தங்களுச்சியா
யரைக்கா டரவாவாதியு மந்தமு மாயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவிநாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே

என்னும் நான்காம் திருப்பாடலை பாடும்பொழுது முதலை கரையிலே தானாக முன்வந்து விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் மகனை தழுவியெடுத்தாள். தாயும், தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினார்கள். இந்நிகழ்ச்சியை கண்டோர் அனைவரும் சுந்தரரின் திருவருளை கண்டு வியந்தனர். சுந்தரர் முதலையின் வாயிலில் இருந்து வெளிவந்த சிறுவனை அழைத்து கொண்டு அவிநாசி திருக்கோவிலுக்கு சென்றார்.

அவிநாசியில் எழுந்தருளிய எம்பெருமானை வழிப்பட்ட சுந்தரர் தம் அன்புடைத் தோழர் சேரமான் பெருமாளைக் காணவேண்டி மலைநாட்டை நோக்கிச் செல்வாராயினார். சேரர்கோன் சுந்தரர் வருகையை அறிந்து அவரை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆணையிட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும், மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும் சுந்தரரை காணும் ஆர்வத்தில் சேரப் பெருந்தகையார் யானையின் மீது அமர்ந்து நகரத்தின் எல்லைக்கு சென்று சுந்தரரின் வருகைக்காக காத்திருந்தார்.

சுந்தரர் தமது அன்பர்களுடன் சிவயாத்திரையை முடித்த வண்ணமாக சேரர்கோன் எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையிலிருந்து இறங்கி விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி மனம் மகிழ்ந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சியைக் கொண்டிருந்த சிவ அன்பர்களும், மக்களும் இருவரையும் புகழ்ந்த வண்ணமாக புகழ் ஒலிகளை எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்பின் அரியணையில் இருத்தி அர்ச்சித்துப் போற்றினார். சுந்தரர், சேரமான் பெருமாளுடன் மலைநாட்டுத் தலங்களை வழிபட்டு மகிழ்ந்திருந்தார்.

முரசு ஒலிக்க...

சங்கு முழக்க...

பறை அலற...

மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ...


சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானையின் மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண்கொற்றக் குடையினைப் பிடித்தார். பின் அனைவரும் அரண்மனையை அடைந்தனர். சேரர்கோனும், சுந்தரரும் மாகோதை மாநகரில் எம்பெருமான் எழுந்தருளிய பல்வேறு சிவத்தலங்களை வழிபாடு செய்து பதிகம் பாடி பரமனை கண்டு களித்து வந்தனர்.

ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்து இறைவனை வழிபடச் சென்றார். திருக்கோவிலுக்குள் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்து உருகி நிலமிசை வீழ்ந்து அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும் என்னும் குறிப்புடன் தலைக்குத் தலைமாலை என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினார்.

எம்பெருமான் சுந்தரரை திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்து கொள்ள திருவுள்ளம் கொண்டார். நம்பியாரூரரை திருக்கயிலைக்கு அழைத்து வர தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி அருளினார். சிவபெருமானின் அருள் ஆணையை மேற்கொண்டு வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத்து திருக்கோவிலின் வாயிலை அடைந்தனர் தேவர்கள்.

இறைவனை வழிபட்டு கோவிலின் வாயிலை அடைந்த சுந்தரரை வணங்கி நின்று தேவர்கள் திருக்கயிலை மலைக்கு வருமாறு இறைவனருளிய கட்டளையை தெரிவித்தனர். தம்மை மறந்த வன்றொண்டர் இறைவன் அருள் ஆணையை ஏற்று கொண்டார் சுந்தரர். தேவர்கள் சுந்தரரை வலம் வந்து அவரை வெள்ளை யானையின் மீது ஏற்றினர்.

சுந்தரர் தம் உயிர் தோழராகிய சேரமான் பெருமாளை சிந்தித்து கொண்டே கயிலைக்கு புறப்பட்டு சென்றார். சுந்தரர் திருக்கயிலை செல்வதை திருவருள் ஆற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரை மீது ஏறி திருவஞ்சைக்களத்து திருக்கோவிலுக்கு சென்றார்.

வெள்ளை யானையின் மீது அமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியில் திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளை யானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. சேரமான் பெருமாளுடன் வந்த வீரர்கள் தம் அரசரை விசும்பிற் கண்ணுக்கு புலப்படுமளவு கண்டு, பின் வருந்தினர்.

சுந்தரர், தானெனை முன் படைத்தான் என்ற திருப்பதிகத்தை அருளி செய்தவாறு திருக்கயிலையை அடைந்து தென்திசை வாயிலை அணுகினார். சேரர்கோனும், சுந்தரரும் தத்தம் ஊர்திகளிலிருந்து கீழிறங்கி பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரர்கோன் உள்ளே செல்ல அனுமதியின்றி தடைப்பட்டு நின்றார்.

சுந்தரர், உள்ளே சென்று எம்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்று, சேரமான் பெருமாள் வருகையை விண்ணப்பித்தார். சிவபிரான் மகிழ்ந்து சேரமானை வரவிடுக என நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவரும் எம்பெருமானின் ஆணைக்கு பணிந்து சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து வந்தார். உள்ளே வந்த சேரர்கோன் சிவபிரானை வீழ்ந்து இறைஞ்சி நின்றார். எம்பெருமான் சேரர்கோனை நீ இங்கு நாம் அழையாமை வந்ததேன் என வினவினார். அதைகேட்ட சேரவேந்தர், அடியேன் ஆரூரர் கழல் போற்றி அவரை சேவித்து வந்தேன்.

திருவருள் வெள்ளம் இங்கு என்னை ஈர்த்து நிறுத்தியது. அடியேன் பாடிய திருவுலாப்புறம் என்ற நூலைச் செவிமடுத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். எம்பெருமானும் சம்மதிக்க சேரர்கோன் திருவுலாப்புறத்தை எடுத்துரைத்து அரங்கேற்றினார். பெருமான் அவரை நோக்கிச் சேரனே...! நீ நம்பியாரூரராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக என திருவருள் பாலித்தார்.

இறைவன் அருளிய வண்ணம் நம்பியாரூரர் அணுக்கத் தொண்டு புரியும் ஆலால சுந்தரராகவும், சேரமான் பெருமாள் சிவகணத் தலைவராகவும் திருக்கயிலையில் நிலைபெற்று பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்கள். நம்பியாரூரரை மணந்த பரவையாரும், சங்கிலியாரும் சிவபெருமான் திருவருளால் கமலினியாராகவும், அநிந்திதையாராகவும் உமையம்மைக்கு தாங்கள் செய்து வந்த அணுக்கத் தொண்டை மேற்கொண்டு மகிழ்ந்தார்கள்.


Share this valuable content with your friends


Tags

அனுகூலம் உண்டாகும் கோவில் கோபுரத்தை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எருக்கன் செடி பசு மாட்டை கனவில் கண்டால் vishagam அடமானம் விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? daily horoscope 02.07.2020 in pdf format பாடகர் நட்சத்திரம் தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? january 22 ஆவணி மாதத்தில் சொத்துக்களை பதிவு செய்யலாமா? வார ராசிபலன் (20.07.2020 -26.07.2020) PDF வடிவில் துளசி செடியை கனவில் கண்டால் பெண்களின் ராசியை அறிய அவர்களின் பிறந்த ஜாதகம் அல்லது ருது ஜாதகம் இறந்தவர்கள் அசைவம் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக தகவல் வளர்ச்சி தினம் 4ல் குரு பிறருக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?